என் கல்விக்கு அத்திவாரமிட்ட அல்-ஹிலாலுக்கு என்ன நடக்கிறது?

ல்முனைக் கல்வி வலயத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் அன்றும் இன்றும் முன்னணிப் பாடசாலையாகத் திகழ்வது சாய்ந்தமருது கல்விக் கோட்டத்திலுள்ள கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

பல சிறந்த அதிபர்களின் வழிகாட்டுதலில் கடந்த காலங்களில் அந்தப் பாடசாலை எவ்வாறு சிறப்பானதொரு நிலையில் இருந்ததோ அதனை விடவும் தற் போது நல்ல நிலையிலே அந்தப் பாடசாலை இருக்கின்றது என்பதற்கு பின்வரும் ஒருசில விடயங்களே போதுமானது. 

ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகமான மாணவர்கள் சித்தியடைவது ( கடந்த வருடம் 38 மாணவர்கள் சித்தி ), முதலாம் வகுப்பிற்கு தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் தூர இடங்களில் இருந்து கூட ஆர்வம் காட்டுவது மற்றும் 12. 03. 2015 ம் திகதி நடை பெற்ற வலய மட்ட திறனாய்வில் 74 புள்ளிகளைப் பெற்றமை என்பவற்றைக் கூறலாம்.

இப்படியான சிறப்பான நிலைக்கு அந்தப் பாடசாலையை இட்டுச் செல்வதற்கு பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் தற் போதைய அதிபர் ஏ. பி. முஜீன் அவர்களின் வழி காட்டுதலும் அவரின் நிருவாகத் திறமையுமே காரணமாகும்.

இத்தகையதொரு நிலையிலேதான் குறித்த அதிபர், பாடசாலையைப் பொறுப்பேற்ற சுமார் மூன்று வருடகாலப் பகுதியினுள் இதுவரை மூன்று தடவைகள் இடமாற்றம் வழங்கப்பட்டு, அவரை அந்தப் பாடசாலையிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. எத்தனையோ பாடசாலைகளில் அதிபர்கள் தசாப்த காலத்துக்கும் மேலாக கடமையில் இருக்கின்ற போது, அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. 

இந்த இடமாற்றங்களின் பின்னால் அரசியல் வாதிகளும், கல்வித் திணைக்கள உயரதிகாரிகளும் இருப்பதாகவும் அறிய முடிகின்றது. சாய்ந்தமருது கல்விக் கோட்டத்திலே இருக்கின்ற ஒன்பது பாடசாலைகளில் இது வரைக்கும் இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் மாத்திரமே முறையான அதிபர் நியமனம் வழங்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் தற்காலிக நியமனம் பெற்றவர்களே. இது வரைக்கும் அத்தகைய பாடசாலைகளின் அதிபர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவோ, நேர்முகப் பரீட்சை இடம் பெற்றதாகவோ தகவல்கள் இல்லை. 

சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஏதோவொரு வகையில் கடமை நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது. அது எந்த அடிப்படையிலாக இருக்க முடியும் என்பதை வெளிப்படையாக சொல்லத் தேவையில்லை என்று நினைக்கின்றேன். இன்னுமொரு பாடசாலையில், சிரேஸ்ட ஆசிரியை அதிபராக இருக்க அதிபர் தரத்திலுள்ளவர் பிரதி அதிபராக இருக்கின்றார். குறித்த அந்தப் பாடசாலைக்குக் கூட நிரந்தர அதிபரை நியமிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் கல்வித் திணைக்கள மட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் இல்லை.

நிலவரங்கள் இவ்வாறு இருக்கின்ற போது, அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் திறமையாக பாடசாலையை வழி நடத்திக் கொண்டிருக்கின்ற போதும், அவரை மட்டும் இடமாற்றுவதற்கு பல் வேறுபட்ட முயற்சிகளும் எடுக்கப்படுவது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கின்றது. இரண்டு தடவைகள் வழங்கப்பட்ட இட மாற்றங்கள் வெற்றியளிக்காததால், சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர் அந்தப் பாடசாலைக்கு அதிபர் நியமனத்திற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. 

சில வாரங்களுக்கு முன்னர் கூட, ஏதோ மேலதிக விசாரைணை நிமித்தம் அவரை கல்முனை வலயக் கலவிப் பணிமனைக்கு இடமாற்றப்பட்டிருந்தார். இது சம்பந்தமாக பாடசாலை அபிவிருத்திச் சபையும், பெற்றோரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும் சந்தித்து, உண்மைகளை விளங்கப்படுத்தியதன் காரணமாக அந்த இட மாற்றமும் இரத்துச் செய்யப்பட்டது.

குறித்த அதிபரை இடமாற்றியே ஆகவேண்டும் என்ற கங்கணத்தில் இருப்பதாலோ என்னவோ, ஏழு மாதங்களுக்கு முன்னர் கோரப்பட்டிருந்த விண்ணப்பங்கள் மீண்டும் தூசு தட்டப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை ( 16. 03. 2015 ) அதற்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக, கால அவகாசம் வழங்கப்படாமல், சனி ஞாயிறு தினங்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய அதிபர் ஏ. பி. முஜீன் தேசிய ரீதியிலான அதிபர் பரீட்சையில் நான்காமிடத்தைப் பெற்றதுடன் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகவும் கடமையாற்றி அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறித்த நேர்முகப் பரீட்சை சம்பந்தமாக பல விதமான ஐயங்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், குறித்த அதிபரை அந்தப் பாடசாலையில் இருந்து அகற்றுவதற்கு யார், ஏன் இப்படி வெறியாக இருக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்த விடயத்தில் மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர்கள் உடனடியாகத் தலையிட்டு, உண்மைத் தன்மையை அறிந்து, நியாயமான ஒரு தீர்வை குறித்த அந்தப் பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்து, தொடர்ந்தும் அந்தப் பாடசாலை ஒரு முன்னணிப பாடசாலையாகத் திகழ உதவி செய்ய வேண்டுமென பாடசாலை அபிவிருத்திச் சபையினரும், பெற்றோர்களும் எதிர் பார்க்கின்றார்கள்.

டாக்டர் என். ஆரிப்
பிரதித் தலைவர்
பாடசாலை அபிவிருத்திச் சபை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -