புனிதநோன்பு ஆரவராமான எமது ஏற்பாடுகளைவிட ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனிப்பட்டதும் அந்தரங்கமானதுமாகும்!

அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
னித குலத்திற்கான அழகிய வாழ்வு நெறியின் அடித்தளமே "தக்வா" ஆகும்.

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, (தக்வா ) பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். 
( அல்-பகரா :2:2)

"தக்வா" எனும் உள்ளார்ந்த இறையச்சம் ஒவ்வொரு ஆன்மாவிலும் ஆழமாக வேரூன்றுவதற்காகவே நோன்பு கடமையக்கப்பட்டுள்ளதாக அல்-குரான் சொல்கின்றது, ஏனென்றால் அத்தகைய ஆழமான இறையச்சம் உள்ளவர்களுக்கே அல்-குரான் நேர்வழிகாட்ட முடியும் எனவும் அல்-குரான் வலியுறுத்துகின்றது.

"விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." ( அல்-பகரா2:183)

உளத் தூய்மையை, உயரிய மானுட விழுமியங்களை அணிகலன்களாக பெற்றுத் தந்து மனிதனை "தக்வா" எனும் இறையச்சம் புனிதனக்குவதனால் தான் "தகவா எனும் ஆடை மிகச் சிறந்தது என்றும் அல் குரான் கூறுகின்றது, ஆடைகள் மனித நாகரீகத்தின் தனிபண்பாக இருந்தாலும், உயரிய பண்பாட்டு விழுமியங்களே அவனை மனிதருள் புனிதராக்கும் என அல்-குரான் வலியுறுத்திக் கூறுகின்றது.

"ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும்,உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி-இறையச்சம்) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக." (ஸுராதுல் அஃராஃப் 7:26)

முழு மனித சமூகங்களுக்கும் அல்லாஹ்வை அஞ்சி நட்க்குமாறே பணிக்கப்பட்டது:

"வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து (தக்வாவுடன்) நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்;. நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்." (ஸுரத்துல் நிஸா 4 : 131)

ஈருலக வாழ்வும் தக்வா ஒன்றின் மூலமே சிறப்பாக அமையும்:

(தக்வா) பயபக்தியுள்ளவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது "நன்மையையே (அருளினான்)" என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும்,பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது! (ஸுரத் அல்-நஹ்ல்16:30)

அல்-குரான் அறுப்பட்ட புனிதமிகு மாதத்திலே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, "தக்வா" உடையவர்களாக உங்களை மாற்று வதற்காகவே நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கே அல்-குர்ஆன் நேர்வழி காட்டும் என்றெல்லாம் அடிக்கடிபேசப்படுகின்றது.

தக்வா என்றால் "இறையச்சம்" என்று சுருக்கமாக கூறப்பட்டாலும் அது விரிவான கருத்தை உடையது அதாவது உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப மனிதன் நடந்து கொள்ளாது நன்மை தீமைகளை அறிந்து பேணுதலாக நடந்து கொள்கின்ற உளப் பக்குவத்தை மனிதன் அடைந்து கொள்வது "தக்வா" எனப்படும்.

உள நோய்களான பெருமை, பொறாமை, பேராசை, கருமித்தனம், நயவஞ்சகம், கோழைத்தனம்,அகம்பாவம் போன்ற இழிகுணங்கள், இச்சைகள் என்பவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து உயரிய குண நலன்களை விருரத்தி செய்து கொள்கின்ற பக்குவ நிலை தக்வா ஆகும்.

உண்மையில் உள்ளம் ஆன்மா சார்ந்த உள்ளுணர்வுகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே அளவிட முடியும் என்பதனால் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற ஒருவனால் மாத்திரமே எல்லா நிலைமையிலும் எங்கிருந்தாலும் அத்தகைய உள்ளார்ந்த ஆன்மீக பக்குவத்தை அடைந்து கொள்ளமுடியும் என்பதனால் "தக்வா" எனும் வசனத்திற்கு இறையச்சம் என பொருள்கூறப்படுகின்றது.

எல்லா நிலைமைகளிலும் பொறுமையுடனும், பேணுதலாகவும் இறையுணர்வுடனும் நடந்துகொள்கின்ற,இச்சைகளை எல்லாம் அல்லாஹ் ஒருவனின் திருப்பொருத்தத்தை மாத்திரம் நாடியே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்ற அலாதியான பயிற்சியையே புனிதரமழான் மனித குலத்திற்கு வழங்குகின்றது.

மனித குல விமோஷனத்திற்கான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தூதை; அல்-குரானை சுமந்துள்ள ஒரு சிறந்த உம்மத்தின் அனைத்து தரப்பினருக்கும், எல்லா சமூகங்களுக்கும் எதிர்பார்க்கின்ற உயரியமானுட விழுமியங்களை கட்டாயமாக கற்றுக்கொடுக்கின்ற மாதமே அல்-குரான் அருளப்பட்ட புனிதமிகுமாதமாகும்.

புனிதநோன்பு ஆரவராமான எமது ஏற்பாடுகளைவிட ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனிப்பட்டதும் அந்தரங்கமானதுமாகும்.
அது எங்களில் ஏற்படுத்துகின்ற தாக்கங்களை மாற்றங்களை எல்லாம்வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் இடைபோட முடியாது, அதனால்தான் நோன்பு எனக்குரியது அதற்கு நானே நானே கூலி வழங்குகின்றேன் மற்றொரு அறிவிப்பின் படி அதற்கு நானே கூலியாகின்றேன் என எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அருகாமையும் நெருக்கமும் விசேடமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கலாம் அல்-குரானை அதிகமதிகம் பாராயணம் செய்வதன் மூலம் அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சிகள் எடுப்பதன் மூலம் அடியான் அல்லாஹ்வுடன் உரையாட முனைகின்றான்.

இன்ஷா அல்லாஹ், ஒவ்வொருவரும் இன்றைய நோன்பு தினத்தை விடவும் சிறப்பாக நாளைய தினத்தையும் அவ்வாறே அதற்கடுத்த தினங்களையும் இயன்றவரை வெகுசிறப்பாக கழிக்க முயற்சிப்போமாக!

உங்கள் துஆக்களில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..!
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் நல் அமல்களை எல்லாம் அங்கீகரித்து பாவங்களை மன்னித்து நிறைவாக அருள்புரிவானாக.!(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -