ஜுனைட்.எம்.பஹ்த்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் எதிர்வருகின்ற 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புக்களுக்கு செல்வதைத் தடுக்கும் உத்தரவைத் தான் பிறப்பித்திருப்பதாக கல்குடா வலயப் கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.
இதற்கான அறிவுறுத்தல்களை கல்குடா வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறிப்பிட்டார்.
இந்த அறிவுறுத்தலை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை மாணவர்களை ஒன்று கூட்டி வகுப்புக்கள் நடாத்தப்பட்டால் அத்தகைய தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் சமய பாடத் தேர்வுகளில் பின் தங்கியிருப்பதனால் இந்தக் கல்வி வலயத்தில் மேற்படி ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புத்தடை செய்யப்பட்டு அதற்குப் பதிலாக அறநெறி வகுப்புக்களுக்குச் செல்லுமாறு மாணவர்களை கேட்டுக் கொள்ளவதாகவும் ஸ்ரீகிருஷ்ணராஜா தெரிவித்தார்.
ஆன்மீக அறநெறிக் கொள்கைகள் நெறி பிறழ்ந்து இளம் சமுதாயத்தனரின் சமுதாய நடத்தைகள் சீர்கெட்டுள்ளது. இதனை மறுசீரமைக்க வேண்டும்.
இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் சமய கற்கைளை மேற்கொள்ளுமாறு மாணவர்களையும்,அதற்கான முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் வேண்டிக்கொண்டார்.
