சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரிய உறுதியளித்து பல மாதங்களாகியும் அது இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் கல்முனைத் தொகுதியின் அரசியல் தலைமையும் தடையாக இருக்கின்றன” என்ற குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கட்டமைப்பு உருவாக்கத்துக்கு அமைச்சர் ஹக்கீமும் ஒரு தடைதான் என்று வாதாடுவோர் யாராவது இருப்பின் அவர்களை என்னுடன் ஆதார, ஆக்கபூர்வமாக வாதிடுவதற்கு வருமாறு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.
மக்கள் உணர்வுகளைத் தூண்டி அவற்றின் ஊடாகப் பொய்களை சந்தைப்படுத்த யாரும் முயற்சிக்கக் கூடாது. சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்குரிய கட்டமைப்பினை ஏற்படுத்துவதில் அமைச்சர் ஹக்கீம் தடையாக உள்ளார் என்பது பச்சையான பொய்யாகும். அந்தத் தேவை அமைச்சருக்கு இல்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஓரிரு பிரதேச அரசியல்வாதிகளின் பின்னணி இந்த விடயத்தில் உள்ளது என்பதனை பகிரங்கமாகவே நான் ஏற்றுக் கொள்கிறேன்.
சாய்ந்தமருதுக்காக தனியான உள்ளுராட்சி மன்றம் ஒன்று தேவை என்ற விடயம் என்று உணரப்பட்டதோ அன்றிலிருந்து இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் மனதளவில் விருப்பம் கொண்டிருந்தார் என்பதனை நான் நன்கு அறிவேன்.
கடந்த வருடம் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து அமைச்சர் ஹக்கீம் ஆராய்ந்த போது சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையின் தேவை தொடர்பில் தனது மன ஆதங்கத்தை அவர் மிக.. .மிக மெதுவாக வெளிக்காட்ட முயற்சித்த போது, அங்கிருந்த கல்முனை பிரதேச அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு தெரிவித்தமையை நான் நன்கு அறிவேன்.
அந்தப் பிரதேச அரசியல்வாதி இவ்வாறு கூறினார், “இந்தப் பிரச்சினை தொடர்பான சாய்ந்தமருது மக்களின் இன்றைய சூட்டைத் தணிப்பதற்கு கல்முனை நகர சபையின் கிளை ஒன்றினை சாய்ந்தமருதுவில் அமைத்தால் எல்லாம் சரியாகி விடும். சாய்ந்தமருது மக்கள் அடங்கி விடுவார்கள்” என்று கூறிய நபர் யார் என்பது எனக்குத் தெரியும்.
இவ்வாறு அந்த நபர் கூறியதும் அமைச்சர் ஹக்கீம் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். தனது கட்சியைச் சேர்ந்த மிக முக்கியமான ஒருவர் இந்தக் கருத்தைக் கூறியதால் அமைச்சரால் ஓர் அடிகூட முன்னோக்கி வைக்க முடியாது போய்விட்டது.
சாய்ந்தமருதுவுக்கு உள்ளுராட்சி சபை கிடைத்தால். தனது அரசியல் செல்வாக்கில் வீழச்சியடையும் என குறித்த அரசியல்வாதி அச்சமடைந்து காணப்பட்டார். ஏனெனில் இந்தக் கோரிக்கையின் பிதா மகனாக அப்போது சிராஸ் மீரா சாகிப் திகழ்ந்தமையே இதற்கு காரணமாகும். இதனால் மக்களின் ஆதரவு அவரைச் சென்றடையலாம் என்றும் சிந்திக்கத் தொடங்கினார்.
தனிப்பட்ட அரசியல் காய் நகர்த்தல்கள், அரசியல் சுயநல நகர்வுகள் ஓர் பிரதேசத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதனை இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான இடையூறுகள் ஏற்படாதிருப்பின் அமைச்சர் ஹக்கீம் அதனை அன்றே செய்திருக்கவும் கூடும்.
இது தவிர, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைத்து விட்டால் கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கும் வரிப்பணத்தில் பெரும் பகுதி வீழ்ச்சியடைந்து விடும் என்ற அச்சமும் வேறு தரப்பினர் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது. இதனால் கல்முனை அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை தோன்றலாம் என்ற கடுமையாக சிந்திப்பவர்களும் இந்த விடயத்தில் தடையை ஏற்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் உள்ளுராட்சி சபை தேர்தல் என்று ஒன்று வரும் போது கல்முனையின் எந்தப் பிரதேசத்திலிருந்தும் எவர் ஒருவர் போட்டியிட்டாலும் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளே வெற்றித் தராசின் படிக்கற்களாகும். உதாரணமாக கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவர் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டால் அவரது ஊரில் மேலும் பலர் களத்தில் இறங்கும் போது அவரது வாக்கு வங்கியில் அவரது ஊரிலேயே வீழ்ச்சி ஏற்படும் நிலையில் அதனைச் சரிக்கட்டி அவரை வெற்றி பெறச் செய்யும் சக்தி சாய்ந்தமருதுவுக்கு உண்டு.
இவ்வாறான நிலைமைகளும் இவ்வாறு சிந்திப்பவர்களுமே சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்கு தடையாக இருக்கிறார்களே தவிர அமைச்சர் ஹக்கீமை இந்த விடயத்தில் குற்றஞ் சுமத்துவது அபாண்டம், அநியாயம்.
இப்படிப்பட்ட சில வங்குரோத்து அரசியல் வியாபாரிகளும் இன்று அமைச்சர் ஹக்கீம் மீதே பத்துடன் தாங்களும் பதினொன்றாக பழியைப் போட முயற்சிக்கின்றனர். கோழி திருடிய கள்வனைக் கூடவே வைத்துக் கொண்டு வீதியால் சென்றவனை பிடித்துக் கட்டுவது மனு நீதியாகாது.
சிலவேளைகளில் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இந்த விடயத்தில் சூழ்நிலை கைதியாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் ஒருபோதும் குற்றவாளி அல்ல என்பதனை ஆணித்தரமாக என்னால் கூற முடியும். அனைத்துக்கும் காலம் பதில் சொல்லும்… உண்மைகள் அம்பலத்துக்கு வரும். இதனை சாய்ந்தமருது மக்கள் புரிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
சுட்டு விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உந்தன்
மார்பினைக் காட்டுதடா..
