பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஜனநாயத்தை வலுப்படுத்தும் செயலாகாது!

எஸ்.எம்.தல்ஹா-

லங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 ஆக குறைக்கவேண்டும் பாராளுமன்ற அமர்வுகளிலும் பாராளுமன்ற நடவடிக்கைளிலும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதில்லை. பாராளுமன்றத்திற்கான முன்னாள் செயலாளர் தம்மிக்க கித்துள் கொட கூறியதாக அன்மையில் செய்தி ஒன்றினை கேட்க கூடியதாக இருந்தது. இதிலிருந்து எனது விமர்சனத்தை தொடங்கமுடியும் என எண்ணுகிறேன். 

இலங்கையில் தற்போது பின்பற்றப்படுகின்ற பாராளுமன்ற ஜனநாயக முறைமை அல்லது வெஸ்ட் மினிஸ்டர் முறை பிரித்தானியர்கள் எமது முதுகுகளில் கட்டிய ஆட்சியல் மந்திரமாகும். இது பல் வேறு காலப்பகுதியில் பல உருவேற்றங்களின் அடிப்படையில் எம்மை ஆட்சி செய்வதை நாம் அவதானிக்கமுடியும். 

ஆனால் பிரித்தானியரிடமிருந்து முழுமையான சுதந்திரம் முதலாம் குடியரசு அரசியலமைப்பினூடாக 1972 ம் ஆண்டு உருவாக்கப்பட்டும் எமது பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளதா? இந்தக் கேள்விக்கான பதிலை பிரித்தானியாவின் ஏனைய காலனித்துவ நாடுகளோடு அல்லது ஜனநாயக கட்டமைப்பு வீரியமாக வளர்ச்சியடைந்துள்ள நாடுகளோடு ஒப்பிட்டு நோக்குவது சிறந்த வெளிப்பாடாகும்.

ஜனனாயக வளர்ச்சியில் நேரடி ஜனநாயக வழிமுறைகள் அதிகரித்த சனத்தொகையின் அபிலாசைகளே பூர்த்திசெய்வதற்கு போதாமையின் காரணத்தால் பிரதிநிகளினூடான சட்டவாக்கம் உலகில் தோற்றம் பெற்றது.

இச்சட்டவாக்க பிரிவு உலகில் பல் வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. குறிப்பாக பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளின் சட்டவாக்க துறை பாராளுமன்றம் என்றே அனேகமாக அழைக்கப்படுவதை எம்மால் அவதானிக்கமுடியும்.

இலங்iயின் சுதந்திரத்திற்கு பின்னரான சட்டவாக்க நடைமுறை 1948ம் ஆண்டின் சுதந்திரத்தின் பின்னரான பாராளுமன்றத்தின் தொடக்கத்தோடு ஆரம்பிக்கின்றது. இந்த சபை 101 உறுப்பினர்களை கொண்டு காணப்பட்டது ஆனால் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனிததர்மங்களை புறக்கணித்து தோட்டத் தொழிலாளர் சமுகத்தினரின் பிரஜா உரிமையை பறித்து அந்தஸ்தற்ற மனிதர்களாக ஆட்கள் என்றும் மற்றவர்களை பிரஜைகள் என்றும் வகுப்பதற்கு காரணமாகயிருந்தனர். 

பிரித்தானியரின் அடிமை முறையில் இருந்து விடுதலை பெற எழுந்த சுதேச சமுகம் சுதேச பொருளாதாரத்தின் உயிராக இருந்த தொழிலாளர்களின் உரிமையை பறித்தது. சுதந்திரத்திற்கு பின்னர் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்ட உருவாக்கத்தின் பாரம்பரியம் இவ்வாறுதான்; தொடங்கியது.

இலங்கையின் இரண்டாவது பாராளுமன்றம் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டார்ர நாயக்காவின் சுதந்திரக்கட்சியின் உருவாக்கத்தோடு தோற்றம் பெற்றது. இந்த பாராளுமன்றம் தனிச்சிங்கள மொழிச்சட்டத்தினை உருவாக்கியதுடன் பௌத்தமதத்தை அரச மதமாக மாற்றியது. இன்னும் பல இனவேறுபாடுகளை உருவாக்கக் கூடிய சட்;டங்களையும் அப்பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் உருவாக்கினார்கள்.

1972ம் ஆண்டு இலங்கையர்களால் இலங்கைக்கு என்று வரையப்பட்ட 1ம் குடியரசு யாப்பு சட்டவாக்கத்துறையை தேசிய அரசு பேரவை என அழைத்து அதன் உறுப்பினர்கள் தொகையை 168ஆக மாற்றியது இதன் போது உருவான தேசிய அரசு பேரவை சுதேச பொருளாதாரம் என்ற கோசத்துடன் மக்களை வாட்டி எடுக்கின்ற காணிச்சீர்திருத்தங்களை உருவாக்கியதுடன் முதன் முறையாக அவசரகால சட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டிப்புதைப்பதற்கு காரணமானது.

1978ம் ஆண்டின் 2ம் குடியரசு அரசியல் அமைப்பின் வருகையுடன் பாராளுமன்ற சட்டவாட்சி கேள்விக்குறியானதுடன் நிறைவேற்றதிகாரத்திற்கு தலையாட்டுகின்ற பொம்மை போன்று பாராளுமன்றம் மாற்றப்பட்டது. இருந்தபோதும் அதன் உறுப்பினர்களின் தொகையும் அசூரமாக 225 ஆக உயர்த்தப்பட்டது. 

இந்தப் பாராளுமன்றம் தொடங்கியதும் இனப்பிரச்சினை மிகவும் கூர்மையடைந்தது மாத்திரமன்றி இனவாதிகள் தஞ்சம் புகிர்கின்ற இடமாகவும் பாராளுமன்றம் மாறியது. சர்வஜன வாக்குரிமை அறியாமையால் மக்களால் பயன்படுத்தப்பட்டு பொருத்தமில்லாத பலர் பாராளுமன்றம் செல்கின்ற நிலமை உருவானது. 2000ம் ஆண்டு பாராளுமன்றம் கொண்டு வந்த நகல் அரசியல் அமைப்பை, வாதத்தால் முடிவுறுத்தாமல் தீயிடுகின்ற மரபினையும் உருவாக்கியது. 

ஈற்றில் பாராளுமன்றம் மக்களாட்சியின் மையம் என்பதை மறந்து ஜனாதிபதி எனும் ஒருவரிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கலரியில் இருப்பதற்கு ஒப்பான 18வது சீர் திருத்ததையும் கொண்டுவந்து நிறைவேற்றியது. 

19வது சீர் திருத்தத்தை நடைமுறைபடுத்தக் கூடாது என்பதற்காக படுக்கைகளுடன் பாராளுமன்றத்தில் தங்கிய உறுப்பினர்களின் மரபும் இப்போது பதிவாகியுள்ளது. இப்படியான அதிகரித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை மக்களுக்கு தேவையா? அல்லது வினைத்திறனுடன், ஐக்கியமாக, பன்மைத்துவ சமுகநிலமைகளை புரிந்து பாராளுமன்றத்தில் கருத்தாடலில் ஈடுபட்டு பொருத்தமான சட்டங்களை உருவாக்ககூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்களை வளர்ச்சிடைந்து வருகின்ற இலங்கை போன்ற நாட்டுக்கு அவசியமாகும். 

சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கின்ற விடயமாக ஒரு நாட்டில் காணப்படுகின்ற சனத்தொகையின் எண்ணிக்கையும் அவர்களில் வாக்காளர்களின் தொகையும் பிரதானமானதாகும். சில சமயங்களில் நிலப்பரம்பலும் கவனத்தில் கொள்ளப்படலாம்.

எமது அண்மை நாடும் உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் மதிக்கப்படுகின்ற இந்தியா 1238 மில்லியன் மக்கள் தொகையை தற்போது கொண்டுள்ளது. ஆனால் இந்திய பாராளுமன்றத்தின் அதிகாரம் பெற்ற லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகவே காணப்படுகிறது மானிலங்களின் சபையான இராஜ்ஜிய சபை உறுப்பினர்கள் 250 மொத்தம் 795 உறுப்பினர்களே இந்திய பாராளுமன்றத்தில் காணப்படுகின்றனர். குறிப்பாக 1947ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு வரைஞ்சர் குழுவின் தலைவராக இருந்த டொக்டர் அம்பேத்கார் லோக்சiபியன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகூடிய தொகை 552 ஆக காணப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தொகை 65 வருடமாக மாற்றமடையாமல் காணப்படுகிறது. 

மட்டுமன்றி குறைந்தது இந்திய மக்கள் தொகை 6 மில்லியனுக்கு ஒரு உறுப்பினர் வீதம் தெரிவுசெய்யப்படவேண்டும் என்றும் அரசில் அமைப்பு ரீதியாக வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி 1952ம் ஆண்டு 489 உறுப்பினர்களோடு ஆரம்பித்த இந்திய லோக்சபை 2014ம் ஆண்டு வரை 543 உறுப்பினர்களோடே காணப்படுகிறது.

இந்தியாவிற்கு அடுத்து சனத்தொகை கூடிய ஜனநாயக நாடாக ஐக்கிய அமெரிக்காவை குறிப்பிடமுடியும் இந்நாட்டில் தற்போது 318மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் 1910ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் 1913ம் ஆண்டுமுதல் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை 435 உறுப்பினர்களைக் கொண்டே காணப்படுகிறது. 

மேலும் 1929ம் ஆண்டின் நிரந்தர நியமனச் சட்டம் மூலம் கிராமிய நகர ஏற்றத்தாள்வுகளை இல்லாதொளிக்கும் முகமாக 435 உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறை செய்;யப்பட்டுள்ளது. சுமார் 100 வருடங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் பாராளுமன்ற ஜனநாயகம் வளர்ந்து செல்வதை நாம் அவதானிக்க முடியும்.

இலத்தின் அமெரிக்க நாடுகளில் மன்னர் ஆட்சியில் தொடங்கி சிலகாலம் இரானுவ ஆட்சியிலும் அனுபவம் கொண்டு பழமைபெற்ற ஜனநாயக நாடாக காணப்படுவது பிறேசிலாகும். தற்போது 203 மில்லியன் மக்கள் தொகையினை கொண்டு உலகின் மூன்றாவது மக்கள் தொகை கூடிய ஜனநாயக நாடகவும் காணப்படுகிறது. இதன் சட்டசபை 1930ம் ஆண்டு முதல் வளர்ச்சியடைந்து வந்தாலும் 513 பிரதிநிதிகளையும் 81 செனட்டர்களையும் கொண்டே இதுவரை காணப்படுகிறது. 

நவின ஜனநாயக முறைமையினை உலகிற்கு விதை தூவியதுடன், பல நாடுகளை தன்னுடைய காலானித்துவ பிடியில் வைத்து பல நூற்றாண்டுகள் ஆட்சிநடாத்தி ஜனநாயக விழுமியங்களை எச்சங்களாக அன்நாடுகளில் விட்டுச் சென்ற நாடாக பிரித்தானியாவே காணப்படுகிறது. 

உலகின் முதன்மையான ஜனநாயக நாடாகவும் பாராளுமன்றங்களின் தாய்பாராளுமன்றமாகவும் தன்னைக் காட்டிக்கொள்ளும் பிரித்தானியாவின் 900வருட பாராளுமன்ற செயற்பாடுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்ப்போமானால் 1707.11.06ம் திகதி நவீன பாராளுமன்றத்தின் முதலாவது சபை ஆரம்பித்தது முதல் இன்றைய டேவிட் கெமறுனின் பாராளுமன்றம் வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை மரபுரீதியான 845பிரபுகளையும் 650 பிரதிநிதிகளைக் கொண்டே காணப்படுகிறது. 

200 மில்லியன் மக்கள் தொகையும் சுமார் ஆயிரம் வருட பாராளுமன்ற செயற்பாடுகளினால்; கூட உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்நாட்டில் அதிகரிக்கவில்லை. இது போல் தான் கனடா, சுவிஸ்லாந்து,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

பிரித்தானிய மற்றும் ஐரோப்பியநாடுகளின் காலனித்துவ நாடுகளாக இருந்து இலங்கையுடன் சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற சில நாடுகளின் சட்டசபை நடவடிக்கைகளினூடாக அன்நாடுகள் இன்று உலகில் உயர்ந்து நிற்கின்றன. குறிப்பாக பாராளுமன்றம் ஜனநாயகத்தின ஆணிவேராக காணப்படுகிறது. மக்கள் இறைமையின் ஊற்றாக திகழ்கிறது. 

நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்கி நிதிவிடயங்களையும் கட்டுப்படுத்தி யாரும் பொறுப்பு சொல்லக்கூடிய இடமாக காணப்படுகிறது. இந்தியாவை எடுத்து நோக்கினால் சுதந்திரத்திற்கு பின்னர்வந்த ஒவ்வொரு பிரதமரும் நாட்டின் தேசியநலன்கருதியே செயற்பட்டிருக்கின்றனர். ஐம்பது வருட அரசியலில் உலகு இந்தியாவின் பக்கம் திரும்பிவருமளவு பொருளாதார விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் அவதானிக்கமுடியும் இவ்வளவுக்கும் அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஓத்துழைப்பு மிகவும் பிரதானமானதாக காணப்படுகிறது. 

1953 ம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற மலேசியா நாட்டினை பார்ப்போமானால் கைத்தொழில் ரீதியாக வியப்பிக்குமளவு முன்னேறியிருக்கின்றது அது போல மலேசியாவிலிருந்து பிரிந்து சென்ற சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர் லீக்குஆhன் இலங்கையின் கொழும்புத்திட்டம் மகாநாட்டில் 1950ல் கலந்து கொண்டபோது இலங்கை போல் சிங்கப்பூரை மாற்றுவேன் என்றார். லீக்குஆhன் எனும் தனிமனிதனால் பாராளுமன்றத்தின் வழிநடத்தலில் உலகம்வியக்கும் வகையில் சுற்றுலாத்துறையினூடாக சிங்கப்பூர் உலகே இன்று வென்றுள்ளது. 

இது போன்று தான் தாய்வான், தென்கொரியா, வியட்னாம் போன்ற நாடுகளும் வளர்ச்சியடைந்துள்ளன. இந்நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்கவேண்டிய தேவை கடந்த ஐம்பது வருட காலத்தில் ஏற்படவில்லை மாறாக இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்கவேண்டும் என்று குரல் கொடுக்கப்படுகிறது ஏன் அதிகரிக்க வேண்டும் இதனால் நாட்டுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது என்பது கோள்விக்குறியான விடயமாகும். மாறாக தீமைதான் ஏற்படப்போகிறது.

பாராளுமன்றத்;தின் உறுப்பினர்களை அதிகரிக்கின்ற போது 225 உறுப்பினர்களுக்காக ஜப்பான் அரசினால் அமைத்து வழங்கப்பட்ட பாராளுமன்றத்தினை உடனடியா உடைத்து மீள்நிர்மாணம் செய்யவேண்டும் இதனால் மக்களின் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்படும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு மாதமொன்றுக்கு வாகனச்செலவு, தங்குமிடவசதி, மின்சாரம் , தொலைபேசி, உதவியாளர்கள், பாதுகாப்பு செலவு, சம்பளம், காகிதாரிகள், வாகன அனுமதிப் பத்திரம் என்று மலை போன்ற செலவு வீண்விரயம் மக்களின் முதுகுகள் மீது வாழ்க்கை சுமையாக ஏற்றப்படப்போகிறது. தற்போது பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற கேலிக்கூத்துகள் இன்னும் அதிகரிக்கின்ற நிலமையை உருவாகும். தேவையான அளவு அரசியல் அதிகார பரவலாக்கல் முறைகள் இலங்கையில் செயற்பட்டிருக்கின்றன குறிப்பாக மாகாணசபை முறையினை குறிப்பிடமுடியும் இச்சபைகளுக்கு அதிகாரத்தினை வழங்கி சுயாதீனமாக செயற்படவிடுவதுதான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என கருதமுடியும்.

மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விடுத்து மாகாணத்தின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கின்றவகையிலும் பன்மைத்துவ சமுகத்தில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தும்முகமாகவும் பாராளுமன்றத்தில் இரண்டாம் சபை ஒன்று உருவாக்குவதை தற்போது தேவைப்படுகின்ற விடயமாகும். நடைமுறையில் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்யவேண்டும் முடியாத பட்சத்தில் நடைமுறையில் இருக்கின்ற உறுப்பினர்களின் தொகையை இரண்டாம் சபைக்கு ஏற்ற வண்ணம்; வகுக்க வேண்டும். அதன் படி தேர்தல் முறை சீரமைப்பினூடாக அரசியல் அமைப்பில் பாராளுமன்ற இரண்டாம் சபை உருவாக்கப்படவேண்டும். 

எமது சோல்பரி யாப்பிலிருந்த செனட்சபையும் 29ம் உறுப்புரையான சிறுபான்மை காப்பீட்டு நடைமுறையும் அரசியலில் மாற்றப்படாமல் இருந்திருந்தால் அரசியலில் அதிக சாதகமான இலக்கை இலங்கை கடந்தகாலத்தில் அடைந்திருக்கமுடியும். உலகில் இரண்டாம் சபை இருக்கின்ற எல்லாப் பாராளுமன்றங்களும் வினைத்திறன் கூடியதாவே காணப்படுகிறது. ஆகவே இலங்கையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட இரண்டாம் சபை உருவாக்குவதில் எல்லோரும் கவனம் செலுத்தவேண்டும்.

அன்மையில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று செய்தார் அங்கு தேர்தல் முறை மாற்றத்திற்கான 20வது திருத்தம் வருமா வாராத எனும் கேள்வி தொடுக்கப்பட்டது அக்கேள்விக்கான பதிலாக 20வருகிறதோ இல்லையோ ஊழல் வாதிகளும் குற்றவாளிகளும் அடுத்த பாராளுமன்றத்திற்கு வரமுடியாது என நல்லாற்சியின் வெளிப்பாடாக உறுதிப்பட கூறினார். 

ஆகவே பாராளுமன்ற உறுப்பினராக வருபவரின் தகைமைகளை எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி ஒழுங்கமைக்கவேண்டும் வாக்குரிமை என்பதும் சித்தசுயாதீனமற்றவர் எனும் தகைமைகள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு போதாதநிலையில் காணப்படுகிறது இன்னும் பலவிசேட தகைமைகள் கவனத்தில் கொள்ளப்படுவதன் மூலமே ஒழுக்கமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யமுடியும் இதன் மூலமே இலங்கையில் கனவான்களுக்கான அரசியலை கட்டியெழுப்பமுடியும். மேலும் பாராளுமன்ற சிறப்புரிமையை அரனாக பாவிப்பவர்களுக்கு பொருத்தமான ஒழுக்கக் கோவைகளை உருவாக்கி செயற்பட்டால் மாத்திரமே நல்லாட்சியில்; வளமான எதிர்காலத்தை பின்சந்ததியினருக்கும் உருவாக்கமுடியும்.

2015.06.08ம் திகதி அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சமர்பித்த உத்தேச அரசியல் அமைப்பின் 20வது திருத்த தேர்தல் முறை தொடர்பாக தொகுதி ரீதியாக 125உறுப்பினரும் மாவட்டரீதியாக 75 உறுப்பினரும் தேசியரீதியாக 25 உறுப்பினரும் தெரிவு செய்யப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை சிறுபான்மை கட்சிகளும் சிறிய கட்சிகளும் ஏற்காதநிலை காணப்படுகிறது. மேலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள எதிர்கட்சிஉறுப்பினர்கள் 250 உறுப்பினர்களாக உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவேண்டும் என்னும் நிலைபாட்டில் இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் இம்மசோதா சமர்பிக்கப்படும் போது எவ்வகையான திருத்தங்களை எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இலங்கையின் தேர்தல் தொகுதி சீரமைப்பு முறையில் கடந்தகாலங்களில் பல முறைகேடுகளும் பாரபட்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே தேர்தல் முறைமாற்றத்தில் அவசரமான மாற்றம் குறுகிய காலத்தில் தொங்கு பாராளுமன்றத்தில் நிறைவேற்றமுனைவது எதிர்மறைவான விளைவுகளை கொண்டுவருதுடன் 19வது திருத்தத்தில் அரசியல் அமைப்பு சபைக்கு நேர்ந்த நிலைதான்; தேர்தல் சீர்திருத்தமுறைக்கும் ஏற்படலாம். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -