அக்கரைப்பற்று பிரதேசம் ஒரு தொகுதியின் கீழ் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் தொகுதி ரீதியிலான பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு என்றுமே ஒரு பாராளுமன்ற பிரதிநிதி பெற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் கூறினார்.
தொகுதிவாரியான தேர்தல் முறையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அக்கரைப்பற்று ஷுறா கவுன்சில் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுதியில் ஷுறா கவுன்சில் இணைத்தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான மௌலவி எம்.எச்.எம்.முனாஸ் தலைமையில் நடைபெற்ற போது 'அக்கரைப்பற்று பிரதேசம் ஒரு தொகுதியின் கீழ் உள்வாங்;கப்பட வேண்டும்' என்ற தீர்மானம் இங்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் இது தொடர்பாக மேலும் கருத்து தெருவிக்கையில்,
தற்போது 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய சில கட்சிகளும் கருத்துக்களை முன்வைத்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தொகுதி ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலின்போது அக்கரைப்பற்றுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதி பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் சுமார் 29000 வாக்குகளைக் கொண்ட இப்பிரதேசம் இரண்டு தொகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் பிரதான வீதியின் கிழக்கு பக்கம் பொத்துவில் தொகுதியையும் மேற்கு பக்கம் சம்மாந்துறை தொகுதியையும் கொண்டது. கடந்த காலத்தில் அரசியல் சுயநலன்களுக்காக அக்கரைப்பற்றை இரண்டாக பிரித்து இரு தொகுதிக்குள் உள்வாங்கச் செய்த விடயம் ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.
தற்போது அம்பாறைத் தொகுதியை இரு தொகுதிகளாக பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நாம் அறியக்கூடியதாகவுள்ளது. அம்பாறை, தமண, உகண பிரதேச செயலக எல்லைகளை வரையறுத்து அம்பாறைத் தொகுதி என்றும் பதியத்தலாவ, தெஹியத்தக்கண்டி, மகோயா ஆகிய பிரதேச செயலக எல்லைகளை வரையறுத்து மகோயாத் தொகுதி என்றும் செயற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அம்பாறை மாவட்ட செயலகத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொத்துவில் தொகுதிகளை எடுத்துக் கொண்டால் ஒரு தனிப்பிரதேசத்தில் 29000 வாக்குகளைக் கொண்ட கிராமம் என்றால் அது அக்கரைப்பற்று பிரதேசத்தையே கூறலாம். இப்பிரதேசம் இரு தொகுதிக்குள் கூறு போடப்பட்டுள்ளதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை ஒரு தொகுதியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயற்படுத்த வேண்டும். இவ்விடயம் நமது பிரதேசத்தில் இருபது வயதைக் கொண்ட இளைஞர் சமூதாயத்திற்கு செய்யும் நற்கருமமாகும்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தொகுதி முறையிலான தேர்தல் வருகின்ற போது அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு வாக்களிக்க முடியாத நிலை தற்போது உள்ளது இது அவர்களது அடிப்படை உரிமை மீறலாகும் நாம் அனைவரும் சேர்ந்து நமது பிரதேசத்தை ஒரு தொகுதியின் கீழ் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் இது விடயத்தில் வெற்றி கிடைக்காது போனால் உயர் நீதிமன்றத்திற்கு சென்றாவது நமது உரிமையினை வெற்றெடுக்க வேண்டும் என்றார்.
.jpg)
.jpg)