நல்லாட்சி அரசாங்கமும் முஸ்லிம்களின் கோரிக்கையும்!

எம்.வை.எம். யூசுப் இம்றான்-
சிறுபான்மை இனங்களின் விசேடமாக முஸ்லிம்களின் பெருவாரியான ஆதரவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு, எமது நாட்டில் ஒரு தேசிய அரசாங்கம் மலர்ந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. 

கடந்த கால அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய அநீதிகளிலிருந்து விடுதலை பெறல், மத சுதந்திரத்தை பாதுகாத்தல், முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படுதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வெற்றி பெறச் செய்தனர். இவ் நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் முஸ்லிம்கள் தனித் தரப்பாக பங்கு பற்றி முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்ற போதிலும் நடைமுறை ரீதியாக முஸ்லிம்களது பொத்துவில் காணிப்பிரச்சினை, படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்டுள்ள அஷ்ரப் நகர் முஸ்லிம்களின் காணிகள் மீள அம்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று நுரைச்சோலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை உரிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அண்மையில் ஜனாதிபதி தலைமையில் படையினர் வசமிருந்த வளலாய் பிரதேச காணிகள் அம்மக்களுக்கே வழங்கப்பட்டதைப் போன்று முஸ்லிம்களது இக்காணிகளை வழங்குவதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ளுதல் வேண்டும்.

கடந்த கால அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் மத சுதந்திரம் பாரியளவு பாதிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்தினுடைய 'மதஸ்தாபனங்களுக்கு பாதுகாப்பு வழங்கல்' எனும் 80வது வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று முஸ்லிம்களது அனைத்து மத ஸ்தாபனங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன் விசேடமாக தம்புள்ள கைரியா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கூரகலயில் அமைந்துள்ள வரலாற்று புகழ் பெற்ற ஜெய்லானி பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்க முன்வரல் வேண்டும்.

தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளில் ஒன்றான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக சிவில் நிருவாகியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றியதைப் போன்று மேலும் தமிழ் சமூகம் பெரும்பான்மையாக வாழுகின்ற மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்களாக தமிழ் சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதைப் போன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அவ்வாறில்லாவிடில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட மொர கொட ஆணைக் குழுவினால் முன் மொழியப்பட்டுள்ள அம்பாரை மாவட்டத்தில் தமிழ்பேசும் மக்களுக்கான நிருவாக அலகாக கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இவ் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தமிழ் சமூகம் அடைந்துள்ள பலாபலன்களுடன் ஒப்பிடுகின்ற போது முஸ்லிம் சமுகம் அடைந்துள்ள பலாபலன்கள் குறைவாகவே உள்ளதை மேலே முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் நிறைவேற்றப்படாததன் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.

 மேற்படி கோரிக்கைகளை இலகுவான முறையில் அடைவதற்கான வாய்ப்பாக இன்று தேசிய அரசாங்க முறைமை காணப்படுகிறது. இவ்அரிய வாய்ப்பை பயன்படுத்தி முஸ்லிம்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். இதனை நிறைவேற்ற முஸ்லிம் சிவில் சமுகத்தினர் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் தமது அமைச்சுப் பதவி, சுகபோகங்களை அனுபவிப்பதற்கு முன்னுரிமை வழங்குவார்களேயானால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆட்சி மாற்றத்திற்காக முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றிணைந்தது போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் மூலமாக புதிய அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தலாம். அச் சந்தர்ப்பத்தில் தற்போதைய அரசியல் தலைவர்களது எதிர்கால அரசியல் இருப்பு கேள்விக் குறியாகமாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -