எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த தீர்மானத்துக்கு அமையவே தான் செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அவர்கள் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உங்களின் ஆதரவு யாருக்கு என்று அவரிடம் ஓர் ஊடகவியலாளர் வினவிய போதே இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.
ஆனால், தன்னுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தான் கட்சியின் அரசியல் அதிஉயர் பீடக் கூட்டத்தில் முன்வைப்பேன். அந்தக் கருத்துக்களுக்கு உடன்பட்ட வகையில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதி உயர் பீடத்தில் இருக்கின்ற உறுப்பினர்களையும் தனது கருத்தின்பால் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை செய்வேன் என்றும் அவர் நெஞ்சை நிமிர்த்தி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இங்குதான் சில பிரச்சினைகள் எழுவதுடன் மக்களின் சந்தேகங்களும் வலுப்பெறுகின்றன.
அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவுத் தன்மையையே அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அவற்றினை மூடி மறைத்து அவர் கூறவில்லை. திறந்த மனதுடன் பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறார்.
ஜனாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண விசேடமாக, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்காவிட்டாலும் அவர் தோற்றுப் போகமாட்டார் என்றும் இன்றுள்ளவர்களில் அவரே வெற்றி பெறுவார் எனவும் அவர் கூறியிருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தைவை ஆதரிக்காத நிலையில் அவரே மீண்டும் ஜனாதிபதியானால் அவரிடம் சென்று அமைச்சு பதவிகளையும் வேறு சலுகைகளையும் கேட்பது வெட்கக் கேடானது என அவரது மனட்சாட்சி உறுத்தலுடன் அமைச்சர் பஷீர் நக்கலடித்தும் இருந்தார். இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
ஆனால், அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் தற்போது தெரிவித்துள்ள ஒரு கருத்துத்தே பல்வேறு சந்கேங்களை மேலும் வலுப்பெற வைத்துள்ளது. அதாவது, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தனது கருத்துகளை முன்வைக்கவுள்ளதாகவும் அந்தக் கருத்துக்களுக்கு உடன்பட்ட வகையில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிஉயர் பீடத்தில் இருக்கின்ற உறுப்பினர்களையும் தனது கருத்தின்பால் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை தான் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. தனது கருத்துகள்பால் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிஉயர் பீடத்தில் இருக்கின்ற உறுப்பினர்களையும் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்பதன் மூலம் அவரது கருத்துகளுக்கு இணங்கிப் போகக் கூடியவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடத்தில் உள்ளனர் என்பதும் அமைச்சர் ஹக்கீமினால் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்ற விடயமும் இதன் மூலம் உறுதியாகவதாக நான் நினைக்கிறேன். அதாவது, அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்களின் கருத்துகளை ஏற்று அதன்படி செல்வதற்கும் சிலவேளைகளில் அவரின் தலைமையில் ஒரு பிரிவாகச் செயற்படுவதற்குமான ஒரு கூட்டத்தினரே முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிஉயர் பீடத்தில் உள்ளனர் என்றும் கூறலாம் அல்லவா? (யார் அவர்கள் என்ற பட்டியல் வேறு கதை)
அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்கள் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிஉயர் பீடத்தில் வலியுறுத்தும் போது அவரின் கருத்தின்பால் ஈர்க்கப்படும் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட முயற்சித்தால் நிச்சயமாக முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாகப் பிளவடையும் சாத்தியம் ஏற்படுவதனை தவிர்க்க முயாது போகலாம். இந்த நிலையில் பஷீர் தலைமையிலான குழுவுக்கு அரசியல் பலமும் அரச ஆதரவும் அதிகரிக்கும். (மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பது வேறு விடயம்)
ஆனால், இவ்வாறானதொரு நிலைமை தனது கட்சிக்குள் ஏற்படுவதனை அதன் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் நிச்சயமாக விரும்பமாட்டார் என்றே நினைக்கிறேன். அப்போது அவர் வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையையே ஆதரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். அத்துடன் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமது கட்சி ஆதரிப்பதற்கான தீர்மானம் எடுத்தமை ஏன் என்பது தொடர்பில் கீழ் வரும் விளக்கத்தை அளிக்கும் நிலைமையும் ஏற்படலாம்.
” எங்களது கட்சி பிரிந்து விடக் கூடாது. அவ்வாறு பிரிவதால் நாம் பலவீனமடைந்து விடுவோம். எமது பேரம் பேசும் சக்தி இல்லாமல் போய் விடும். சமூக நலன் பாதிக்கப்பட்டு விடும். இவற்றினை எல்லாம் கருத்தில் கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதென தீர்மானித்துள்ளோம்“ இவ்வாறானதொரு அறிக்கையை அமைச்சர் ஹக்கீம் அவர்கள் வெளியிடுவார் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது.
ஆனால் நான் கூறுவது போன்ற இவ்வாறனதொரு அறிக்கை ஏலவே தயாரிக்கப்பட்டுத்தானே உள்ளது. இதில் என்ன புதுமை இருக்கிறது என்று யாராவது என்னிடம் கேட்டால் அதற்கான எனது பதில்... அது குறித்து எனக்குத் தெரியாது என்பதே ஆகும்.
0 comments :
Post a Comment