M.S.M.பாயிஸ்- சவூதி அரேபியா
காத்தான்குடி கடற்கரை வீதியில் கம்பீரமாக வீற்றிருந்த முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலை பாலஸ்தீனம், ஜெரூசலம் நகரில் அமைந்துள்ள 'அல் அக்ஸா' பள்ளிவாயல் மாதிரி வடிவில் கட்டித்தருவதாக கூறி கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது பிரதேச மக்களின் வாக்குகளை கவர்வதற்காக உடைத்து தரைமட்டமாக்கிய சகோதரர் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. அவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்பு அப்பள்ளிவாயலை பூரணப்படுத்தி தரவேண்டும் என அப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா, தஃவா அமைப்புகள் என்பன பாரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும்!
ஏனெனில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்பு சகோதரர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படப்போவதில்லை. (இன்ஷா அல்லாஹ்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டுப்பிள்ளையாக, பொருளாதார பிரதியமைச்சர் என்ற பொறுப்புவாய்ந்த உயர் பதவியை வகித்தபோதே அப்பள்ளிவாயல் வேலைகளை பூரணப்படுத்தாத ஹிஸ்புல்லாஹ் அவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்படாத பட்சம் எவ்வாறு அப்பள்ளிவாயலின் வேலைகளை பூரணப்படுத்துவார்?
மஹிந்த ராஜபக்ஸ உட்பட பல அதிதிகளால் மூன்று முறை கோலாகலமாக அடிக்கல் நாட்டப்பட்ட அப்பள்ளிவாயல் வேலைகள் வெறும் கண்துடைப்புக்காக மந்தகதியில் பல வருடங்களாக நடைபெற்றுவருவது ஊரறிந்த விடயமாகும்.
அப்பள்ளிவாயலுக்குரிய கோடிக்கணக்கான ரூபாய் கட்டட நிதி ஹிஸ்புல்லாஹ் தரப்புக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சவூதி அரேபியாவில் இருந்து அவரது மதனி சகா ஒருவரால் சேகரித்து அனுப்பப்பட்டுவிட்டது. அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.
குறித்த பள்ளிவாயல் எப்போது பூரணப்படுத்தப்பட்டு தொழுகைக்காக மக்களிடம் கையளிக்கப்படும் என சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களால் குறித்ததொரு திகதியை உறுதியாக கூற முடியுமா?என கேட்க விரும்புகிறேன்!
