முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயமிழைக்கப்பட்டபோது சட்டத்தை அமுல்படுத்தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனாதிபதி இன்று முஸ்லிம்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதானது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது என மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்க்கப்பட்டிருந்த போது, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டபோது இதனை தவிர்த்து வந்த அவர் இன்று முஸ்லிம்களை சந்திக்கத் திடீரென ஞானம் பிறந்தமைக்கு காரணம் என்ன? என்றும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு அதிக அநியாயம் இழைக்கப்பட்டது ஒல்லாந்தர் காலத்திலாகும். அவர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது கொழும்பிலுள்ள முஸ்லிம்களை விரட்டினர். அத்துடன் வர்த்தகத்தை சீர்குலைத்தனர். இப்படி பல அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன.
இந்த இருண்ட யுகத்திற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே அதிகமான அட்டூழியங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஏவி விடப்பட்டன. இந்தத் தீய சக்திகளுக்கு பின்னால் அப்போதைய அரசாங்கம் இருந்தமையே மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருந்தது முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 30 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் போர்க்கொடி தூக்கினர். முக்கியமாக தம்புள்ளை, கிராண்பாஸ், ஜெய்லானி பள்ளிவாசல்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் முக்கிய வர்த்தக நிலையங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் மேலாக அளுத்கம, தர்கா நகர், பேருவளை, துந்துவ மற்றும் வெலிப்பனை பகுதிகளில் இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு முஸ்லிம்களை அச்சமடையச் செய்தனர்.
இவ்வாறு பல அராஜகங்களை பொது பல சேனா, சிங்கள ராவய, ராவணா பலய உள்ளிட்ட பௌத்த பேரினவாத அமைப்புகள் முன்னெடுத்தபோது நாட்டின் சாதாரண சட்டங்களை கூட அமுல்படுத்தாது முன்னாள் ஜனாதிபதி மௌனம் காத்தார் 'இவரின் இந்த அராஜகங்களுக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி முடிவுகட்டினர். இந்நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்க அவர் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவர் செய்த ஊழல் மோசடிகளும் இனவாத செயற்பாடுகளும் அவரின் அரசியல் மீள் வருகைக்கு தடையாக இருக்கின்றன.
இந்நிலையில் அவருடைய காலத்தில் பல சலுகைகளை அனுபவித்து வந்த சில முஸ்லிம்கள் இன்றும் மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் இருந்து செயற்படுகின்றனர். இது முஸ்லிம் சமூகத்தை சந்திக்கும் நிகழ்வல்ல. மஹிந்தவின் காலத்தில் சலுகைகளை அனுபவித்தவர்களின் சதித்திட்ட ஒன்றுகூடலாகும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, நிகழ்வு முடிந்தவுடன் மஹிந்த முஸ்லிம்களை நேசிப்பவர். கடந்த கால சம்பவங்களுக்கும் அவருக்கும் எவ்விதமான தொடர்புமில்லை. மேற்கத்தியவாதிகளின் சதித்திட்டம் என்று அறிவிப்பார்கள் எனவும் எதிர்வு கூறினார் முஜிபுர் ரஹ்மான்.
இந்த சந்திப்பானது முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு நகைச்சுவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வாகும். இலங்கை முஸ்லிம்கள் மஹிந்த ஆட்சியிலிருந்து பல பாடங்களை படித்து விட்டனர். அவரின் மீள்வருகை முஸ்லிம் சமூகத்திற்கே பேராபத்தாகும் என்பதை மிகத்தெளிவாக புரிந்துவைத்துள்ளனர். அவரின் மீள்வருகையை தோற்கடிக்க எமது சமூகம் பின்நிற்கப்போவதில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். றி
.jpg)