1மாதத்திற்கு மேல் சிறையில் இருந்து விடுதலையானார் பஷில் ராஜபக்ஷ!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பஷில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று (திங்கட்கிழமை) இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதிபதி சரோஜினி குசலா வீரவர்த்தன உத்தரவிட்டார்.

பஷிலுடன் கைது செய்யப்பட்ட திவிநெகும திணைக்களத்தில் அதிகாரிகளான நிஹால் ஜயதிலக, பந்துல திலகசிறி மற்றும் அமித ரணவக்க ஆகியோரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பஷில் மற்றும் திவிநெகும திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதன்போது, சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பஷிலுக்கு மூன்று மாத காலம் நாடாளுமன்றத்திற்கு விடுமுறையும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில் தமக்கு பிணை வழங்குமாறு கோரி, பஷில் உயர் நீதிமன்றத்தில் பிணை மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஆட்சி மாறியதையடுத்து பஷில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

அதற்கு பின்னர் விசாரணைக்காக இலங்கை அரசாங்கம் அழைத்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பஷில் நாடு திரும்பியிருந்தார். அதனையடுத்து மறுநாள் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பிணையில் வெளிவந்துள்ள பஷில், இனிவரும் நாடாளுமன்ற அமர்வுகளிலும் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பஷில் கலந்துகொள்வாரென தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷவின் பிணை தொடர்பில் அவரது வழக்கறிஞர் யு.ஆர்.டி சில்வா மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த வழக்கில் சகலவிதமான பரிசீலணைகளும் தற்பொழுது முடிவடைந்துள்ளதால், சந்தேகநபர்களை பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.

இதன்படி, குறித்த நான்கு பேரையும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஒவ்வொரு மாத இறுதியிலும் கருவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருவதுடன், இவர்கள் தமது கடவுச் சீட்டுக்களை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர் யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -