இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

லங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில், அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட முடிவு செய்த அவுஸ்திரேலிய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ஞ் (24), டேவிட் வார்னர் (9) ஓரளவு சிறப்பான தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆரோன் பிஞ்சை சங்கக்காரா அசத்தலாக ஸ்டம்பிங் செய்தார். மலிங்காவின் வேகத்தில் வார்னரின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய சுமித், கிளார்க் ஜோடி அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்களை உயர்த்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர்.

68 ஓட்டங்கள் குவித்த போது கிளார்க் மலிங்கா பந்தில் பவுல்ட் ஆனார். இதைத் தொடர்ந்து 72 ஓட்டங்கள் எடுத்திருந்த போது சுமித்தை டில்ஷான் வீழ்த்தினார்.

அவுஸ்திரேலியா 177 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்த போது மேக்ஸ்வெல், வாட்சன் கைகோர்த்தனர். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர்.

மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 102 ஓட்டங்கள் (10 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பல்க்னர் வந்த வேகத்தில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். இவரை மேத்யூஸ், பெரேரா ஓட்ட முறையில் வெளியேற்றினர்.

மறுமுனையில் மிரட்டிக் கொண்டிருந்த வாட்சன் 41 பந்துகளில் 67 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த போது ஆட்டமிழந்தார்.

ஹெட்டின் 9 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்து மேத்யூஸ் பந்தில் வெளியேறினார். ஸ்டார்க் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 376 ஓட்டங்களை குவித்தது. டோஹெர்டி (0), ஜான்சன் (3) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மலிங்கா, பெரேரா தலா 2, மேத்யூஸ், பிரசன்னா, டில்ஷான் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் திரிமான்னே (1) ஏமாற்றினார். பின்னர் சேர்ந்த டில்ஷான், சங்கக்காரா ஜோடி அணி் சிறப்பாக விளையாடியது.

டில்ஷான் 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அசத்திய சங்கக்காரா சதம் அடித்தார். அடுத்து வந்த ஜெயவர்த்தனே (19) தேவையில்லாமல் ஓட்ட முறையில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து 104 ஓட்டங்கள் எடுத்த போது சங்கக்காரா ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை குவித்தது.

அடுத்து வந்த மேத்யூஸ், சந்திமால் ஜோடி நம்பிக்கை அளித்தது. இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் சந்திமால் (52) ரிட்டையர் ஹட் முறையில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மேத்யூஸ் (35) கிளம்பினார். இதன் பின்னர் திசர பெரேரா (8), உபுல் தரங்க (4), பிரசன்னா (9), செனநாயகே (7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மலிங்கா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் இலங்கை அணி 46.2 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியா 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் பல்க்னர் 3, ஸ்டார்க், ஜான்சன் தலா 2, வாட்சன் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக மேக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -