எழுத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா?

அட்டாளைச்சேனை மன்சூர்-
ண்மையை எழுதினால் அரசியல் வாதிகளாலும், அடக்கு முறையாளர்களாலும் அடி உதைபடுகின்ற ஒருகேவலமான நிலைமை இன்றும் தொடர்கின்ற அவலமே காணப்படுகின்றது. சுதந்திரமான முறையில் எழுதமுடியாத ஒரு நிலை முடிவுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

உண்மையான நிலவரத்தை உண்மையான வடிவத்தில் கொண்டுவந்து நாட்டு மக்களுக்கு அறியச் செய்ய வேண்டிய கடப்பாடு எழுதுகின்றவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உண்டு. அதனை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இதனைத் தவிர்த்து ஒருவர்மீது கொண்டுள்ள கோபதாங்களை வைத்துக் கொண்டு பத்திரிகை வெளியிடுவதோ, எழுதுவதோ சரியான காரியமல்ல. அதற்காகவேண்டி உண்மையான விடயங்களை எழுதாமல், சமூகத்திற்கு முன்பு காண்பிக்காமல் இருந்தால் உண்மையான ஊடகவியலாளராக இருக்க முடியாது என்பது என்வாதமாகும.

இன்று எத்தனையோ பத்திரிகைகள் வெளிவந்தவண்ணமே இருகின்றன. வெப்தளங்களும் நிறைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு விடயத்தையும் ஒளிவுமறைவின்றியே காண்பிக்க வேண்டிய நிலையில் ஊடகங்கள் காணப்படுகின்றன. உண்மைத்தன்மைக்கு எதிராக எதனையும் எழுதவோ, பிரசுரிக்கவோ முடியாத நிலையில் உண்மையானதை எழுதுவது என்பது சிலவேளைகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திவிடுவதன் காரணமாக பல பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 

பலர் காணாமல் போய்விடுகின்றனர். இன்றைய புதிய அரசு நல்லாட்சிக்கான கதவினை திறந்து, 19வது அரசியல் சீர்திருத்தத்தினையும் அமுல்படுத்தியுள்ளது. அதில் சுயாதீனமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுயாதீனமான முறையில் உண்மையான விடயங்களை எழுத்துருப்படுத்துவதில் எவ்விதமான சிக்கலும் இருக்கமாட்டாது. ஏனெனில் கடந்தகாலங்களில் வெளியேறிய பத்திரிகையாளர்களை உள்நாட்டு வருமாறு அரசு அழைக்கப்பட்டுள்ளமை முக்கியமான விடயமாகும். ஆதலால் பத்திரிகை சுதந்திரத்தை அரசு திறந்த மனதோடு நடைமுறைப்படுத்துவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதுபோல தென்படுகின்றது.

இந்தவகையில், உலகப் பத்திரிகை சுதந்திர தினம் இன்று (03.05.2015) அனுஷ்டிக்கப்படுகின்றது. பத்திரிகைகள் உண்மைத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவின் பொது மகாநாடொன்றின் 26வது கூட்டத் தொடரில் விதைக்கப்பட்ட விதந்துரைகளுக்கு அமைவாக வருடந்தோறும் மே மாதம் 3ஆம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கும் மேலான்மையை 1993 டிசம்பரில் ஐ.நா.பொதுச்சபை ஏகமனதாக நிறைவேற்றியது. 

அதற்கு முன்னராக 1991ஏப்ரல் 29 தொடக்கம் மே 3வரையான காலப்பகுதியில் நமீபியாவின் வின்டோக் மாநகரில் சுதந்திரமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஆபிரிக்கப் பத்திரிகை உலகை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் ஆபிரிக்கப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பட்ட சுதந்திரப் பத்திரிகைக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் வருடாந்த தினமாகவும் மே 3ம் திகதி அமைந்திருப்பதாலும், இந்தப் பிரகடனத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தமை விசேட அம்சமாகும்.

பொதுவாக ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான மிரட்டலும், தணிக்கைகளும் இல்லாமல், உண்மைத்தன்மையான தகவல்களை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை வழங்குவதாக அமையும். உண்மையான ஊடக சுதந்திரங்கள் வெவ்வேறு வழிமுறைகளில் காணப்படுகின்றன. நேரடி நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நிலையிலும், சீனா, ஈரான், வடகொரியா, கியூபா, கிழக்காசியாவிலுள்ள சில நாடுகளில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அந்த நாடுகளின் அரசுகள் மேற்கொள்கின்ற நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றமையானது அதன் சுதந்திரத்தன்மையில் விழுந்துள்ள பாரிய அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுவதாக பத்திரிகைக்கான சுதந்திரமாக வெளியிடுகின்ற அமைப்புக்கள் கூறுகின்றன. 

இந்நிலையில் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசன பிரகடனத்தின் 19வது பிரிவு 'சுதந்திர கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், வெளியிடுவதற்கும், சகலருக்கும் உரிமை உண்டு. பிறரின் தடையின்றி தான் ஒரு கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், தேசங்களின் எல்லைகளைப் பொருட்படுத்தாது எவ்வகையான ஊடகங்களின் மூலமும் தகவல்களைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் உரிமையும் இதில் உள்ளடங்குகிறது' என்கிற வாசகத்தை இந்நாடுகள் கைக் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

ஒவ்வொரு ஊடகமும் குறிப்பாக பத்திரிகைகள், மக்களின் நலன்களிலும், நாட்டின் உண்மைத்தன்மையான விடயங்களிலும் பக்கச்சார்பற்ற முறையிலும், தேசங்கள் மத்தியில் செம்மையானதும் சமநிலையானதுமான செய்திகளின் சுதந்திரமான பரிமாற்றத்தையும் உலகின் சகல பாகங்களிலும் இருந்து வருகின்ற தகவல்களின் சரியான தன்மையையும் நேர்மையையும் அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையையும் மேம்படுத்துவதே இத்தினத்தின் அடிப்படையான அம்சமாகக் கொண்டுள்ளது. 

அந்த அடிப்படையில் பத்திரிகைகள் சுதந்திரமான கருத்துக்களை பக்கசார்பின்றி தங்களுடைய வாசகர்களுக்கு விருந்து படைக்க வேண்டும். இதன்போது உண்மைத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயற்பாடுகளும் உலகின் பல நாடுகளில் பத்திரிகைத்துறைக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. உண்மைத் தன்மையானதும், வாசகர்களின் அபிமானத்திற்குரிய பத்திரிகைகளை எரித்தாலும், உடைத்தாலும் நாம் மீண்டு கொண்டே இருப்போம் என்பதையும் உலகிற்கு காண்பித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

காந்தியடிகள் கூறும்போது 'அரசியல் ஊழல்களைக் குறிப்பிடுவதும் பத்திரிகைத் தர்மத்தின் அவசியமான பகுதிகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. அதுவும் பெதுஜன அபிப்பிராயத்தை சிருஷ்டிப்பதற்கு வேண்டிய சாதனங்களில் ஒன்றாகும்' என்று கூறியிருந்தார். அந்த அடிப்படையில் அரசியல் சார்பான ஊழல்கள் மாத்திரமன்றி மக்களுக்கு நன்மையளிக்கும் அனைத்துவகை ஊழல்களையும் பத்திரிகைகள் சுதந்திரமான முறையில் வெளியிடவேண்டும். அப்போதுதான் யாதார்த்தமான பத்திரிகை என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். சில பத்திரிகைகள் தங்களுக்கு வாசியான வகையில் எழுத்துக்களை எழுதுகின்றன.

நாட்டு நடப்புக்களின் உண்மைத் தன்மையான விடயங்கள் மகாஜனங்களைச் சென்றடைய வைப்பதில் பத்திரிகைக்கு பாரிய கடப்பாடுகள் உண்டு. அதனைத் தவிடுபொடியாக்கும் நிலையும் காணப்படுகின்றது. ஆதலால்தான் 'பத்திரிகை சுதந்திரம்' என்பதற்கான விளக்கத்தை நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அதற்கு முன், அது எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

சட்டத் தடைகளோ, அறத் தடைகளோ குறுக்கிடாமல் விருப்பப்படி எழுதி வெளியிடுவது எனச் சிலர் தவறாக எண்ணுகின்றனர். வேறு சிலர் அரசின் அடிப்படையான கட்டுப்பாடுகளும் விளம்பரதாரர் தலையீடுகளும் இல்லாதிருத்தல், நிதிக்காகப் பிறரைச் சாராதிருத்தல் ஆகியவையே சுதந்திரம் எனவும் நினைக்கின்றனர் (இதழியல்கலை, ப. 24). ஆனால் பத்திரிகைச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் கூடிய உண்மையான சுதந்திரத்தைக் குறிப்பதாகும்.

அதாவது, சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படும் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்தியாவின் முதல் பத்திரிகைக் குழு 'பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துகளைக் கொண்டிருக்கவும் செய்திகளைப் பெறவும், அச்சிட்டு வெளியிடவும் இருக்கின்ற சுதந்திரம்' என்று பத்திரிகைச் சுதந்திரத்தை விளக்குகின்றது (இதழியல்கலை, ப.24-25). 'பத்திரிகைகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இன்றி செய்திகள் தொகுக்கப்பட வேண்டும். எவ்வித இடையூறுமின்றி அவை செய்தித்தாள் அலுவலகங்களை அடையவேண்டும். அச்சான செய்திகள் எவ்விதத் தடையுமின்றி மக்களிடம் பரவ வேண்டும். பத்திரிகைகளுக்கான சுதந்திரம் இவ்வளவுதான்' என்கிறார் இரா.கோதண்டபாணி (இதழியல், ப.214).

கொலம்பியாவிலுள்ள மிசௌரி பல்கலைக்கழகத்திலிருக்கும் சுதந்திரத் தகவல் மையம் 1958 - இல் பத்திரிகைச் சுதந்திரத்தின் பிரிவுகளாக பின்வருவனவற்றை எடுத்துறைக்கின்றது. 
1. செய்திகளைப் பெறுவதற்கு உரிமை.
2. முன்கட்டுப்பாடின்றி அச்சிடும் உரிமை.
3. தண்டனை பற்றிய அச்சமோ, அச்சுறுத்தலோ இன்றி அச்சிடும் உரிமை.
4. தகவல் தொடர்புக்கு வேண்டிய வாய்ப்புக்களையும் சாதனங்களையும் பெற்றுக் கொள்கின்ற உரிமை.
5. சட்டப்படி செயல்படும் அரசோ சட்டத்திற்குப் புறம்பாக மக்களோ தலையிடாமல் செய்திகளைப் பரப்புகின்ற உரிமை.

இன்று குறிப்பாக இலங்கையைப் பொறுத்தளவில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளிவந்த வண்ணம் இருகின்றன. இனரீதியாகவும், சமயரீதியாகவும், மொழிரீதியாகவும் அவை வெளிவருகின்றன. குறிப்பாக தமிழ்பேசும் மக்களிடையே பத்திரிகைக் கலாசாரம் வேரூண்டியுள்ளதாகவே தெரிகின்றது. பிராந்தியரீதியிலும், தேசிய ரீதியிலும் பல புதிய பத்திரிகைகள் சுதந்திரமான முறையில் வெளியாகின்றன. அவை திடீரெனக் காணாமல் போவதும் உண்டு. பலவித நவீன ஊடகங்கள் வெளியாகினும் பத்திரிகைத் துறைக்கு என்றுமே தனி மதிப்பும், மரியாதையும் உண்டு என்பதனால்தான் பல பத்திரிகைகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. 

அவற்றில் மக்களின் அன்றாட அறிவுப் பசிக்குத் தீணியாக அமைகின்ற பத்திரிகைகள்தான் முதலிடம் வகிக்கின்றன. இன்று தங்களை இனங்காட்டிக் கொள்ள தானும் ஒரு பத்திரிகையாளன் என்பதற்காக வெறுமனே கமராவும், இன்னொருவர் எழுதுவதை காப்பியடித்து எழுதுவதிலிருந்தும் விலகி உண்மையான தேடல்கள், விமர்சனங்கள், மக்களின் களத்திலிருந்து அறிந்து பக்கச்சார்பற்றவாறு செய்திகளை, அறிக்கைகளை எழுதுதல் வேண்டும்.

சிலர் அரசியல்வாதிகளின் காலில் விழுந்தாவது பத்திரிகைக்கு செய்தியாளர் என்கிற பட்டத்தைப் பெற்று அவர்களின் நன்றிக்காக அவர்களையே சுற்றி எழுதுவதும், அவர்கள் எந்த நிகழ்வுக்குச் சென்றாலும் அதனை படம்பிடித்துக் காண்பிப்பதும்தான் பத்திரிகையாளனின் தொழில் அல்ல என்பதை உணர்ந்து, வாசகர்களின் அறிவுத்தாகத்திற்குத் தீனியாக தங்களுடைய பிரதேசத்தின் பிரச்சினைகளை முழுமையாக அரசியல் சாயம் பூசாதவாறு நியாயத்துடன் எழுதுவதும் கடமைப்பாடாகும். 

உண்மையான பத்திரிகையைப் பற்றி ஜே.பர்லின் எனும் அறிஞர் 'செய்திப்பத்திரிகை மக்களின் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. மக்களில் பாதிப்போர் இதைத்தவிர வேறு எதையும் படிப்பதில்லை' என்று கூறுகின்றார். அனேகமானோரின் அறிவுப் பசியை தீர்க்கும் முயற்சியில் சுதந்திரமான முறையில் அனைத்தையும் தாங்கிய பத்திரிகைகள் இன்னும் இன்னும் வெளிவரவேண்டும் என்பதே இன்றைய பத்திரிகைச் சுதந்திர நாளில் வாசகர்களின் விருப்பமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -