நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாட்டில் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவையும் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இதனை இந்த அரசாங்கம் ஒருபோதும் செய்யப் போவதில்லை. எனவே, இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் வலியுறுத்திவரும் எம்முடன் கைகோர்ப்பதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் உப தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார். இது தொடர் பில் ஐ.தே.கட்சியின்
் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
அது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடனும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இதுவரையில் அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவி்ல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் அவருக்கு உள்ளது. ஆனால், அதனை அவர் ஒருபோதும் செய்யமாட்டார் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.
அரசாங்கத்திலுள்ள சில இடதுசாரிகள் இதனை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ஜாதிக ஹெல உறுமயவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென்ற உண்மையான நோக்கமும் தேவையும் ஹெல உறுமயவுக்கு இருக்குமானால் அவர்கள் எம்மோடு இணையலாம்.
நாட்டின் ஜனநாயகத்துக்கு சவாலை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தி, நல்லாட்சியை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம். அதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் அவர் குறி்ப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இடதுசாரி கட்சிகள் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுகின்றன ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இடதுசாரி கட்சிகள் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யாது தேர்தல் நடாத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்றிற்கு அதிகாரத்தை வழங்கக்கூடிய வகையில் அரசியல் அமைப்பு திருத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்யாமல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அது ஆளும் கட்சிக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
17ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தல், ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய காரணிகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன.
எனவே அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாது ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது பாதகமான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
இதேவேளை, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்து அரசாங்கத்தை வீழ்த்தும் வகையில் பல்வேறு கட்சிகளுடனும், பேச்சுவார்த்தைகளை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா போன்றோரையும் இணைத்துக் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐ.தே.க. முயல்வதாகவும் தெரிய வருகிறது.
இது தொடர்பில், அரசாங்கத்துக்கு வெளியில் இருக்கும் சில கட்சிகளுடன் உத்தியோகபூர்வமற்ற வகையிலான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. அதேவேளை, வட, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காஙகிரஸ், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் சில பெரும்பான்மை கட்சிகளுடனும் இந்த உடன்படிக்கை தொடர்பில் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment