ஊடகவியலாளர் வித்தியாதரனின் நூல் வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் ஆற்றிய முக்கிய உரை!


ஊடகப்பிரிவு-

ரு வித்தியாசமான ஆளுமையுள்ள நண்பர் வித்தியாதரன் திறமையான மூத்த ஊடகவியலாளர் ஒருவர் என்பதற்கு சான்று பகர வேண்டிய அவசியமில்லை. 1979 ஆம் ஆண்டு அவர் பின்னர் தினபதியில் இருந்த காலத்தில் 1980ஆம் ஆண்டு நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்த போது, அவரும் சட்டக் கல்லூரிக்கு அனுமதி பெற்று வந்து, பின்னர் தனது சட்டக் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 

1983 ஆம் ஆண்டு கலவரத்துடன் அவர் யாழ் குடா நாட்டிற்குச் சென்றதோடு அவரது ஊடகப் பணியின் மிக சோதனைக்குரிய அந்த இரண்டரை தசாப்த காலம் ஆரம்பித்தது. 

ஏறத்தாழ மூன்று தசாப்த கால அவரது அந்த ஊடகப் பணி மிகவும் சவாலுக்குரியதாக இருந்தது. அவரது எழுத்துத் துறையை செழுமைப்படுத்திக் கொள்வதற்கு ஊடக ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் ஐயா போன்றவர்கள் உதவியிருக்கிறார்கள். ஒரு சிறந்த பத்திரிகையாளராக மிளர்ந்து கொண்டிருக்கும் அவர் அவரது அனுபவங்களை இந்த 'என் எழுத்தாயுதம்' என்ற நூலில் தொட்டுச் செல்வதை நான் காண்கிறேன். 

ஆரம்பக் கட்டத்திலேயே பயங்கரவாத தடைச் சட்டத்தின் அறிமுகத்தோடு, அந்த காலப் பிரிவில் தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சிரேஷ்ட சட்டத்தரணிகளாக இருந்த பி.சி. குலநாயகம், நடேசன் கீயூஸி போன்றவர்கள் அந்தக் கைதிகள் சார்பில் வாதாடிய போதெல்லாம் நாங்கள் சட்ட மாணவர்களாக சென்று அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த போது நண்பர் வித்தியாதரனும் காணப்பட்டார். 

நான் சட்டக் கல்லூரி தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த பொழுது, பத்திரிகையாளர்களுடன் எனக்கு ஏற்பட்ட நட்பு அரசியல் வாழ்விலும் பயனுள்ளதாகத் தொடர்ந்தது. தாரகி சிவராம், இன்று கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ். ஜெயராஜ் ஆகியோர் அப்பொழுது அடிக்கடி சட்டக் கல்லூரி பக்கம் தலைகாட்டுவது வழக்கமாக இருந்தது. டி.பி.எஸ். ஜெயராஜ் வீரகேசரியில் சிலகாலம் இருந்தார். 

அவர்களோடு நண்பர் வித்தியாதரன் போன்றவர்கள் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு, இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பு சாமான்யமானதல்ல. உயிராலும், உடலாலும், உடைமைகளாலும் பல தியாகங்களைச் செய்த ஊடகவியலாளர்கள் பலரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. 

பத்திரிகை துறையைப் பாதுகாப்பதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த 'சட்டர்டே ரிவீவ்' அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டபொழுது, எஸ். நடேசன் கியூஸி ஏறத்தாழ 40 நாட்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்தேர்ச்சியாக வாதாடி வெற்றி பெற்றதை பத்திரிகை சுதந்திரத்திற்கு கிடைத்த மாபெரிய வெற்றி என்று நான் கூறுவேன். 
நண்பர் வித்தியாதரனுடைய இந்த அனுபவப் பதிவுகளிலே இது ஒருபகுதி மாத்திரம் தான். நெருக்கடி நிறைந்த சூழலில் செய்திகளைப் பிரசுரிப்பதில் இருந்த சிக்கல்களையெல்லாம் தாம் எவ்வாறு தாண்டி செல்ல நேர்ந்தது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் இந்த நூல் இன்னும் இரண்டு தொகுதிகளாவது வெளிவர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

சமாதானப் பேச்சுவார்த்தைகள், இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் என்பவற்றைப் பொறுத்தவரை ஊடகவியலாளர் ஒருவராக தாம் கண்டறிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தாம் இன்னும் எழுத எண்ணியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

எனது அரசியல் வாழ்விலும் நண்பர் வித்தியாதரனுடனான தொடர்பு பற்றி கூறப்போனால், பல விடயங்களை இரகசியமாக முன் கூட்டியே அறிந்துகொள்ளும் அளவிற்கு ஊடகவியலாளர் ஒருவர் என்ற அடிப்படையில் மிக நேர்மையாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவை பேணிக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் காட்டிய சிரத்தையின் காரணமாக என்னோடு அவ்வப்போது சில அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் நன்றியோடு நினைவுகூர வேண்டும்.

பெங்கொக், ஜப்பான், பேர்லின், ஒஸ்லோ போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளோடு பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த பொழுது, புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தோடு நெருங்கிய தொடர்பாடல்களை கொண்டிருந்த ஒருவர் என்ற அடிப்படையில், அரசாங்க தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த என்னோடு சில விடயங்களை அந்தரங்கமாக பகிர்ந்து கொள்ளும் ஒருவராக – தமிழ், முஸ்லிம் உறவை பேண வேணும் என்பதில் நாட்டமுள்ள ஊடகவியலாளர் ஒருவராக, விமர்சனப் பாங்கில் ஓர் ஆசிரியர் தலையங்கத்தை எழுதினாலும் கூட அல்லது ஊக்குவிப்பதற்காக சில செய்திகளை பிரசுரிக்க முற்பட்டாலும் கூட சுயமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் போன்றோருடன் கதைக்கும் ஒரு வழக்கம் அவருக்கு இருந்தது. 

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, நாங்கள் சம்மாந்துறையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு தேர்தலுக்கு இரண்டு நாட்கள் அதாவது 48 மணித்தியாலங்களே எஞ்சியிருக்கத்தக்கதாக நண்பர் வித்தியாதரனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 

கிளிநொச்சியை நோக்கி வடக்கிலிருந்து வரும் வாக்காளர்கள் கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு பயணிப்பதற்கு வசதியாக இருநூறு பஸ் வண்டிகளை ஏற்பாடு செய்திருக்கத்தக்கதாக, அவர்கள் புலிகளால் தடுக்கப்பட்டிருப்பதால் அவ்வாறு வாக்களிக்க வருவது சாத்தியமில்லை என்ற செய்தி எட்டியது. உடனடியாக நான் திரு. மலிக் சமரவிக்கிரம ஊடாக நிலைமையை திரு. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்து விளக்கினேன். இறுதியில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாமென்பதில் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திய அந்தப் சம்பவம் இப்பொழுது எனது நினைவிற்கு வருகிறது. 

புலித் தலைமையின் நெகிழ்ச்சியற்ற போக்கு, குறுகிய நோக்கம் , நிதர்சனத்தை பார்த்தும் மறுத்த பிடிவாதம் என்பன இனத்தை பேரழிவிற்குள் தள்ளின என்பதை ஏற்றுக்கொள்ள எவ்வளவு காலமாகும்? அன்ரன் பாலசிங்கம் இறுதி நாட்களில் தன்னோடு பகிர்ந்து கொண்ட சிந்தனைகளை வெளியிட வித்திக்கு எவ்வளவு காலம் செல்லும்? தன்னை சுயபரிசோதனை செய்ய மறுத்து, அடம் பிடிக்கும் இனம் எவ்வாறு தான் வீழ்ந்த படுகுழிக்குள் இருந்து மீண்டு வந்து முன்னேறப் போகின்றது? சாத்தியமா, எனக்கு புரியவில்லை என்று மிகக் கவலையோடு கலாநிதி பத்மநாதன் இந் நூலின் அணிந்துரையில் எழுதியிருப்பதை நான் பார்த்தேன். 

யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழ்ந்து வந்த நிருவாக மாற்றங்களின் ஊடாக அவர் எவ்வாறு 'உதயன்' பத்திரிகையை முன்கொண்டு சென்றார் என்பது சம்பந்தமான விடயங்கள் கவனிக்கத்தக்கவை. ஆரம்பத்தில் 1985 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சிவில் நிருவாகம் ஓரளவிருந்த பொழுது, நீதிமன்றங்கள் செயற்பட்டுக்கொண்டிருந்த பொழுது ஒரு வருட காலத்துக்குள்ளாக அவையெல்லாம் செயழிலந்து பலவிதமான ஆயுதக் குழுக்கள் தங்களுடைய அதிகாரத்திற்குள் யாழ் குடா நாட்டை கொண்டு வந்த சந்தர்ப்பங்களிலும் அதன் பிறகு புலிகள் ஏனைய குழுக்களை அழித்துவிட்டு தங்களது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்த சந்தர்ப்பத்திலும், இந்திய இராணுவத்தின் வருகைக்குப் பிறகு சமாந்திரமாக இந்திய இராணுவமும் புலிகளும் யாழ்ப்பாணத்தில் சிவில் நிருவாகத்தை சிக்கலில் மாட்ட வைத்த நிலையிலும் இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தனது பத்திரிகை துறையைப் பற்றி பட்டறிவோடு மிக நேர்மையாகவும், பக்குவமாகவும் துணுக்குகளோடு எங்களோடு பகிர்ந்து கொண்டாடுகிறார். 

இறுதியாக அவரது உள்மன விருப்பமொன்றை அதாவது, சத்திய வேள்வியாக கருதி கடமையெனக் கூறுகிறார். 'உதயன்' அதன் உதய வேளையில் பக்கம் சாராது எடுத்த தனித்துவத்தை தனி நபர்களின் நலன்களுக்காக விலைபேசி விற்றுவிடாமல் நேர்மையாகச் செயல்படுவதே தனது தாழ்மையான அபிப்பிராயம் என அவர் கூறுகிறார். உதயன் வெறும் வர்த்தக நிறுவனம் அல்ல. அது வரலாற்று ஓட்டத்தின் ஓர் எழுச்சியின் சின்னமாக பரிணமித்து அதன் தனித்துவம் பேணப்படுவது என்னைப் போன்ற பணியாளர்களின் ஆழ்மன விருப்பம் அதுவே என்கிறார். பத்திரிகையின் செல்நெறி பற்றி இவ்வாறு அவர் கூறிச் செல்கின்றார். 

என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகை துறை என்று வருகின்ற பொழுதும், அரசியல் என்று வருகின்ற பொழுதும் இன்று பரவலாக பேசப்படுகின்ற ஊடகச் சுதந்திரம், ஊழல் ஒழிப்பு போன்ற பலவிடயங்களுக்கு அத்தியாவசியமான ஒரு விடயம் அதாவது எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு முக்கியமான தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், மக்களுக்கு வாக்குறுதியளிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது. 

அதாவது, தகவல் அறிவதற்கான உரிமை சம்பந்தமான சட்டம் என்பது மிக முக்கியமானதாகும். இன்று சீரழிந்து போயிருக்கின்ற நல்லாட்சியை சீர் செய்வதற்கு அது இன்றியமையாதது. அந்த சட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அது எங்கள் எல்லோருக்கும் ஓரளவு நிம்மதியை தரக் கூடியதாக இருக்கும். 

தனது அனுபவங்களை தனது 'எண் எழுத்தாயுதம்' என்ற இந்த நூலின் ஊடாக எங்களோடு பகிர்ந்து கொண்ட நண்பர் வித்திக்கு நன்றிகள்! 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :