நேர் கோட்டில் வந்த ஊர்தியை
குறுக்கு கோட்டில் வைத்து
விசாரணை செய்து கொண்டிருந்தார்கள்
அவர்களுக்கான வசூல் வந்து சேரும் வரை
போக்கு வரத்தில் என்னிடமும் உங்களிடமும்
கறந்த,தெரிந்த சில.. புள்ளிகள்
இத் தெருவில்
வெற்று மதுக் குப்பிகள்
வீசிக் கிடப்பது காண்கையில்
ஊகிக்க முடிகிறது
தறி கெட்டலையும் தவறணை பிசாசுகள்
புகைந்தபடி நிலத்தில் கால்
பட்டும்,படாமலும்-சற்றுமுன்
காற்றையும் மாசு படுத்தி
கடந்திருக்க வேண்டும் என..
வெத்திலை,பாக்கு சாப்பிட்ட
சில... சுண்ணாம்புகள்
போறம்போக்கு இடம் என்ற போக்கில்
காவி படிந்த பற்களை களற்றி விட்டு
போயிருந்தார்கள்
ஓய்வு பெற்ற சுகாதார ஆசான்
பால்காரன் வரும்வரை
கன்றுகளை வீட்டில் கட்டி
காராம் பசுக்களை தெருவில்
அவிழ்த்து விட்டிருந்தான்
பனி மேய்ச்சல் போய் வாங்க-என்ற
பாவனையில்..
யாரோ ஒருத்தி
வாசலை கூட்டி வந்து
வீதிக்கு விட்டிருந்தாள்
புதினம் பார்க்க
இப் பக்கம் யாராவது
தெரிந்தோ தெரியாமலோ
வயசுக்கு வந்திருக்க வேண்டும்
போதிசெய்யாமல்
துவட்டப் பட்டு கிடக்கின்ற
“நப்கீன்”களின் சாட்சிக்கு ஏதுவாக
அழகாய் இருந்த சுவர்
அசிங்கமாகி தெரிகையிலே தெரிகிறது
கோதுமை கரைசலுடன்
கட்சி “போஸ்ட்டர்கள்” ஒட்ட
இருவேறு கூட்டம்
ஒன்றின் மேல் ஒன்றை ஒட்டியபடி
இவ்வழி கடந்திருக்கின்றன என்று
பிச்சைக்காரன் மட்டுமல்ல,
பஸ்ஸை தவறவிட்ட பயணியும் கூட
படுத்துறங்கி பசியாறும் மடமான
நிழல் வாகை நிழலில்
சிற்றெறும்பின் யோசனையேனும்
தோன்றாத ஒரு”பரதேசி”
சிறுநீர் கழித்திருக்கிரான்
சுத்தப் படுத்துவதாயின்
எங்கிருந்து தொடங்குவது
என்ற கேள்வியுடன்
முற்றுப் பெறுகிறது தெரு!
><><><><><><><><><><><><

0 comments :
Post a Comment