நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதிகாரப்பகிர்வினூடாக நாட்டினை முன்னெடுத்து செல்ல ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் பொது நோக்கத்திற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஹெலஉறுமயவின் இணைத் தலைவர் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் நாளை பொது மேடையில் ஒன்று கூடுகின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் எதிரணிகளின் பொதுக் கூட்டணியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்தி ப்பு நேற்று கோட்டே சொலிஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன் போதே சகல எதிர்க்கட்சிகளினாலும் இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
மேலும் இச் செய்தியாளர் சந்திப்பில் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர், ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள், ஜனநாயகக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன் னணி, மௌபிம ஜனதா கட்சி, ஜனநாயக முன்னணி, சிஹல உறுமய,
ருகுணு ஜனதா கட்சி, ஐக்கிய மக்களின் முன்னணி சமகி சம்மேளனம், சுதந்திர ஊடக மையம், பலமு பெரமுன ஜனநாயக தேசிய முன்னணி தொழிலாளர் முன்னணி ஆகிய கட்சிகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மாதுலுவாவே சோபித தேரர்
இதில் கருத்து தெரிவித்த மாதுலுவாவே சோபித தேரர் இதில் கருத்து தெரிவிக்கையில்;
முழு நாடும் நிராகரித்துள்ள ஒரு அரசியல் அமைப்பினை இன்று அரசாங்கம் கொண்டு நடத்துகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதிகாரப் பகிர்வினூடாக நாட்டின் ஆட்சியினை முன்னெடுத்து செல்ல வேண்டும் என சகல எதிர்க்கட்சிகளும் அமைப்புக்களும் ஏன் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளும் கூட விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரின் சுயநல தேவைக்காக வேண்டி நாட்டினை மோசமான ஆட்சியில் கொண்டு நடத்துகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியே இந்த அரசியல் அமைப்பினை கொண்டு வந்தது. ஆனால் அவர்களே இன்று இந்த அரசியல் அமைப்பினை மாற்ற விரும்புகின்றனர். அதற்கும் அப்பால் மக்களே இவ் அரசியல் அமைப்பினை வெறுக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் ஏன் இதனை மாற்றியமைப்பதில் சிந்திக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இப்போதைக்கு எந்த தேவையும் இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இப்போது தேவைப்படுவதும் அனைவரும் எதிர்பார்ப்பதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் நீக்கத்தினையே. அதற்கு ஜனாதிபதி இணங்காவிடின் அதற்கு பின்னர் எமது மாற்று நடவடிக்கையினை கையாள நேரிடும். நிறைவேற்று முறைமையினை நீக்கும் நோக்கிலேயே நாளை 12 ஆம் திகதி சகல எதிரணிகளையும் அமைப்புக்களையும் ஆளும் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்புப் பேரணியினை நடாத்தவுள்ளோம். இதில் எமது நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கு எடுத்து சொல்வோம். அதன் பின்னர் ஜனாதிபதி மாற்றத்தினை ஏறந்படுத்தாவிடின் பொது எதிரணியினை தயார்படுத்தி அரசாங்கத்திற்கு சவாலான பொது வேட்பாளரை களமிறக்கி இந்த ஆட்சியினை கவிழ்ப்பதற்கு வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம். அரசியல் அமைப்பில் மாற்றம் சுயாதீன சேவைகளின் செயற்பாடு மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றம் என்ற பிரதான கோரிக்கைகளே எமது எதிர்பார்ப்பு. இதனை செயற்படுத்த பொது வேட்பாளருடன் எதிர்க்க தயாராகுவோம் எனத் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க
செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெ ளியிடுகையில்;
நிறைவேற்று முறைமையினை நீக்க வேண்டும். அதற்கான முதல் கட்டத்தினை இந்த பாராளுமன்றில் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினால் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் அதை செய்யுமானால் அதற்கு உடனடி வேலைத் திட்டங்களை செய்ய வேண்டும். எமது நோக்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து 17 ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதே. இந்த பாராளுமன்றில் அதற்கான சகல நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அது நடக்காவிடின் எமது அடுத்த கட்ட நகர்வினை முன்னெடுக்க நேரிடும். இன்று எமது சகல எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பும் 12 ஆம் திகதி எமது பேரணியும் அதற்கான ஆரம்பமாக அமையும். அதில் சாதகமான முடிவுகள் கிடைக்காவிடின் எமது அடுத்த செயற்பாடு அமையும். அதாவது தேர்தலின் மூலமாக மக்களின் ஆதரவுடன் இவ் நிறைவேற்று முறைமையினை நீக்க நேரிடும்.
தேர்தலும் சுயாதீனமாக இடம்பெறுமா என்பதில் சந்தேகம். ஏனெனில் அரசாங்கமே தேர்தல் தினத்தினை தீர்மானிக்கின்றது. யாப்பிற்கு முரணான தேர்தலை நடத்த திட்டமிடுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் ஊடகங்கள் என அனைத்தையும் முடக்கி விட்டார்கள். நாம் இவை அனைத்தையும் வென்றெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் பலத்தின் முன்னிலையில் மக்கள் பலம் இல்லை என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் ஜனாதிபதியின் பலத்திற்கு மேலான மக்கள் பலம் உள்ளது. அதனை நாம் வென்றெடுக்க வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தையும் சுயாதீன ?????? வென்றெடுக்க வீதிக்கு இறங்கி போராட நாம் தயார். அதற்காக நாம் அனைவரையும் இணைத்து ஒன்றிணைந்து செயற்பட தயார்.
சரத் பொன்சேகா
செய்தியாளர் மாநாட்டில் ஜனநாயக் கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா கருத்து வெளியிடுகையில்
பொது எதிரணியினை ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்று நடக்கின்றது. நானும் பொது எதிரணியினை அன்று ஒன்றிணைத்தேன். ஆனால் அதன் பின்னர் எனக்கு நடந்த விடயங்கள் மோசமானது. எனினும் இன்றும் மீண்டும் பொது எதிரணி உருவாகி வருகின்றது. சரியான பாதையினை தெரிவு செய்து நாட்டின் ஜனநாயகத்தினை வென்றெடுக்க நானும் ஒன்றிணைந்து செயற்படத் தயார். ஆனால் பொது வேட்பாளர் என்பது தூக்கு மேடையில் இருப்பதைப் போன்றது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் உள்ள சவாலான விடயம். எனவே, பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படும் போது சரியானவராகவும் தகுதியானவராகவும் இருக்க வேண்டும். அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல் மக்களும் சரியான முடிவினை எடுக்க வேண்டும். அரசியல் கலாசாரத்தில் பக்க சார்பான வ கையில் செயற்படாது நாட்டின் தேவையினையும் மக்களின் பலத்தினையும் சகல மக்களும் உணர வேண்டும். கட்சி நிறங்கள் கொள்கைகள் என்பவற்றினை மறந்து யார் சரியான பிரதிநிதி என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த அரசியல் கலாசாரத்தினையும் மாற்றியமைக்க மக்கள் முன்வர வேண்டும். அதேபோல் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் போது சரியானவரை தெரிவு செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தவறான தலைவரை தெரிவு செய்தால் அதற்கு நாம் ஆதரவு வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
அர்ஜுன ரணதுங்க
செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில்;
ஜனாதிபதி முறைமையினை மாற்றுவது அவசியமானதென கடந்த காலங்களில் இருந்தே சகல தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றது. நாம் கடந்த கால வரலாற்றினை மறந்து விடக் கூடாது. தனி நபரின் கொள்கையினை ஓரம் கட்டி நாட்டின் பொது கொள்கையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பொது நிகழ்ச்சி நிரலில் கைகோர்க்க வேண்டும். தனி நபர் யாராக இருந்தாலும் பொது கொள்கையினை வென்றெடுக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இன்று நல்ல ஆரம்பம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
செய்தியாளர் மாநாட்டில் மனோ கணேசன் கருத்து வௌியிடுகையில்;
இந்த ஊடக மாநாட்டில் நான் ஒரு தமிழ் கட்சியின் பிரதிநிதியாக கலந்துகொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு தமிழ் கட்சி என்பதைவிட, தமிழர்களையும் உள்ளடக்கிய இலங்கை மக்களின் பிரதிநிதியாகவே நான் இங்கே கலந்து கொள்கின்றேன் என்று நினைக்கின்றேன். ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக நாம் வாழவேண்டிய காலம் வந்துவிட்டது. சோபித தேரரின் வழிகாட்டலில் இங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் தருணம் வந்துவிட்டது.
சில நாட்களுக்கு முன்னர் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் இரத்தின தேரர் ஒரு முக்கிய விடயத்தை சொன்னார். 18ம் திருத்தத்திற்கு தாம் ஆதரவளித்ததை ஒரு தவறு என கூறினார். அதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். இது ஒரு நல்ல முன்மாதிரி ஆகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் அரசியல் தவறுகள் செய்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி தவறு செய்துள்ளது. எமது ஜனநாயக மக்கள் முன்னணி தவறு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறு செய்துள்ளது. இந்த கருத்தை இங்கே கூடியுள்ள எல்லா கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன். நாம் அனைவரும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன் செல்வோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று இங்கே பலர் கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த வரையில் கூட்டமைப்பு, பொது வேட்பாளர் தொடர்பாகவும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அவர்கள் ஒரு அவசரப்படாத கொள்கையை கடைபிடிக்கின்றார்கள் என எண்ணுகின்றேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஒரு விடயத்தை மாத்திரம் இதுவரையில் தெளிவாக கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தல்களின் போது இந்நாட்டில் எவருக்கும் இனவாதத்தை கிளப்ப தாம் இடமளிக்க போவதில்லை எனக்கூறியுள்ளார். இது பாராட்டி வரவேற்கவேண்டிய நல்ல ஒரு பொறுப்புள்ள நிலைப்பாடு என எண்ணுகின்றேன்.
இங்கு பேசிய சரத் பொன்சேகா, கடந்த முறை தான் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டதனால் பெருந்துன்பங்களை எதிர்கொண்டதாக சொன்னார். தேர்தலின் பிறகு தன்னை அனைவரும் கைவிட்டு விட்டதாகவும் சொன்னார். உண்மைதான், பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும். எமது வேட்பாளர் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ, அவர் அதற்கு தயாராக வேண்டும்.
ஆனால், சரத் பொன்சேகா ஒன்றை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். அவர் கடைசியாக இழுத்து செல்லப்பட்ட தருணம் வரை நான் அவருடன் இருந்தேன். அவரை இந்த உலகிலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று கூறிய அதே அரசாங்கமே, அவரை இழுத்துக்கொண்டு போய் சிறையில் அடைத்தது. என் கண் முன்னால் இது நடந்தது. எனவே எதுவும் நடக்கலாம். நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைமைக்கு எதிராக, சோபித தேரர் இரண்டு வருடங்களாக நடத்திய தேசிய இயக்கத்தின் மூலமாக இன்று இந்த நாட்டின் பிரதான கட்சிகளை இணைத்து ஒரு பொது மேடைக்கு கொண்டு வந்துள்ளார். அதற்காக அவருக்கு நான் இந்நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
இதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி (நாளை) சகல எதிர்க்கட்சிகளும் அமைப்புக்களும் மட்டுமன்றி அரசியல் பிரமுகர்களும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் பொது கொள்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் எதிர்ப்புப் பேரணியொன்றினை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment