திருகோணமலை கடல் பிரதேசத்தில் வெளிமாவட்டத்தினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது தொழில் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனைத் தடுப்பதற்கு மீன்பிடி கடல்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
குச்சவெளி ஜாயா நகர், மஸ்ஜிதுல் ரப்பானி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (23) தம்மைச் சந்தித்த உள்ளுர் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அமைச்சருடன் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர், முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸ், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினரும், போக்குவரத்து பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எம்.ஐ.எம்.ஆஷீக் மற்றும் மீனவர் சங்கத்தினரும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.
திருகோணமலை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கரையோரப் பிரதேசங்களில் வெளிமாவட்டங்களிலிருந்து பருவகால மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரால் இப்பிரதேசங்களில் வசிக்கும் உள்ளுர் மீனவர்கள் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுவதால் குறிப்பிட்ட கடல் பிரதேசத்தில் அவர்களை மீன்பிடிப்பதில் ஈடுபடுவதற்கு தடை விதிக்குமாறு குச்சவெளிக்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து வந்து கரையோரத்திற்கு அண்டிய பிரதேசங்களில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்கியிருக்கும் வாடிகளில் சட்டவிரோதமாக கசிப்பு மதுபானம் வடிக்கப்படுவதாகவும், அதனால் உள்ளுர் இளைஞர்கள் மதுபாவனைக்கு பழக்கப்பட்டுவிடும் அபாயம் நிலவுவதாகவும் உள்ளுர் மீனவர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். இதனால் கலாசாரப் பாதிப்பு உண்டாவதாகவும் அவர்கள் அமைச்சரிடம் கவலை தெரிவித்தனர்.
வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மீனவர்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ள 28 மீனவர்கள் சங்கங்களின் உறுப்பினர்கள் சார்பில் பிரஸ்தாப மீனவர் சங்கங்களின் ஒன்றியத்தின் செயலாளரும், குச்சவெளி ஜாயா நகர் மீனவர் சங்கத்தின் செயலாளருமான ஏ.ஆர்.சமீம் அமைச்சர் முன்னிலையில் நிலைமையை விளக்கிக்கூறியதோடு, உரிய ஆவணங்களையும் காண்பித்தார்.
இம்மாதம் 12ஆம் திகதி இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்தின் முன்னாள் மேற் கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் அன்று மாலை ஸ்தலத்திற்கு வருகை தந்த திருகோணமலை மீன்பிடி உதவிப்பணிப்பாளர் திரு. சுமரதூங்க மற்றும் பிரதேச செயலாளர் திரு. என். தயாபரன் ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதாக கூறிச் சென்றுள்ளனர்.
ஆயினும் இதுவரை உருப்படியாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி திருகோணமலை மீன்பிடி அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உள்ளுர் மீனவர்கள் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் ஹக்கீம், பிரதியமைச்சர் தௌபீக் ஆகியோர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாகவே இராஜாங்க அமைச்சரின் செயலாளரும், மீன்பிடிப் பதில் பணிப்பாளருமான நிமல் ஹெட்டியாராச்சி, திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவிப் பணிப்பாளர் சமரசிங்க ஆகியோருடன் அமைச்சர் ஹக்கீம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெளிமாவட்ட மீனவர்கள் திருகோணமலை தொகுதி கடல் பிரதேசத்தில் மீன்பிடிப்பதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகள் ஏற்படக் கூடிய சூழ்நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்டார்
.jpg)
.jpg)