கிழக்கு மாகாண சபையில் UPFA யின் ஆட்சியா புதிய அரசின் ஆட்சியா..? யோகேஸ்வரன் MP







த.நவோஜ்-

கிழக்கு மாகாண சபையில் நடைபெறும் அமைச்சுப் பதவி மாற்றங்களை எடுத்து நோக்கினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி நடைபெறுகிறதா? புதிய அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறுதிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்!

வித்தியாலய அதிபர் செல்வி நா.ஜெயராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், ஏறாவூர்ப் பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.முருகேசுப்பிள்ளை, சக பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

'கடந்த கால யுத்த சூழலானது எங்கள் கல்வியை பலவாறு பாதித்தது பல வகையில் நாம் பாதிக்கப்பட்டிருக்கின்றறோம். அந்த வகையில் கஷ்டமான சூழலில் பாதுகாத்து வந்த எமது கல்வியை தற்போதைய சூழலில் வளப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஒரு காலத்தில் கல்வி ரீதியாக உயர்ந்து நின்ற எமது சமுகம் தற்போது அந்நிலையை தளர்த்தியிருக்கின்றது. எனவே எமது சமுகத்தின் கல்வி நிலையை உயர்த்த வேண்டிய கடமை எமக்கும் எமது மக்களுக்கும் இருக்கின்றது.

எனவே இந்த நிலையில் நாம் நீண்ட காலமாக எமது அபிவிருத்திப் பணியின் பங்காளிகளாக முன்பிருந்த அரசாங்கம் எம்மை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்த ஆட்சி மாற்றத்தின் பின் அபிவிருத்திப் பணியின் பங்காளிகளாகவும் நாம் மாற்றம் பெற்றுள்ளோம்.

இதன் ஒரு கட்டமாகத்தான் கிழக்கு மாகாண சபையில் ஒரு மாற்றம் வந்த வேளையில் தற்போதுள்ள புதிய அரசாங்ககத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற வகையில் ஆதரவு கொடுத்து அந்த அரசாங்கத்தை வெற்றிபெற வைத்து முன்பிருந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அதன் தலைவரை வீட்டுக்கு அனுப்பிய பெருமை வடக்கு கிழக்கு மக்களாகிய எம்மைச் சாரும் வகையில் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டோம்.

புதிய அரசாங்கம் வந்ததன் பிறகு புதிய மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தோம் அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கூட எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் அது வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களுடன் சகோதர இஸ்லாம் மக்களின் வாக்குகளைப் பெற்ற முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் முன்பு இருந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் பதவியைப் பெற்று ஆட்சி அமைத்தார்கள் மீண்டும் அவர்களே எம்மிடம் வந்து தேசிய அரசாங்கம் அமைப்போம் என்று தெரிவித்து எம்மை அழைத்தார்கள் ஆனால் எமது தலைவர் விரும்பாது விட்டாலும் நாம் அந்தப் பேச்சுவார்த்தைக்குச் சென்றோம்.

அந்த பேச்சுவார்த்தையின் போது இரு அமைச்சுகளையும் உபதவிசாளர் பதவியையும் தருவதாகவும் அதில் குறிப்பாக கல்வி அமைச்சினை வழங்குவதாகவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் நிமித்தம் ஒரு சில நாட்களுக்கு முன்னர் எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எமது தலைவருடன் கலந்துரையாடி கல்வி அமைச்சரையும் இதர அமைச்சர்களையும் தெரிவு செய்தோம். ஆனால் அதன் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னர். முஸ்லீம் காங்கிரஸ் முன்னர் இருந்த அரசாங்கத்தின் ஆலோசனையுடன் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

தற்போது கிழக்கு மாகாண சபையில் முன்பிருந்த அரசாங்கத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லது தற்போது இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சி இடம்பெறுகின்றதா என்பது பாரிய கேள்வியாக இருக்கின்றது. ஆனால் எந்தெந்த அமைச்சுகளை எமக்கு தருவதாக கூறினார்களோ அதனை கைப்பற்றி விட்டு ஏனைய அமைச்சுகளை எம்மை எடுக்குமாறு பணிக்கின்றார்கள். இது சம்மந்தமாக எமது தலைவர் மான்புமிகு ஜனாதிபதி அவர்களை சந்திக்க இருக்கின்றார்.

எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும் இந்த மாகாணத்தில் நாம் 40 வீதமாக இருக்கின்றோம் கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும். நாம் 40 வீதமாக இருக்க இந்த மாகாணத்தில் மூன்றாவது நிலையில் இருக்கும் ஒரு இனத்தினர் கல்வி அமைச்சைக் கைப்பற்றி மீண்டும் எமது கல்வி நிலையை குறைக்க நாம் தயார் இல்லை.

நாம் சாதாரண ஒருவரை கல்வி அமைச்சராக நியமிக்க தீர்மானிக்கவில்லை. வட மாகாணத்தில் கூட ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரைத்தான் கல்வியமைச்சராக தீர்மானித்தோம். அது போல் கிழக்கு மாகாணத்தில் மாகாண உதவிக் கல்விச் செயலாளரைத்தான் நாம் கல்வி அமைச்சராக தீர்மானித்தோம். சாதாரணமான ஒருவரை இவ்வமைச்சிற்கு நியமிக்க முடியாது. கல்வி நிலையில் உயர்ந்தவர்களைத்தான் இவ்வமைச்சிற்கு நியமிக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் மகத்துவம் தெரியும் கல்வியின் மகத்துவம் தெரியாத ஒருவரை கல்வியமைச்சாராக மாறினால் எமது மாகாணத்தின் கல்வியின் நிலை என்னாவது.

உண்மையில் இது வேதனையான ஒரு சம்பவமாக இருக்கின்றது. எமக்கு தருவதாகக் கூறிய கல்வி காணி அமைச்சுக்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது. இது திட்டமிட்ட சதி நாம் அன்று முட்டுக் கொடுத்து ஆதரவு கொடுத்த படியால் தான் இன்று இந்த மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சி இடம்பெறுகின்றது. அந்த நன்றியைக் கூட மறந்ததாக இன்று எங்கள் மாகாண சபையில் எமக்கு வழங்க வேண்டிய ஆட்சி அதிகாரத்தைக் கூட பெற்றுத் தர முடியாத இந்த அரசாங்கம் அதில் கல்வியமைச்சு காணி அமைச்சைக் கூட இன்று பறித்திருப்பது நியாயமற்றது.

நாம் பொருத்துக் கொண்டு இருக்க முடியாது. கடந்த கால அரசாங்கங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமிழர்களை ஏமாற்றிய வரலாறுகளையே நாம் கண்டிருக்கின்றோம். குறிப்பாக 1965ம் ஆண்டு இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நாம் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் தான். ஆனால் அந்த அரசாங்கம் எம்மை ஏமாற்ற ஆரம்பித்தது அதனால் அதிலிருந்து வெளிவந்தோம்.

பின்னர் பண்டாரநாயக்கா அவர்களை அந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கொண்டு வருவதற்கு நாம் முயற்சித்தோம். ஆனால் அவர் ஒரு புதிய யாப்பைக் கொண்டு வந்து எமது அடிப்படை உரிமைகளை எல்லாம் அதில் பறித்தார். எனவே காலா காலமாக வந்த பேரினவாத அரசாங்கங்கள் எல்லாம் எம்மை ஏமாற்றிய வரலாறே இருக்கின்றது.

எனவே இனியும் நாம் ஏமாற முடியாது இங்கிருக்கின்ற அரசாங்கத்திற்கு நாம் பூரண ஆதரவைக் கொடுத்தவர்கள் என்ற வகையில் எமக்கு கிழக்கு மாகாணத்தில் நியாயமான முறையில் அமைச்சப் பதவிகள் வழங்கப்பட வேண்டும். இதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். நாம் எதிர்பார்த்து இருப்பது எமது மக்களின் கல்வி மேம்பாட்டைத்தான். நாம் கல்வியில் பல இன்னல்களைச் சந்தித்திருக்கின்றோம். எமது பாடசாலைகளில் பல ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்றது. எமது எத்தனையோ பிள்ளைகள் கல்வி முடித்து வேலையில்லாமல் இருக்கின்றார்கள் சாதாரண சிற்றூழியர் நியமனத்திற்கும் எமது பகுதிகளில் எம்மினத்தைச் சாராதவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தளவிற்கு நாம் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றோம்.

சாதாரண பாடசாலை சிற்றூழியர் நியமனத்தில் கூட எமது இளைஞர்கள் சேர்க்கப்படவில்லை. ஏன் எமது கிராமங்களில் சிற்றூழியருக்கான தகுதியில் எவரும் இல்லையா ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் பாடசாலைக்கு சிற்றூழியர்கள் நியமிக்கும் போது அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை நியமித்தால் அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஒரு தொழில் வாய்ப்பினை வழங்க முடியுமானதாக இருக்கும். இது போல் சாதாரண தொழில் விடயங்கள் கூட எம்மிடம் இருந்து திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன. இது போல் பல விடயங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் தான் நாம் கல்வியையாவது தக்க வைத்து எமது சமுகத்தைக் காப்பற்ற நாம் முயற்சித்தோம் ஆனால் அதையும் பறித்து விட்டார்கள். இந்த ஏமாற்றுகின்ற முஸ்லீம் காங்கிரசும் எம்மால் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்ற இந்த அரசாங்கமும்.

எனவே நாம் இத்தனை காலமும் சகலதையும் இழந்தோம். இனியும் இழப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை எனவே நாம் எம்மிடம் இருக்கின்ற வளத்தை கல்வியில் மேம்படுத்த வேண்டும்' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -