எஸ்.எல்.எம்.பளீல்-
சீனிக்கைத்தொழிலை இந்நாட்டில் முழுஅளவில் விருத்தி செய்வதற்கான சகல முயற்சிகளும் நன்கு திட்டமிட்டு நவீன தொழில்நுட்பங்கள், இயந்திராதிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படல்வேண்டும்.
அதற்கான முயற்சிகளை புதிய நல்லாட்சி அரசாங்கம் எல்லா வழிகளிலும் மேற்கொள்ளும். ஆனால் அந்த நிலைமை ஏற்படும் வரையிலும் ஏழை விவசாயிகளின் ஜீவனோபாயமும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப் படல்வேண்டும். தனியார் கம்பனி சீனிக்கூட்டுத்தாபனங்கள் அவர்களின் இலாபத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை கசக்கிப்பிழிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். இம்மக்களின் இந்த அடிப்படைப்பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு முன்பு இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குறிப்பாக ஹிங்குரான தனியார் சீனிக்கூட்டுத்தாபனம், லங்கா தனியார் சீனிக்கூட்டுத்தாபனம், அம்பாரை மாவட்ட அரசஅதிபர், பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்' இவ்வாறு சி.ல.மு.காங்கிரஸ் தேசியத்தலைவரும் நீர்வழங்கல் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அம்பாரை மாவட்ட கரும்புக்காணி செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலொன்று தோட்டக்கைத்தொழில் இராஜாங்க அமைச்சில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றபோது குறிப்பிட்டார்.
இக்கூட்டம் தோட்டக்கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ. கே.வேலாயுதம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சுமார் 25வருடங்களின் பின்பு இவ்வாறான ஒருகூட்டம் கூட்டப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் சி.ல.மு.காங்கிரசின் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ.ஹசன் அலி, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.பைசல் காசிம், சி.ல.மு.காங்கிரஸ் உச்சபீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப்.எஸ்.எல்.எம்.பளீல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் மஹிலால், அம்பாரை மாவட்ட அரசஅதிபர், அம்பாரை மாவட்ட பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள், தனியார் கரும்புக்கூட்டுத் தாபன உயரதிகாரிகள் விவசாயப் பிரதிநிதிகள் என்று பெருமளவானோர் இவ்வுயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
(2)
தங்களது பிரச்சினைகளை நேரடியாக எடுத்துரைக்கும் நோக்குடன் ஆலங்குளம் விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம், தீகவாப்பி விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம், நுரைச்சோலை விவசாயிகள சங்கம், கள்ளியன்பத்தை மோறவிலாறு விவசாயப்பயிர்ச்செய்கை சங்கம் ஆகியவற்றின் மூவினத்தையும் உள்ளடக்கிய 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தமது மொழிகளில் அமைச்சர்களுக்கு எடுத்துக்கூறினர்.
இச்சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளின் சுமார் 2500 ஏக்கர் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
தம்மால் தமது முன்னோர்களால் 1952ம் ஆண்டு காலப்பகுதியில் காடுவெட்டி களனிகளாக்கி விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டுவந்த மேற்படி காணிகள் 1967ம்ஆண்டு காலப்பகுதியில் கல்லோயா அபிவிருத்திக் குழவினால் கரும்புச்செய்கை பண்ணுவதற்காக நிபந்தனைகளின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்டது. 30வருடங்களின் பின்பு மீண்டும் அவற்றை எம்மிடம் ஒப்படைப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆயினும் நிபந்தனைகள் எதனையும் நிறைவேற்றாது கரும்புச்செய்கை, கைத்தொழிலினையும் முறையாக செய்யாது எங்களது காணிகளை நெற்செய்கைக்கும் உட்படுத்தவிடாது எமது வாழ்வாதாரத்தை சீரழித்து வருவதாக விவசாயிகள் எடுத்துக்கூறினர்.குறிப்பாக ஆலங்குளம் விவசாயிகள் தமது 325ஏக்கர் காணிகளை 1990ம் ஆண்டுமுதல் நெற்சாகுபடிக்கு உட்படுத்தி வருவதாகவும், கரும்புச்செய்கைக்கு பொருத்தமற்றவை என அவற்றை மண்ஆய்வுகள் வெளிப்படுத்தியும்கூட எமது காணிகளில் எம்மை விவசாயம் செய்யவிடாது கல்லோயாப் பயிர்ச்செய்கை கூட்டுத்தாபனமும், மாவட்ட அரசஅதிபரும் தனியார்துறை கரும்புச்சாகுபடி முதலாளிகளுக்காக எம்மைப் பலவந்தத்தின் பேரில் கரும்பு செய்யுமாறு கோருவது எமது அடிப்படை உரிமையினை மீறும் செயலெனவும் ஆலங்குளம் விவசாயத்தலைவர்கள் அமைச்சர்களிடம் எடுத்துக்கூறினர்.
தனியார் கம்பனிக்காரர்கள் தொடர்ந்தும் காணிகளை கரும்புக்காக வைத்திருப்பதற்கு பலஉபாயங்களைக் கையாண்டு திட்டங்களைத்தெரிவித்த போது அமைச்சர் ஹக்கீம் அவை விவசாயிகளுக்கு பாதகமாக அமையுமென்பதை பலகோணங்களில் எடுத்துக்கூறி வாதிட்டு முறியடித்தனைக் காணமுடிந்தது என இணைப்புச்செயலாளர் பழீல் தெரிவித்தார்.ஒரு கட்டத்தில் வங்கிகளிலிருந்து 9மூ வட்டிக்கு பணத்தைப்பெற்று கரும்புச்செய்கையர்களுக்கு 18மூ த்தில் கணக்குப்போட்டு அறவீடுசெய்கின்றார்கள் என அமைச்சரிடம் விவசாயிகள் ஆதாரங்களுடன் கூறியபோது 'ஏழைவிவசாயிகளின் வாழ்வாதாரத்தில் வட்டிக்கடை நடாத்துகின்றீர்களா?'......என ஆத்திரத்துடன் அமைச்சர் அதிகாரிகளைப் பார்த்துக்கேட்டார் என்றும் பழீல் குறிப்பிட்டார்.
(3)
நுறைச்சோலைப் பகுதியில் ஒன்ரறை வருடங்கள் காலமெடுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும்; கரும்புச்செய்கையின் மூலம் 1கண்டத்திற்கு ரூ.45,000ஃ-க்கு மேல் நட்டமடையவேண்டி உள்ளதாகவும் ஆனால் அதேகாலப்பகுதிக்குள் எமதுகாணியை நெற்செய்கைக்கு உட்படுத்துவதன் மூலம் 2போகத்திற்கும் குறைந்தது ரூ.4 இலட்சம் இலாபமீட்ட முடியுமெனவும் ஆதாரபூர்வமாக சங்கத்தலைவர்கள் எடுத்துக் கூறினர்.விடயங்களை அவதானத்துடன் கேட்டறிந்த மாண்புமிகு நீர்வழங்கல் நகர அபிவிருத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீமும் விடயதான அமைச்சர் திரு.வேலாயுதமும் அம்பாரை மாவட்ட அரசஅதிபரை செய்கைபண்ணப்படாதிருக்கும் காணிகளில் நெற்செய்கை பண்ணுவதற்கான அனுமதியினை ஒருவாரத்தினுள் வழங்குமாறு பணிப்புரைகளை வழங்கினர் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜனாப்.எஸ்.எல்.எம்.பளீல்,BA மேலும் கூறினார்.

