19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை, பற்றி தான் அறியாதிருக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான சட்டங்களை இயற்ற மிகவும் தகுதியானவர்கள் அந்த நாட்டின் பிரஜைகள் மட்டுமே என தீர்மானித்தமையில் எந்தவொரு தவறும் இல்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேபோல் மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கிய நிதி நிறுவனத்தில் வௌிநாட்டவர் ஒருவர் பிரதானியாக இருப்பது அவ நம்பிக்கை எனவும், அதற்கு இலங்கையர் ஒருவரே தகுதியானவர் எனவும் ஜீ.எல்.பீரிஸ், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறினார்.
அத்துடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊழல் மிக்க தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த தேர்தல் முறை மாற்றத்தையே 100 வீதமான மக்கள் விரும்புவார்கள் எனவும் பீரிஸ் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.(ந)
