ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து யாரும் எதிரணிக்கு செல்லமாட்டார்கள் என்று நம்புகின்றோம். ஆனால் யாருக்காவது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அவர்கள் எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. அழுத்தங்கள் வரலாம். வந்தால் சில வேளை போகலாம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
எனினும் எங்களுக்கு அரசாங்கத்தில் அழுத்தம் இல்லை. அழுத்தம் உள்ளவர்கள் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கலாம். அழுத்தம் உள்ளவர்கள் சில வேளை போகலாம். அதனை நான் இங்கு உறுதியாக கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி 12 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது யாராவது ஆளும் கட்சியிலிருந்து விலகுவார்களா?
பதில் அவ்வாறு நடக்காது என்று நம்புகின்றோம். ஆனால் அழுத்தங்கள் ஏற்ப்ட்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அரசியல் பொருளாதார அழுத்தங்கள் ஏற்படலாம். எதிரணியினர் இவ்வாறு கூறுவார்கள். முதலில் 60 பேர் வர இருப்பதாக கூறினர். பின்னர் 40 பேர் உள்ளதாக கூறினர். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? இதனை தொடர்ந்தும் கூறுவார்கள். 12 ஆம் திகதிக்கு பின்னர் 24 ஆம் திகதிக்கு வருவார்கள் என்று கூறுவார்கள். இது வழமையான விடயமாகும்.
கேள்வி அழுத்தம் என்று ஏன் கூறுகின்றீர்கள்?
பதில் உங்களுக்கும் அழுத்தம் இருக்கலாம். அதனை நீங்கள் கூறாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அரசாங்கத்தில் அழுத்தம் இல்லை. அழுத்தம் உள்ளவர்கள் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கலாம். அழுத்தம் உள்ளவர்கள் சில வேளை போகலாம். அதனை நான் இங்கு உறுதியாக கூற முடியாது. இங்குள்ள மூன்று பேர் குறித்து உறுதியளிக்கலாம். ஆனால் வெளியில் உள்ளவர்களுக்காக நான் எதனையும் கூற முடியாது.
ஹிருணிகா போகமாட்டார்
கேள்வி மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா எதிரணிக்கு செல்வாரா?
பதில் அவர் அப்படிசெய்யமாட்டார் என்று நம்புகின்றோம். ஹிருனிகா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அவரது தந்தையும் நானும் பாடசாலை நண்பர்கள். ஒன்றாக பாராளுமன்றம் வந்தோம். இந்நிலையில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த அவர் முயற்சிக்கமாட்டார் என்று நம்புகின்றோம்.

0 comments :
Post a Comment