கே.எம் றஸ்லான் (எம்.ஏ)-
தென்கிழக்கு உபவேந்தர் தெரிவில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று மூக்கை நுழைக்கின்றதா என்ற ஆபத்து உணரப்படுகின்றது.
உபவேந்தர் தெரிவுக்கு மூவரின் பெயர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு சிபாரிசு செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? வாக்கு இலக்கத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வதாயின் ஒருவரின் பெயரே சிபாரிசு செய்யப்பட்டிருக்க வேண்டும். தகைமையுடன், அனுபவம் மற்றும் பிற காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டு மூவரிலும் ஒட்டுமொத்தமாக சிறந்தவர் தெரிவு செய்யப்படுவார். அப்படிப் பார்க்கையில் எந்த வேட்பாளர் முதன்மை பெறுகிறாரோ அதற்கு வழிவிடப்பட வேண்டும், சாதாரண பாமரனும் இதையே ஒப்புவிக்கின்றனர்,
தகுதியானவருக்கே பதவி கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் தட்டிப் பறிப்பதாகவோ அன்றி அபகரிப்பதாகவோதான் அது அமைந்துவிடும். தட்டிக் கொடுக்க வேண்டிய சமூகமும் ஒருவரை காலால் தள்ளி விடுவதாக அமைந்துவிடக்கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
ஆனால் கவலையான விடயம் என்னவென்றால் இயக்கமொன்றுக்குரிய உப வேந்தராக ஒருவர் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார், ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பிடி ஓங்கப் போகும் பல்கலைக்கழகமாக அடிமட்டத் தொண்டன் வரையிலும் மனப்பதிவு ஏற்பட்டுள்ளமை ஒவ்வொருவருடனும் பேசும்போது தொனிக்கின்றது. இது ஆரோக்கியமற்றதுடன் அபாயகரமான நிலையுமாகும், ஆதாரமின்றியே தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு அடிப்படைவாத முகாம் என்று முத்திரை குத்தப்பட்டு இருக்கையில் தனிப்பட்ட ஒருவருக்கு இயக்கரீதியாக வெளிப்படையான அல்லது மறைமுகமான பிரச்சாரச் செயற்பாடு நடைபெறின் அது ஒரு ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.
பல இனத்தவரும் அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கலந்து வாழ்கின்ற இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை எந்தவிதமான தனியார் செல்வாக்கினையும் யாரும் வேறூன்ற விடவில்லை, ஆனால் அது கேள்விக் குறியாகிவிடுமா என்றே பலரும் அச்சப்படுகின்றனர்.
உப வேந்தரை தெரிவு செய்யும் பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர் நியமனம் முற்றாக அரசியல் கலந்தே நடைபெற்றது, ஒரு கட்சியால் நியமிக்கப்பட்ட கவுன்சில் உறுப்பினர் ஒருவர் மரணித்தபோது ஒருவருக்குரிய வெற்றிடம் அவரது ஈமச் சடங்கு நிறைவேறுவதற்கு முன்னரே மாற்றுக் கட்சியின் உறுப்பினரால் நிரப்பப்பட்டது, இவ்வாறு முன்திட்டமிட்ட வகையில் மறைமுக கரங்கள் செயல்களில் ஈடுபடுகின்றமை புலப்படுகின்ற நிலையில் இஸ்லாமிய இயக்கப் பின்புலமும் களமிறங்கினால் நிலைமை விபரீதமாகலாம் என்றும், பிரதேச அரசியல்வாதிகள் இதுவிடயத்தில் அவதானத்துடன் இருந்து முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென்றும் கோசங்கள் வலுக்கின்றன.
