எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுபல சேனா அமைப்பின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன, 17 மாவட்டங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக விதாரந்தெனியே நந்த தேரர் போட்டியிடுவதுடன் களுத்துறை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக கலகொட அத்தே ஞானசார தேரர் போட்டியிடுகிறார்.
இதனைத் தவிர கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த வித்தனகே போட்டியிடுகிறார்.
பொதுபல சேனா அமைப்பின் பொது ஜன பெரமுன சார்பில் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மூன்று பிக்குமார் இடம்பெற்றுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பு முன்னைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பின்னணியில் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் பல எழுந்திருந்தன.
நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி வந்துள்ளது. குறிப்பாக இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவ சமயத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தன.
இதன் காரணமாக அளுத்கம, தர்கா நகர்ப் பகுதிகளில் பெரும் கலவரம் ஏற்பட்டதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதுடன் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில் இக்கலவரத்திற்கு காரணமானவராக கருதப்படும் கலகொட அத்தே ஞானசார தேரர் களுத்துறை மாவட்ட தேர்தலில் போட்டியிடுவதானது சமூகங்கள் இடையே அச்சத்தை தோற்றிவித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
