கிழக்கு ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திய-வாபஸ் முடிவு!

லங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பலர் ஆளும் தரப்புக்கு வழங்கியுள்ள ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்கா, எம். எஸ். உதுமான்லெப்பை மற்றும் தற்போதைய துணை அவைத் தலைவர் எம். எஸ். சுபைர் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். 

ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறும் வகையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சி அமைந்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறினார்கள். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 15 பேரில் 11 பேர் இன்று செவ்வாய்கிழமை மாகாணசபை கூடும்போது எதிர்க் கட்சியாக செயற்படுவார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார். 

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான தற்போதைய ஜனாதிபதிக்கு தான் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

37 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 36 பேர் ஆளும் தரப்பு உறுப்பினர்களாக உள்ளனர். 

குறித்த 11 உறுப்பினர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்துவிடும். 

அது தற்போதைய மாகாண ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் மற்றுமோர் ஆட்சி மாற்றத்திற்கு அது வாய்ப்பாக அமையமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -