“மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்” (Change & Disaster Management) எனும் தலைப்பில் தேசிய ஷூறா சபை ஏற்பாடு செய்த முழுநாள் பயிற்சிப்பட்டறை 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் கொழும்பு 10, மாளிகாகந்தையில் அமைந்துள்ள AMYS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் பணியாற்றும் சமூகநல அமைப்புகளின் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களின் தொழிற்பாடு திறனைஉயர்த்துதல், அவற்றுக்கிடையிலான அன்னியோன்னிய புரிந்துணர்வை ஏற்படுத்தல், பல்வேறு தளங்களில் தொண்டாற்றும் அமைப்புக்களை ஒன்றினைத்த வலையமைப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகளை கருத்திற்கொண்டு தேசிய ஷூறா சபை இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
அந்தவகையில் தேசிய ஷூறா சபையின் அங்கத்துவ அமைப்புகள் மற்றும் இத்துறையில் ஆர்வமுள்ள ஏனைய பிரதான அமைப்புகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் .
இலங்கை மலாய் சம்மேளனம், இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, ஜாமாதுல் அன்சாருஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா,ஜம்மிஇய்யதுஷ் ஷபாப், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் (YMMA) , அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம், ஜமாஅத்துஸ் ஸலாமா, இலங்கை ஷரீஆ கவுன்சில்,கல்வி மற்றும் அபிவிருத்திக்கான முஸ்லிம் மாணவர் அமைப்பு, இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு, அகில இலங்கை முஸ்லிம் வாலிப சம்மேளனம் ஆகிய தேசிய ஷூறா சபையின் அங்கத்துவ அமைப்புகள் கலந்து கொண்டதுடன் இத்துறையில் முன்னணயில் இருந்து செயல்படும் அமைப்புகளான அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம் (CDMF) ஆகியவற்றின் பிரதிநிதிகள், மற்றும் துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் பொறியியலாளருமான சகோ. ரீஸா யஹ்யா, ஐ.நா கருத்திட்டங்களில் அனர்த்த முகாமைத்துவத் துறையில் பணியாற்றிய சமூக ஆர்வலர் சகோ. ஹில்று சித்தீக் ஆகியோர் வளவாலர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாற்றங்கள் மற்றும் அனர்த்தங்கள் என்றால் என்ன? அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு? அவற்றுக்கான வழிமுறைகள் எவை? என்பன சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இறுதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைப்புகள் மேற்கொள்ளும் அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடப்பட்டு இவ்வமைப்புகளுக்கு இடையிலான வலையமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.



