மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயன் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் திங்கட்கிழமை காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
நல்லாட்சிக்கு அவமானம் எனும் தொனிப் பொருளில் தமிழ் தேசிய கூட்;மைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீரப்பு போராட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையாட்சியா நல்லாட்சியா?, மண்டூர் மதிதயனின் கொலைக்கு பின்னனி யார்?, மதிதயனின் படுகொலை ஏன்? எதற்கு? யார்?, நல்லாட்சியிலும் நாங்கள் தான் பலியா?, அரசே கொலையாளியை கைது செய்ய ஏன் தாமதம், அரசே படுகொலைக்கான தீர்வுதான் என்ன?, நல்லாட்சிக்கு அவமானம் வெட்கம் தலை குணிவு, அரசே கயவனை கண்டு பிடித்து கூண்டில் நிறுத்து, பட்டப் பகலில் படுகொலை படையினரின் கண் இருட்டா?, மைத்திரி ஆட்சியிலும் மறைமுக குண்டர்களா, அரசே முடிவு கிட்டும் வரை முடிவுறாது போராட்டம், அரசே ஆயுத கலாசாரத்தை தடுத்து நிறுத்து எமது பாதுகாப்பை உறுதி செய், ஆட்சி மாறினாலும் சூழ்ச்சி மாறவில்லை, மதியின் கொலைக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் ஒன்று திரண்ட ஆர்பாட்டகாரர்கள் தமது கோரிக்கைள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரை உரிய நடவடிக்கைகளுக்கான அரசாங்க அதிபரின் கையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றிக்கின்றது. இச்சம்பவம் 26.05.2015ல் காலையில் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மண்டூர் எனும் கிராமத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர் சச்சிதானந்தம் மதிதயன் ஒரு அரசாங்க உத்தியோகத்தர்.
இக்கொலை சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் சென்ற வாரம் ஒரு பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் கூட்டி அரசாங்கம் இக்கொலையின் சூத்திரதாரியை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டுமெனவும், இதற்காக ஒரு கால அவகாசமும் கொடுத்திருந்தோம். படுகொலை நடைபெற்று 2 வார காலமாகியும் இதுவரை சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கவலையடைவதுடன், உடனடியாகக் கொலை செய்தவர்களைக் கண்டு பிடித்து அவர்களை நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்றும் இன்று மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் அரசாங்கமும் பொலிஸாரும் சேர்ந்து இன்னும் தாமதியாது கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென்றும்; நீதிமன்றில் நிறுத்தப்பட்ட வேண்டுமென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆகவே அம்மணியவர்களே தயவு செய்து இத்தீர்மானத்தை அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்' என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ந.குகதர்சன், பேரின்பராஜா சபேஷ்-











