நாட்டில் மீண்டும் தலை தூக்கும் தூக்குத் தண்டனை!

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை இல்லாமல் ஒழிப்பதற்காக மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல் படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ-

போதை பொருள் கடத்தல் காரர்களை ஓரிருவரை தூக்கிலிட்டால் நாட்டில் சமூகச் சீரழிவுகளை தடுக்க முடியும் என்றும் இக் கடத்தல்களின் பின்னணியில் அரசியல் செல்வாக்குள்ளவர்களே இருப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொழில் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி மற்றும் தொழில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் 

தர்ம உபதேசங்கள் தினம் தினம் நடத்தப்படும் எமது நாட்டில் இன்று நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குற்றச் செயல்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடத்தை எமது நாடு பெற்றுள்ளது. 

இது பெருமைப்பட வேண்டிய விடயமல்ல கவலைக்குரிய விடயமாகும். 

உயர்மட்டத்தினர் தலைவர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காது செயல்படுவதன் காரணமாகவே சாதாரண நாட்டு மக்களும் அதனை முன்னுதாரணமாக கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 

தூக்குத் தண்டனை

எனவே நாட்டில் மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்த வேண்டும். இதனை முன்பு சொன்னால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தலைதூக்கும். 

ஆனால் மீண்டும் தூக்குத் தண்டனை கொண்டு வரப்பட வேண்டும் என நான் அமைச்சுப் பதவி எடுத்ததும் தெரிவித்தேன். இதற்கு மக்கள் மத்தியிலிருந்து எவ்விதமான எதிர்ப்பும் கிளம்பவில்லை. 

ஏன் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நாட்டுக்குள் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. மக்கள் பொறுமை இழந்து விட்டனர். எனவே குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்கு மீண்டும் தூக்குத் தண்டனை தேவை என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்து விட்டனர். 

போதைப்பொருள் 

நாட்டில் இன்று நூற்றுக்கு 45 வீதமானோர் போதை பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் முடங்கிக் கிடக்கின்றனர். 

போதை பொருள் பாவிப்பவர்கள் மற்றும் அதன் சில்லறை வியாபாரிகளை பொலிஸார் கைது செய்கின்றனர். 

ஆனால் மொத்தமாக தொகையாக போதை பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோரை பொலிஸார் கைது செய்வதில்லை. 

ஏனென்றால் அவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவோர் அமைச்சர்களாக இருக்கின்றனர். அல்லது மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றனர். அப்படியும் இல்லையென்றால் கண்காணிப்பு அமைச்சர்களாக இருக்கின்றனர். 

எனவே இவ்வாறானவர்களை கைது செய்வதில் பொலிஸார் அக்கறை காட்டுவதில்லை. சில்லறை வியாபாரிகளையே கைது செய்கின்றனர். 

இந்நிலை மாற வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஓரிருவரையாவது தூக்கிலிட வேண்டும். அப்போது தான் சமூக சீரழிவுகளை தடுத்து நாட்டையும் இளம் சமூகத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -