யாழ் அரசாங்க அதிபருக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

மூகப் பொறுப்புடன் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், அசௌகரியங்களுக்கும் மத்தியில் பொதுமக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களை குழப்பவாதிகளாகச் சித்தரிக்க முயற்சித்துவரும் யாழ். அரசாங்க அதிபர் என். வேதநாயனின் செயற்பாட்டிற்கு கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோரால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பட்டிருப்பதாவது:

யாழ். குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்களினால் பல குழப்பங்கள் உருவாகின்றன என்பதனாலேயே தாம் ஊடகவியலாளர்களை அனுமதிக்க மறுத்ததாக யாழ். அரசாங்க அதிபர் காரணம் கற்பித்திருக்கின்றார்.

இக்கலந்துரையாடலின்போது வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், மாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், வடக்கு மாகாண ஆளுநரே அவ்வாறு ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் எனப் பணித்திருப்பதாகவும் மாவட்டச் செயலக அதிகாரிகளால் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இக்கலந்துரையாடல் முடிவுற்றதன் பின்னர் ஆளுநரின் செயலாளர் இளங்கோவனுடன் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக வினவியபோது, அவ்வாறான பணிப்புரைகள் எதனையும் நாங்கள் வழங்கவில்லை என அவர் மறுத்துள்ளார். இதன் பின்னரே யாழ். அரசாங்க அதிபர் தானே அவ்வாறு உத்தரவிட்டதாகவும், ஊடகவியலாளர்களினால் பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்க அதிபரின் இக்கூற்றும், குழப்பத்தை ஏற்படுத்திய இச்செயற்பாடும் ஒட்டுமொத்த ஊடகவியலாளர் சமூகத்தையும் பெரும் விசனத்திற்குள்ளாக்கி இருப்பதுடன், ஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் குழப்பத்தைத் தோற்றுவிக்கும் சமூகவிரோத செயற்பாட்டாளர்களா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அரசாங்க அதிபர் தான் பிறப்பித்த உத்தரவொன்றை, தனது செயலக அதிகாரிகள் மூலமாக ஆளுநரின் தலையில் கட்டிவிட்டு தான் தப்பிக்க எத்தனித்தது குழப்பத்தைத் தோற்றுவிக்கும் செயலா? அல்லது வடக்கு மக்கள் அச்சத்துடன் எதிர்கொண்டுள்ள நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பான கலந்துரையாடலை நேரில் அவதானித்து ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்களின் பிரசன்னம் குழப்பத்திற்குரியதா? என்ற கேள்விக்கு அரசாங்க அதிபர் பொறுப்புடன் பதிலளித்து ஊடகவியலாளர்கள்மீது வீசப்பட்டிருக்கும் இச்சேற்றினை அகற்றுவதற்கு முன்வர வேண்டும்.

கடந்த ஜனவரியில் மலர்ந்துள்ள ஜனாதிபதி மைத்ரீயின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் தகவலறியும் சுதந்திரத்தை இந்த நாட்டில் சட்டமாக்குவதென உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாவட்ட அரசாங்க அதிபரால் ஊடகவியலாளர்களின் தகவலறியும் சுதந்திரமும், உரிமையும் அப்பட்டமாக மறுக்கப்பட்டிருப்பதுடன், அவர்களை குழப்பத்தைத் தோற்றுவிப்பவர்கள் எனச் சுட்டிக்காட்டியிருப்பதும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

ஊடகவியலாளர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவர்கள் என்றால், ஊடகத்துறைக்கு என ஒரு அமைச்சையும், அமைச்சரையும், ஆளம்பு சேனைகளையும் நியமித்து ஏன் மக்களின் வரிப்பணத்தை அரசாங்கம் வீணடிக்க வேண்டும்? என நாம் யாழ். அரசாங்க அதிபரிடம் வினவ விரும்புகின்றோம்.

வடக்கு ஊடகவியலாளர்களை சமீப காலமாக பாதுகாப்புத் தரப்பினரும், பொலீசாரும் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கும் துரதிர்ஷ்டமான நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தற்போது சிவில் அதிகாரியான யாழ். அரசாங்க அதிபரும் இவ்வாறு ஊடகவியலாளர்களை மலினப்படுத்தி கருத்துரைப்பதையும், ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தைத் தடை செய்வதையும் கிழக்கு ஊடக சங்கம் மிக்க கவலையுடன் கண்டிக்கின்றது.
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் வீ. பத்மஸ்ரீ
(தலைவர்) (பொதுச் செயலாளர்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -