முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணும் வெளிநாடு செல்ல அனுமதியில்லை



கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணும் வாழ்வாதாரம் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லக்கூடாது என்பதும் அவர்களுக்காக உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்பதுமே எனக்குள்ள சவால் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தான் அமுல்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாக விவரிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 'பாரிய முதலீடுகள், அதற்கான தொழிநுட்பம், சந்தை வாய்ப்பு வசதிகள் இல்லாமல் ஒரு தொழில் பேட்டையை ஆரம்பிப்பதென்பது சவால் நிறைந்த விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழில் பேட்டைகள் எதிர்காலத்தில் உலகின் சிறந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்ற இடங்களாக கிழக்கு மாகாணத்தை மாற்றும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கின்றது.

 இதற்கு மாகாண சபையிலுள்ளவர்களும் கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்புத் தரவேண்டும். ஏனென்றால் மாகாண அமைச்சிலே இவ்வாறானதொரு பாரிய திட்டத்தை அமுல்படுத்தக்கூடிய எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை. எனது செல்வாக்கின் அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இங்கு வரவழைத்து கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க திடசங்டகற்பம் பூண்டுள்ளேன். 

எமது உள்ளூர் வளங்களையும் மனித வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டும் என்ற எனது நீண்ட காலக் கனவின் அடிப்படையிலும் இந்தத் திட்டத்தைத் தொடங்கவுள்ளேன். 

 வறிய மக்களின் வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற ஒரு பாரிய சவாலை நான் துணிச்சலோடு ஏற்றுக் கொண்டுள்ளேன். இதன் மூலம் எமது தமிழ், முஸ்லிம், சிங்கள சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளிலே அடிமை வேலை செய்து சிந்துகின்ற கண்ணீருக்கும் அவல வாழ்வுக்கும் விடிவு கிட்டும். உற்பத்தித்திறன் சார்ந்த முயற்சியாளர்கள் தங்களது உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றையும் ஏற்றுமதி செய்கின்ற பொழுது, முழுக்கிழக்கு மாகாணமுமே பொருளாதார அபிவிருத்தியைக் காணும். 

அப்பொழுது இங்கிருந்து எமது சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அடிமைப்பணி புரிய வேண்டியதில்லை. கிழக்கிலங்கை மக்களில் கணிசமானோர் பசி பட்டினியில் வாடுகின்றார்கள் என்றால், அதற்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் 60 சதவீதம் விவசாயத்திலும் ஏனைய 40 சதவீதம் கால்நடை, சிறு கைத்தொழில் என்பவற்றிலும் தங்கியிருக்கின்றது. மத்திய அரசைக் காட்டிலும் மக்களுக்கு மிக அருகில் இருப்பவர்கள் மாகாண அரசிலுள்ள நாங்களே. மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் எத்தனை வீதம் பயன்பெறுகின்றனர் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். 

ஏனைய மாகாணங்களின் மக்கள் மாகாண அரசினூடாக சிறந்த பயனைப் 
பெறுகின்றார்களென்றால், ஏன் அது நம்மால் முடியாமல் இருக்கின்றது? கிழக்கில் கிடைக்கக்கூடிய வளங்களுக்குத் தக்கதாக மக்கள் சிறந்த வழிகாட்டல்களையும் அதனூடாக அதிகூடிய பயன்பாட்டினையும் பெறவில்லை. 

இதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகளே பதில் கூற வேண்டும். இப்போக்கினைச் சுட்டிக்காட்டுவதென்பது நாம் எவர் மீதாவது குற்றம் காண்கிறோம் என்பதல்ல. நாம் அனைவரும் இணைந்து இன்னும் சிறிது அக்கறை எடுத்து செயற்பட்டு மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதேயாகும். முதிர்ச்சியடைந்தவர்களாகவும் அனுபவம் அறிவாற்றல் நிறைந்தவர்களாகவும் இருக்கின்ற நாம், இவ்விதமான எமது தனித்துவத்தை எவ்விதம் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றோம் என்பது கேள்விக்குறியே. 

நாங்கள் மக்களுக்காக அல்லது மற்றவர்களின் பார்வைக்கு மட்டுமென்று பொய்யான காட்சிகளை உருவாக்கி காட்டலாம். ஆனால் நாம் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் எல்லோருக்கும் மனச்சாட்சி ஒன்று இருக்கின்றது. எனது மனச்சாட்சிக்கு நான் தான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -