தேர்தல்முறை மாற்றமடையும் போது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்! எச்சரிக்கிறார் வை.எல்.எஸ்.ஹமீட்

 எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
புதிதாக நாட்டை ஆட்சிசெய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் தலைமையிலான அரசு, தனது 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் இரண்டு பெரிய மாற்றங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்ய திட்டமிட்டு வருகின்றது. 

அதில் ஒன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அட்சி முறையை மாற்றுவது அடுத்தது தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறையை மாற்றுவது என்பதாகும். குறித்த இரண்டு மாற்றங்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான ஒன்றல்ல என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் மாற்றங்கள் இடம்பெறுவதால் ஏற்படும் பாதகநிலைகள் குறித்தும், கிழக்குமாகாணசபையில் எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாகவும் உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் கல்முனை இல்லத்தில் 2015-03-08ல் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,

நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் காரணமாக குறித்த ஜனாதிபதியை தெரிவு செய்வதில் சிறுபான்மையினரின் வாக்குகள் செல்வாக்குச்செலுத்துவதால், சிறுபான்மையினரின் தேவைகளை ஜனாதிபதியைக் கொண்டு அடைந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. 

மாறாக ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படும் போது பாராளமன்றத்துக்கே எல்லா அதிகாரங்களும் செல்கின்றன. அதன் காரணத்தால் சிறுபான்மையினரின் தேவைகளை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே செய்ய வேண்டி வரும். பாராளமன்றத்தை பயன்படுத்தி தேவைகளை பூர்த்திசெய்ய முற்படும் போது அங்கு சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் அவசியமாகின்றது.

 இதேவேளை 100நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று தேர்தல் முறைமையிலும் மாற்றம் ஏற்படும்போது சிறுபான்மை மக்கள் பாரியசவாலை சந்திக்க வேண்டி ஏற்படலாம் என அச்சம் வெளியிட்டார். 70வீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தையும், 30 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் செயற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் முன்வைக்கப்படுகின்றன என்றும், அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் சுமார் 8 க்கு அதிகமான உறுப்பினர்களைக்கூட பெறுவது கடினமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுமார் 10 வீதமான மக்கள் இங்குவாழ்வதால் ஆகக் குறைந்தது 20 உறுப்பினர்களையாவது பெறவேண்டும். ஆனால் மேற்கூறப்பட்ட 70வீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துமும் 30 வீதம் விகிதாசார பிரதிநிதித்துவமும் என்ற நிலை ஏற்படுமாக இருந்தால், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவதை யாராலும் தடுக்க முடியாமல் போவதுடன் குறைந்த உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம்கள் அவர்களது இலக்குகளை அடைவதில் சிக்கல்நிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை தெரிவித்தார்.

தேர்தல்முறை விடயத்தில் சிறுபான்மையினர் விரைந்து செயற்படவேண்டும் என்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு அழைப்புவிடுத்தார். 50 க்கு 50 என்ற முறையில் ஓரளவு திருப்தியடையலாம் எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து நிபுணர்கள் குழுஒன்றை நியமித்து அதற்க்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கூறப்படும் விகிதாசார தேர்தல்முறை கூட, அது மாவட்ட ரீதியான முறையா? மாகாண முறையிலான முறையா? அல்லது தேசிய ரீதியான முறையா? என சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

தேர்தல்முறையை மாற்றுவதால் சிறுபான்மையினர் எதிர்நோக்கப்போகும் பிரட்சினைகளை முஸ்லிம் கட்சிகள் தமிழ் கட்சிகள் மனோகணேசன் தலைமையிலான கட்சிகள் எல்லாம் நன்றாக யோசித்து செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணசபையிலும் தளம்பல் நிலை ஏற்பட்டதாகவும் குறித்த கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரை பெறுவதில் பாரிய இழுபறிநிலை ஏற்பட்டதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தங்களுக்கே முதலமைச்சரை தரவேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டிருந்ததாகவும் அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பயன்படுத்தி முதலமைச்சை பெற்றுக்கொண்டதாகவும் பின்னர் மாகாணசபை சட்டத்தில் இல்லாத தேசிய அரசு என்ற பதத்தைப்பயன்படுத்திக்கொண்டு தங்களை மிகவும் விமர்சித்த தமிழ் தேசியக்கூட்டமைப்புடனும் அமைச்சுக்களை பகிர்ந்து முதலமைச்சைப் பெற உதவிய பொதுஜன ஐக்கிய முன்னணியையும் கூட்டுக்கட்சிகளையும் நட்டாற்றில் விட்டு விட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஐக்கியமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரசிஸ் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புவதாகவும் முதலமைச்சை பெறும் விடயத்தில் அரசியலில் முதிர்ச்சியுற்ற இரா சம்மந்தன் ஐயா அவர்கள் மற்றும் சுமந்திரன் போன்றோர் வெளியிட்ட கருத்துக்கள் இனங்களுக்கு இடையே இன்னும் விரோதத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் அவ்வாறான கூற்றை தங்களது கட்சி கண்டிப்பதாகவும் முதலமைச்சைப்பெறுவதில் முஸ்லிம்களும் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்ல என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்உயர்பீட உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறை வேற்றுப்பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளருமான சீ.எம்.ஹலீம்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.லத்தீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மருதமுனை நாவிதன்வெளி பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சித்தீக் நதீர் போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -