எம்.ஜே.எம். முஜாஹித்-
அக்கரைப்பற்று கே.எப்.ஓ விளையாட்டு கழகத்தின் 9வது ஆண்டின் நிறைவினையொட்டி நடாத்தப்பட்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிகெட் சுற்றுப்போட்டி அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் தலைசிறந்த 30 விளையாட்டுக் கழகங்களைக் கொண்டு நடாத்தப்பட்டு, இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அக்கரைப்பற்று றஹிமியா மற்றும் அக்கரைப்பற்று நோ னேம் விளையாட்டுக் கழகங்கள் தெரிவாகின.
இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி தனக்கு விதிக்கப்பட்ட 05 ஓவர்களில் 62 ஓட்டங்களை பெற்று எதிரணிக்கு 63 என்ற ஒரு பாரிய இலக்கினை வெற்றிக்காக நிர்ணயித்திருந்தது.
இதில் அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகம் சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கலம் இறங்கிய டி.ஹஸ்லி மற்றும் வி.நஜாத் ஆகியோர் சிறப்பான அதிரடி ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று நோ னேம் விளையாட்டுக் கழகம் எதிரணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 32 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இச்சுற்றுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக் கழகத்தினருக்கு பெறுமதி வாய்ந்த வெற்றிக் கிண்ணமும் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் ஏ.ஜி.எம். அஸ்மி, டாக்டர் சமீம், பிறை எப்.எம் யின் அறிவிப்பாளர் நௌசாட் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் சிறப்பாட்டக் காரர் மற்றும் தொடரின் ஆட்ட நாயகனாக அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக் கழகத்தின் வி. நஜாத் தெரிவானார்.





