லண்டனில் உலகத் தமிழர் பேரவையுடன் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பில் கடந்த இரண்டு நாட்கள் ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு லண்டனில் உலகத் தமிழ் பேரவையுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளதை அடுத்து உலகத் தமிழ் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து சந்திப்பு தொடர்பில் கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
லண்டனில் நடந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்குபற்றியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இலங்கைக்கு வெளியில் உள்ள இலங்கை மக்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களின் தேவை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் மக்கள் அமைப்புக்களுடன் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து இலங்கையின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டதாக அந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக விடுக்கப்பட்ட காணியில் 2000 குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்க நிதி உதவி பெற்றுக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விடயங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் புலம்பெயர் அமைப்புக்களும் தனி நபர்களும் கோரிக்கை முன்வைத்து வந்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர் அமைப்புக்களின் உதவியை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழ் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பை எரிக் சொல்ஹேம் ஏற்பாடு செய்ததாக கூறப்பட்ட போதும், அவர் அதனை நிராகரித்துள்ளார்.(ந)
