இலங்கைத் திருநாட்டில் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்களுடன் ஒற்றுமையுடனும் புரிதலுடனும் செயற்பட்டு வரும் இரு இனங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் என்றால் மிகையாகாது.
இன்று இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்திலிருந்து ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தல் நடை பெறப்போகின்றது. எதிர் வரும் எட்டாம் திகதிய ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அல்லது மைத்திரி வெற்றி பெறலாம். ஆனால் வெற்றியின் பின்னரான அரசியலிலும் மாற்றங்களிலும் தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒன்று பட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும். அதனால் இக்காலத்தில் இக்கட்டுரையினை வரைவது சிறந்ததொன்று என நினைக்கின்றேன்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இன்றோ? நேற்றோ ஒற்றுமைப் பட்டவர்கள் அல்லர்.குடியேற்ற வரலாற்று ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்கின்றார்கள். இவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தமைக்கு சான்றாதாரங்கள் இன்றும் எம் மத்தியில் மிளிர்ந்து வரும் கலாச்சார ஊடுறுவல், பண்பாட்டுப் பாரம்பரிய நகர்வுகள், ஊரின் குடிகளும் குடியேற்றங்களும் இன்றும் சான்றாக காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் தென்கோடி பொத்துவில் பிரதேசம் தொட்டு யாழ்ப்பாணம் பருத்தித் துறை வரை ஊரின் அமைவிடங்களை நோக்கினால் முஸ்லிம் கிராமங்களும், தமிழ் கிராமங்களும் பிட்டும் தேங்காய்பூவும் போல அமைந்திருக்கின்றமை மிக முக்கியமான சான்றாதாரமாகும்.
இரு இனங்களும் ஒற்றுமைப் பட்டு வாழ்ந்தமைக்கு காரணம் இவர்களின் பேச்சு மொழி ஒன்று என்பதுதான். தமிழர்களும் முஸ்லிம்களும் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்று பட்டவர்கள்.
இந்த நாட்டில் தேசிய அரசியல் நிறுவும் வரையிலும் தமிழ் முஸ்லிம் உறவு வலுவுடைய தொன்றாக காணப்பட்டுள்ளமையினை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. முஸ்லிம்கள் தமிழர்களோடு ஒற்றுமையுடன் வாழ்ந்தமைக்கான மற்றுமொரு மிக முக்கிய சான்றாதாரம் முஸ்லிம்களின் சில பெயர்கள் தமிழர்களின் பெயர்களோடு ஒத்துப் போகின்றது. முஸ்லிம்களின் பெயர்களில் இன்றும் சலீம்,கமால்,சீனிமுகம்மது,ரோஜா, ராஜா, பொன்னி,தங்க ராசா... இன்னும் சில பெயர்கள் தமிழர்களின் பெயர் சாயலில் காணப்படுகின்றது.
தமிழர்களின் சில கலாசாரப் பண்புகள் இன்றும் முஸ்லிம் சமூதாயத்தில் மார்க்கம் எனும் போர்வையில் சிலர் பின்பற்றுகின்றனர். தமிழ் இலக்கியத்தில் கூட முஸ்லிம்களை விட்டு இலக்கியம் பேச முடியாது. முஸ்லிம் இலக்கியத்தில் தமிழரை புறந்தள்ளி பேச முடியாது. கிழக்கு மாகாண தமிழ்க் கவிஞன் நீலாவனன் தமது கவிதைகளில் அதிகமான வார்த்தைகள் முஸ்லிம்களின் பேச்சு வழக்கு சமயப் பெயர்களை சேர்த்திருக்கின்றார். உதாரணம் இன்று உனக்கும் சம்பளமா? எனும் கவிதையில் .............அல்லாஹ் போல் அணுதினமும் சில்லறைக்கு கடன் தந்த அலியார் நானா.....என்று பாடியிருக்கின்றார். மருதூர் கொத்தனின் படைப்புக்களில் ஏராளமான தமிழ் கலாசாரம் மத கிரியை புராணச் செய்திகள் காணப்பட்டுள்ளமையினை இலக்கிய உலகம் மறந்து விட முடியாது.
இப்படி ஒற்றுமைப்பட்டு வாழ்ந்தவர்களை பிரித்தவர்கள் யார் ? தனது சுய நலத்திற்காக வேண்டி அரசியல் செய்த செய்கின்ற வங்குரோத்தவர்கள்தான்.இதனால் பிற்பட்ட காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு நிலை தேக்க நிலை கொண்டு மாற்றானை பார்க்கின்ற நினைப்புகள்.......இந்த உறவு நிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. பிரித்தாளும் அரசியல் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமை படச் செய்யக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.
இன்றைய அரசியலில் தமிழர்களுக்குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் சில நபர்கள் நச்சுக்ருத்துக்களையும் , விசமத்தனமான கருத்தினையும் துண்டுப் பிரசுரங்கள், ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடுகின்றனர்.வெளிப்படுத்தி வருகின்றனர்... இவ்வாறு தமது கருத்துக்களை கூறுவதன் மூலம் தன்னுடைய பிரித்தாளும் தந்திரத்தினால் சுய அரசியலில் வளர்ச்சியடையலாம் என எதிர் பார்க்கின்றார்கள். ஆனால் இந்நிலை தொடருமாக இருந்தால் தமிழ் முஸ்லிம் உறவு பாதிப்படைவதுடன் மாத்திரமன்றி இந்த நாட்டில் எதிர் காலத்தில் பாரிய சவால்களுக்கு இரண்டு இனங்களும் உட்படும். தமிழர்களும், முஸ்லிம்களும் மனக் கசப்புக்கள் மற்றும் குரோத நிலையினை மறந்து ஒரு பொதுவான உடன் பாட்டில் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாகும்.
எம்.ஏ. தாஜகான்.
B.A. M.A. PGDE.
ஊடகவியலாளர்.
.jpg)