வடமாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கடந்த அரசிடம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை புதிய அரசு முன்னெடுக்க வேண்டுமென்பதை கோரி 16 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
ஏற்கனவே இந்த மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்விபரம் வருமாறு;
• தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான வழியில் செல்வதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதில் ஆரம்பித்து, அதற்கு மேலதிகமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
• நீண்ட காலமாகவும் விசாரணைகள் இன்றியும், குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும், புனர்வாழ்வு வழங்கப்பட்டும் சிறைகளில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தல்.
• மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலமும் உரியவர்களிடம் மீள ஒப்படைத்தல்.
• புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைத் தாய் நாட்டினதும் பிரஜைகளாக இருப்பதற்கு இரட்டைக் குடியுரிமையை இலகுபடுத்தல்;.
• வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஓமந்தைச் சோதனைச் சாவடியை முற்றாக அகற்றல்.
• வெளி நாட்டவர்களும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் வட மாகாணம் நோக்கிப் பயணிப்பதை தடுக்கும் அல்லது நெருக்கடியை ஏற்படுத்தும் கடவுச்சீட்டு பரிசோதனை முறைமையை இரத்துச் செய்தல்.
• யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்துபோன மக்களை தூக்கி நிமிர்த்த உதவியிருக்கும் சமுர்த்திக் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதுடன் சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தல்;.
• யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும், மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களினதும் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்த உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
• யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வேலையற்று இருக்கும் எமது இளைஞர், யுவதிகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தல். சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தொழில்வாய்ப்புக்களை மேலும் ஏற்படுத்துதல்;. சொந்தப் பொருளாதார வளர்ச்சியில் எமது மக்கள் வாழுவதற்கான சூழலை ஏற்படுத்தல்.
• எமது கடல் வளத்தை அழித்தும், சுரண்டியும் எமது கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற, எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதோடு, எமது கடற்;தொழிலைப் புனரமைப்புச் செய்து, நவீன மயப்படுத்தி எமது கடற்தொழிலாளர்களது வாழ்வை மேம்படுத்தல்.
• விவசாய, உள்ளூர் உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றை ஊக்குவித்து, ஒவ்வொருவரும் சுய பொருளாதார வளர்ச்சியடைய நிதிவளம், உள்ளீடுகள் மற்றும் மூலப்பொருட்களை வழங்குதல்.
• நிலத்தடி நீர் மோசமாகப் பாதிப்படைந்துவரும் யாழ் மாவட்டம் உட்பட குடி நீருக்குப் பாரிய நெருக்கடியைச் சந்தித்துவரும் வட மாகாணத்தின் மக்கள் அனைவருக்கும் பொருத்தமான பொறிமுறை ஊடாக சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
• முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் திட்டங்கள் தேவை.
• ஆட்சி உரிமை (விசேட ஏற்பாடு) சட்ட திருத்தத்தை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வட மாகாணத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமை உள்ளது.
• பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி கட்டியெழுப்பப்பட வேண்டும். முன்னர் பலாலியிலிருந்து தென்னிந்தியாவிற்கு விமானப் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
• யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கும் பூர்வீகச் சொத்துக்களை இழந்தவர்களுக்கும் பரம்பரைத் தொழில்களை இழந்தவர்களுக்கும் நஸ்டஈடுகளும் நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
.jpg)