நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 24–ம் திகதி தமிழகத்தின் திருச்சி - எடமலைப்பட்டிபுதூர் அருகே இன எழுச்சி அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாநாட்டு திடலிலும், மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்த கட்சியினர் ஏராளமான விளம்பர பதாகைகளை வைத்து இருந்தனர். அந்த விளம்பர பேனர்களில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டு இருந்தது. இதையடுத்து பொலிஸார் அதனை இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர்.
மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுமார் 1½ மணி நேரம் பேசினார். அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தீவிரமாக ஆதரித்து பேசினார்.
இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்க மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் தற்போது இருக்கும் பாரதிய ஜனதா அரசும் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மாறாக 2021–ல் நிச்சயம் தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி அமையும் என்றும், அடுத்த 6 மாதத்தில் இலங்கையில் தமிழ் ஈழம் அமைய பாடுபடுவேன் என்றும் சீமான் பேசினார்.
இந்த நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக (128ஏ), இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது (153 ஏ), தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது (143), அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் (188) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் அவருடன் மேடையில் பேசிய 39 பேர் மீதும் எடமலைப்பட்டி புதூர் பொலிசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் சீமான் கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.