பி. முஹாஜிரீன்-
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் கிராமங்களில்; முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று (15) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் விசேட உத்தரவுக்கமைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் உட்பட உயரதிகாரிகளும், பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதிநிதிகளும், துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, அட்டாளைச்சேனை பொதுச் சந்தையை அபிவிருத்தி செய்வதற்கான பொருத்தமான இடத்தை ஆராயும் வகையில் பிரதேச சபை மற்றும் பதிய சந்தைக் கடடடம் அமைந்தள்ள வளாகத்தை சந்தைக் கட்டம் அமைக்கும் வகையில் அதன் அமைவிடத்தை தீர்மானித்தல் அல்லது பிரதேச செயலகம், பிரதேச சபை உள்ளடங்கிய அரச நிர்வாக மற்றும் பொது நிறுவனங்களை ஒரு குறித்த இடத்தில் நிருவாகத் தொகுதிகள் அடங்கியதாக நகர்த்துவதன் மூலம் பிரதேச செயலகம் அமைந்தள்ள இடத்தை சந்தைத் தொகுதிக்காக ஒதுக்கி அபிவிருத்தி செய்தல் போன்ற முன்மொழிவுகள் ஆலோசனைகளாக வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.
மேலும், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்தி செய்வதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானம், பாலமுனை, ஒலுவில் பொது விளையாட்டு மைதானங்கள், கோணாவத்தை ஆற்றை அண்டிய பிரதேசங்கள், கடற்கரைப் பூங்கா, பிரதேச சபையின் புதிய கட்டட வளாகம், பிரதான பாதை அபிவிருத்தி, மாநாட்டு மண்டபம், சந்தை நிர்மாணம், பொழுது போக்கு பூங்காக்கள் போன்றவற்றை நிர்மாணிப்பதற்காக அரச காணிகள் பற்றாக் குறையாக இருப்பதால் தேவையான அரச காணிகளைப் பெறல் அல்லது பொருத்தமான இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட தேவையான காணிகளை சுவீகரித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய அனைத்துத் துறைகள் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதான நிரந்தர திட்டமிடலை மேற்கொண்டு அதற்கான வரைபடங்களைத் தயாரித்து முன்னரிமைப்படுத்தப்பட்ட அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இங்க தீர்மானிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் தேவைப்படுமிடத்து விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பது தொடர்பாக கோரிக்கை விடுக்கவும் இங்கு கலந்தரையாடப்பட்டது.
மேலும், இப்பிரதேச பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக பல்வேறு கருத்தக்கள் முன் வைக்கப்பட்டன. அவை தொடர்பாக சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் அடங்கலான பிரதேச முக்கியஸ்தர்கள் துறைசார்ந்தவர்களை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கும் இங்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)