பெற்றுத் தந்துள்ள வெற்றியை மலினப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது-அமைச்சர் ஹக்கீம்

டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட நெடுங்காலமாக குடியிருக்க வீடுகளில்லாமல் தோட்டத்துரைமாரின் எடுபிடிகளாக அவர்களின் அடக்குமுறைகளுக்குள் சிக்கித் தவித்து வருவதாக குறிப்பிட்ட, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர் திகாம்பரமும், அவரோடு இணைந்து பயணிக்கும் இதர மலையகத் தலைமைகளும் பெற்றுத் தந்துள்ள வெற்றியை மலினப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாதென்றும் கூறினார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன்விழா தலவாக்கலையில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றபோது அதில் விஷேட அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு உரையாட்டும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஏனைய அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பெரும்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன்விழா நிகழ்விற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இந்த புரட்சிகரமான இயக்கத்திற்கு தானைத் தளபதிகளாக இருந்த வெள்ளையன், வேலுப்பிள்ளை போன்ற முன்னாள் தலைவர்களின் வழியில் புதிய யுகத்திற்கான ஊக்கத்தையும், தெம்பையும் வழங்கிவரும் எனது அமைச்சரவைச் சகா பழனி திகாம்பரத்திற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு, இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்த்துரைக்கின்றேன். இந்த பிரமாண்டமான மக்கள் கூட்டத்திற்கு நண்பர் திகாம்பரம் தலைமைத்துவம் வழங்கிக் கொண்டிருக்கிறார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னின்று பெற்றுத் தந்த வெற்றியின் வீரியத்தை குறைப்பதற்கு சிலர் எத்தணித்து வருகிறார்கள். மலையக மக்களாகிய நீங்களும் ஒன்றிணைந்து பெற்றுத் தந்த இந்த வெற்றியை மலினப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது. 

வருடக்கணக்காக சொல்லொண்ணா துயரங்களுக்கு மத்தியில் தொழிலாளராகிய நீங்கள் நீண்ட நெடுங்காலமாக குடியிருக்க வீடுகளில்லாமல் தோட்டத்துறைமாரின் எடுபிடிகளாக அவர்களின் அடக்குமுறைகளுக்குள் சிக்கித் தவித்து வருகிறீர்கள். உங்களது உரிமைகள் பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டுமுள்ளன. உங்களோடு உறவாடிக் கொண்டே, துறைமார்களுடனும் கபடத்தனமான தொடர்புகளை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

இன்று உங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இங்கு வழங்கப்படுவது, அடுத்து வரவுள்ள தேர்தலை மையமாக வைத்துத்தான் என்று எண்ணிவிடாதீர்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரேயே அததற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது.

மிக விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறப் போகின்றது. இந்த நிலையில் தொகுதிவாரித் தேர்தல் முறை, விகிதாசாரத் தேர்தல் முறை, இரண்டும் இணைந்ததாக கலப்புத் தேர்தல் முறை என்பன பற்றி பேசப்படுகின்றது. 

அவ்வாறு புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் பொழுது சிறுபான்மைக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவம் குறைந்து விடாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் நாம் மிகவும் கவனமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

பாராளுமன்ற தேர்தல் வருகின்றது என்பதற்காக ஒரு வித்தியாசாமான தேர்தல் முறையை திணிக்கக்கூடாது. 

புதிய தேர்தல் முறையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனை வென்றெடுப்பதற்கான முயற்சியில் நாங்கள் மனம் தளராது, அமைச்சர் திகாம்பரத்தோடும், இங்கு வருகைதந்துள்ள ஏனைய மலையகத் தலைமைகளோடும் இணைந்து அயராது பாடுபடுவோம் என்றார்.றி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -