அபு அலா, றியாஸ் இஸ்மாயில்-
அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை கண்டித்து நேற்று திங்கட்கிழமை (25) நடைபெறயிருந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்துவதற்காக மைதானத்தில் கொட்டப்பட்ட மணல் மற்றும் கற்கள் அகற்றப்படாமலும் தோண்டப்பட்ட பல குழிகள் சீர் செய்யப்படாமலும் காணப்படுகின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் விளையாடுவதற்கு மிகுந்த கஸ்டங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.
இது காலவரை மைதானத்தை சம்மந்தப்பட்ட தரப்பினர் செப்பனிடாததனால் இதனை கண்டித்து நேற்று அக்கரைப்பற்று மாநகர சபைக்கெதிராகவும் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவதற்கு ஒரு சில விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மேற்கொண்ட நடவடிக்கையினை மாகாண சபை உறுப்பினர் தவமின் தலையீட்டினால் இடை நிறுத்தப்பட்டன.
பின்னர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த சம்மந்தப்பட்ட தரப்பினரை மாநகர சபைக்கு அழைத்து மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மிக்கிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்ற பின்னர் சில தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
மைதானத்தில் காணப்படும் மணல் மற்றும் கற்களை அகற்றி அங்கு காணப்படும் குழிகளை நிறப்பி செப்பனிடுதல், மைதானத்தை சுற்றி காணப்படும் தனியார் தொழில்சாலைகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு மைதானத்தக்குரிய நிலத்தை விடுவிப்புச் செய்தல், மைதானத்திற்கு சொந்தமான காணியில் தனியார் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இடங்களைவிட்டு வெளியேற மாநகர சபை நடவடிக்கை மேற்கொள்ளல், மைதானத்தினை சுற்றி வர எல்லையினை நிரணயம் செய்தல் போன்றவை தீர்மானங்களாக எடுக்கப்பட்டன.
இதேவேளை சம்மந்தப்பட்ட கழகங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் மகஜர் ஒன்றினை வழங்குமாறு ஆணையாளர் அஸ்மி கேட்டுக்கொண்டார்.




