கிழக்கு மாகாணத்தில் தனியான நிர்வாக அலகொன்றை பெற்றெடுக்கும் போராட்டத்தை கைவிடவில்லை எனவும் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தனியான நிர்வாக அலகை ஏற்படுத்துவது தொடர்பான தமது யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொண்டு சென்றுள்ளதாகவும் உரிய நேரம் வரும் போது அது நிறைவேறும் எனவும் ஹக்கீம் கூறியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
நிர்வாகத்தை பரவலாக்கும் போது, மொழி ரீதியாக மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மாவட்ட செயலகங்களுக்கு செல்வதற்கு பதிலாக பிரதேச மட்டத்தில் அனை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பிருக்க வேண்டும்.
இதனால், புதிய நிர்வாக அலகை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவசியமான நேரத்தில் அதனை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
