![]() |
மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
|
இன்ஷா அல்லாஹ், 2015 ஜனவரி எட்டாம் திகதி முதல் இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு அறபு வசந்தம் பிறக்கும்.
அரசியல் வாதிகளின் குறுகிய ஆயுட்கால அபிலாஷைகளை மாத்திரம் மையப்படுத்திய தேசிய மற்றும் சமூக அரசியல் எமது நிகழ்காலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளமை இருண்ட எதிர்காலத்தை எமக்கு மாத்திரமன்றி எமது சந்ததியினருக்கும் ஏற்படுத்திவிடுமோ என அஞ்சுகின்ற தீர்க்கமான ஒரு காலகட்டத்தையே நாம் கடந்து கொண்டிருக்கின்றோம்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது மாத்திரமல்லாது முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொடர்ந்து இடம்பெறப்போகும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் தீர்மானிக்கின்ற முதற்கட்ட போராட்டமாக இருக்கப்போகிறது.
அது எங்களுக்கு வெறும் "அரசியல்" மாத்திரமன்றி " வாழ்வியல்" "சமூகவியல்" "மத கலாச்சார இயல்" என எமது எதிர்கால சந்ததியினரின் இருப்பு, பாதுக்காப்பு, அடிப்படை உரிமைகள், சமாதான சகவாழ்வு என பல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
முஸ்லிம் சமூகத்தை முச்சந்தியில் நிறுத்தி எமது அபிலாஷைகளையும் உரிமைக் கோஷங்களையும் ஏலத்தில் விட்டு சாக்கடை அரசியல் சூதாட்டம் செய்த செய்கிற பல குட்டி சுல்தான்களை களை எடுக்கின்ற முதற்கட்ட போராட்டமாகவும் ஜனாதிபதித் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
தேசத்தின் நலன்களை எந்தவொரு தனிநபரும் குடும்பங்களும் குத்தகைக்கு எடுத்து குட்டிச் சுவராக்க எவ்வாறு அனுமதிக்க முடியாதோ அதே போன்றே முஸ்லிம் பிரதேசங்களின் அரசியல் அபிலாஷைகளை எந்தவொரு குட்டி சுல்தான்களினதும் சூதாட்ட அரசியலுக்காக அடகு வைக்க முடியாது.
வெற்றி காவு கொள்ளப்படலாம் என்ற ஒரே அச்சத்தில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அபிலாஷைகளுக்கு குறுக்கே நின்று தம்மை சாணக்கியர்கள் என்று மார் தட்ட காத்திருப்போருக்கு ஜனாதிபதித் தேர்தலுடன் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்பதில் ஐயம் இல்லை, ஏனெனில் தொடர்ந்துவரும் பாராளுமன்ற மாகாண சபைத் தேர்தல்களில் அவர்களது தலைவிதியை நிர்ணயிக்க புதிய தலைமுறையினர் காத்திருக்கின்றார்கள்.
தமது கையாளாகாத் தன்மைகளை அப்பட்டமாக அம்மனப்படுத்தியுள்ள போலிப் போராளிகளை, தொடர்ந்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீடுகளில், வீதிகளில் ஓய்வெடுக்கச் செய்து புதியதோர் தலைமை தலைமுறையினரை அறிமுகம் செய்யா விடின் தேசமும், சமூகமும் வேண்டி நிற்கும் சீர்திருத்தப் போராட்டங்கள் நிறைவடைய மாட்டாது.
மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள்.
வாக்கு என்பது "சாட்சியமாகும்",
வாக்கு என்பது "தெரிவு" ஆகும்,
வாக்கு என்பது "ஆயுதமாகும்",
வாக்கு என்பது "தீர்ப்பு" ஆகும்,
வாக்கு என்பது "வகிபாகம்" ஆகும்,
வாக்கு என்பது "துணைபோதல்" ஆகும்,
வாக்கு என்பது "சோதனை" ஆகும்,
வாக்கு என்பது மொத்தத்தில் "அமானிதமாகும்"
வன்முறைகளை நாடாது ஜனநாயக வழிமுறைகளை மாத்திரமே நம்பியுள்ள நாம் அவற்றையும் கோட்டை விடலாமோ ?
போராட்டங்கள் சூதாட்டங்கள் ஆகலாம், ஆனால் ஒருபோதும் சூதாட்டங்கள் போராட்டங்களாக முடியாது.
நமது போராட்ட அரசியல் சூதாட்ட அரசியலாய் மாறி இன்று "பிச்சை வேணாம் நாயை பிடி" எனுமளவு கேவலமாய் சராணகதி நிலையை அடைந்து நாறிக் கிடக்கிறது.
முஸ்லிம் சமூகம் அரசியலில் அனாதைகள் என்றோம் பின்னர் அரசியல் அகதிகள் ஆனோம் நமது தலைமைகள் இன்று அரசியல் கைதிகளாய் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
தேசிய அரசியலில் விடியலைத் தேடும் நம் சமூகத்தின் புதிய தலைமுறையினர் உள்வீட்டில் அரசியல் வியாபாரிகளிடமிருந்து விடுதலை கேட்டு நிற்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் சோரம் போன சோனகத் தலைமைகளால் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
தேசிய அரசியலில் எப்படிப் போனாலும் முஸ்லிம் அரசியலில் ஒரு அறபு வசந்தம் ஏற்படத்தான் போகிறது, அது ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீண்டு செல்லாலாம் பல குட்டி சுல்தான்களுக்கு ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது. இன்ஷா அல்லாஹ்
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment