அக்கரைப்பற்று இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று திங்கள்கிழமை (27) மாலை திறந்து வைத்து பாவணையாளர்களிடம் கையளித்தார்.
இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி 30 வருடங்களாக அவதிப்பட்டனர். இந்த விடயம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் அம்மக்களுக்கு குடிநீர் வசதியை வழங்கி அவர்களின் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
சுத்தமான குடிநீர் இன்மையால் தாம் 30 வருடங்களாக பல நோய்களுக்கு உள்ளாகியதாகவும் தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியதோடு அமைச்சருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கட்சியில் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரவரும், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயலாற்றுப் பணிப்பாளருமான ஹனிபா மதனி, அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், அக்கரைப்பற்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஜெ.என்.கரீம், திட்டமுகாமையாளர் (ஜெய்க்கா) பொறியியலாளர் எம்.எம். நசீர் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


