இக்பால் அலி-
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் களைந்தெறியவதற்காக பொருத்தமான முஸ்லிம் சமய கலாசார அமைச்சு இந்த இடைக்கால அரசாங்கத்தின் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே எமது முஸ்லிம்களுடைய தனித்துவம் கலாசாரம், இருப்பு என்வற்றிற்குரிய உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் நாங்கள் இவ்வாறு ஒன்றுபட்டு வாக்களித்து வெற்றியைப் பெற்றுக் கொள்ளுதல் அவசியமாகும் என்று முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம் எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களுக்கு ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அமோக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் தம் பகுதியிலுள்ள கண்டி மாவில்மட ஜும்ஆப் பள்ளிவாசிலுக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார். அங்கு விசேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றதுடன் கலந்து கொண்ட அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார் அக்குரணை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் அஜ்மல் தலைமையில் அக்குரணையில் நடைபெற்றது. அத்துடன் கட்டுகஸ்தோட்டை, அம்பத்தென்ன, அலவத்துக்கொட உள்ளிட்ட சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் இந்த வரவேற்பு வைபவங்கள் இடம்பெற்றன.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:
ஊழல், மோசடி, அச்சுறுத்தல் மிக்க ஆட்சியை விட்டொழிப்பதற்காக இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். இதற்காக நோன்பு நோற்று, தொழுகை, பிரார்த்தனை போன்ற சமய காரியங்களில் எமது முஸ்லிம்கள் ஈடுபட்டார்கள். இங்குள்ள கண்டி மக்களுடன் இலங்கையில் எல்லாப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களும் நோன்பு நோற்று துஆப் பிரார்தனைகளில் ஈடுபட்டு ஒரு மாற்றத்திக்காக பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்பது வரலாற்றுமிக்க ஒரு முக்கிய அம்சமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.