முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, எதிர்வரும் பொதுத்தேர்தலூடாக மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முனைப்புக் காட்டும் ‘மஹிந்த விசுவாசிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் களமிறக்க முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கத் துடிக்கும் மஹிந்த விசுவாசிகளான, முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்சச, வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, தினேஷ் குணவர்தன, திஸ்ஸ விதாரண மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரே இவ்வாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு வலை வீசியுள்ளனர்.
மஹிந்தவை முன்னிறுத்தும் இத் தேர்தலில் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் களமிறங்கும் பட்சத்தில் தமது கூட்டணிக்கு அது வலுச் சேர்க்கும் என மேற்படி மஹிந்த விசுவாசிகள் நம்புவதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நுகேகொடையில், எதிர்வரும் 18ம் திகதி இவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்திற்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது