பொத்துவில் மக்கள் ஏமாற்றுக்காரர்களின் சதியிலிருந்து விடுபட வேண்டும்-உதுமாலெப்பை!

சலீம் றமீஸ்-
பொத்துவில் பிரதேச மக்கள் எதிர் வரும் காலங்களில் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு ஏமாற்றுக்காரர்களின் சதி வலையில் இருந்து மீண்டு நமது பிரதேச மக்களின் பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கு நமக்கான சுதந்திரமான அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டும். 

பொத்துவில் பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரம் தொடர்பாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் காலத்தில் கூட எங்களின் பங்களிப்பினை நாம் வழங்கி வந்துள்ளோம்.

எனவே பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஒற்றுமைப்பட்டு அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து நமது பிரதேசத்திற்கான அரசியல் அதிகாரத்தை பெறுவதன் ஊடாக பொத்துவில் பிரதேசத்தின் அனைத்து தேவைகளையும் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் இதற்கான முன் ஏற்பாடுகளை இப்பிரதேச மக்கள் ஒன்றினைந்து இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும். என பொத்துவில் அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உல்லே பிரதேசத்தில் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், சீருடைகள், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வும் அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை(மா.ச.உ) குறிப்பிட்டார்.

தேசிய காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் சென்ற 2008ம் ஆண்டு நடை பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் பின் அமைக்கப்பட்ட 1வது அமைச்சரவையில் என்னை வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமித்து விட்டு கிழக்கு மாகாணம் முழவதும் பணி புரியக் கூடிய அமைச்சு வழங்கப்பட்டுள்ளது இந்த அமைச்சின் அபிவிருத்தி பணிகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமைக்காக செயற்படுவதுடன், குறிப்பாக மூதூர், பொத்துவில் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு பணிகளில் விசேட கவனம் செலுத்தி அம் மக்களுக்கு பணி புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டார். 

எங்களின் தலைமைத்துவத்தின் எண்ணங்களை கடந்த ஆறரை வருடங்கலாக கிழக்கு மாகாணம் முழுவதும் எங்களால் முடிந்தளவு முயற்சி செய்து நடை முறைப்படுத்தி உள்ளோம். எங்களின் தலைமை மீது விசுவாசமாகவும், எங்களின் மீது நம்பிக்கை வைத்த மக்கள் மீது அக்கரையாக இருந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளோம். இவைகள் எங்கள் மனதிற்கு அமைதியை தந்து கொண்டிருக்கின்றது.

தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மரணிக்கும் வரையில் நாங்கள் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து விசுவாசமாக இருந்து செயல்பட்டோம். தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீமா? பேரியலா? என்ற நிலை வந்த போது ஹக்கீம் தான் கட்சியின் தலைவராக செயல்பட வேண்டும் என்று துனிவுடன் ஒத்துழைப்பு வழங்கினோம். 

றஊப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியில் இருந்த போது அவரின் கொள்கையில் பிரச்சினை ஏற்பட்ட போது வெளிப்படையாகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி எமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதனால் கிழக்கு மாகாணத்தில் சமாதானம் ஏற்படுவதற்கும், இன உறவுகள் வளர்வதற்கும் எங்களின் செயற்பாடுகள் பெரும் உறுதுனையாக அமைந்திருப்பது இன்று வரலாற்று நிகழ்வாக மாறியுள்ளது. நாம் ஒரு போதும் மக்களை ஏமாற்றமாட்டோம். 

எனவே பொத்துவில் மக்கள் எதிர்காலத்தில் விழிப்பாக இருந்து செயல்பட்டு சரியான அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எப்போதும் தமது கட்சியின் தலைமைக்கு விசுவாசமாக இருந்து செயல்பட வேண்டும். மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மீது நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் நம்பிக்கை வைத்து செயல்பட்டனர். தலைவர் அஷ்ரப் ஏமாற்றமாட்டார், என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தமது நேர்மையான செயற்பாடுகளின் ஊடாக நமது பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நமது நாட்டில் ஏற்படுத்தி காட்டினார். நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்காரர்களினால் கழுத்தறுப்பு செய்த நிலைமையில் அவர்கள் தலைவர் அஷ்ரபிடம் வந்து ஆறுதல் அடைந்த வரலாறுகள் உள்ளன. 

அந்த அடிப்படையில்தான் திரு. அசித்த பெரேரா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பீயாக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் நியமிக்கப்பட்டார்.

அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர் எங்களைச் சந்தித்து தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் சுதந்திரமான முறையில் செயல்படுவதற்கு எங்களின் சங்கத்தை பதிவு செய்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். உடனடியாக இவர்களின் வேண்டுகோளை ஏற்று உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பினைப் பெற்று இச் சங்கம் பதிவு செய்து வழங்கப்பட்டது.

இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பொத்துவில் பிரதேச செயலாளர் முஸர்ரத் , சிரேஸ்ட சட்டத்தரணி பஹீஜ், ஏனைய அதிகாரிகளுக்கு மக்கள் சார்பில் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சர்வதேசத்தில் புகழ் பெற்றுள்ள பொத்துவில் - அருகம்பே பிரதேசங்களில் உல்லாசப் பயனிகள் பெரும் தொகையினர் வருகை தந்து சுற்றுலாத் துறை பெரும் அபிவிருத்தி கண்டு வரும் இக்கால கட்டத்தில் இப் பிரதேசத்தின் நமது கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது. அருகம்பே ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர் தங்களின் இயக்கத்தினர் நடவடிக்கைகளை விரிவு படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது. நாம் எப்போதும் நமது சமூக சூழலில் இணைந்து செயல்படவேண்டும். 

இப்பிரதேசத்தில் தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும், அதிபர்களையும், ஆசான்களையும், கௌரவித்து பாராட்டுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ள ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினை பாராட்டுகின்றேன். எதிர்காலத்தில் நமது பிரதேசம் ஏனைய துறைகளிலும் வளர்ச்சியடைவதற்கு இவ்வியக்கம் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -