வெற்றிகளையே சந்திப்பதற்கு விரும்பினால் இடையூறுகளுக்கு தீர்வு காணவே வேண்டும்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

க்கள் விரும்பாதனவற்றை, அவர்கள் வெறுப்பனவற்றை தங்களது சுய நலன்களுக்காகச் செய்து கொள்வதும் பின்னர் அவற்றினால் எந்தவித பயனும் கிடைக்காவிடின், மக்களுடன் சேர்ந்து தாங்களும் அவற்றினை விமர்சித்து நல்ல பிள்ளைகளாகத் தங்களைக் காட்டி மக்கள் ஆதரவினை மீண்டும் பெற முயற்சிப்பது போன்ற விடயங்கள் இன்று அரசியலில் தாராளமாகப் போய்விட்டன. மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளே அந்த மக்களின் அபிலாஷைகளை புறந்தள்ளி விட்டு பக்கப்பாட்டு பாடுவதும் இன்று அரசியலில் சகஜமாகிப் போய்விட்டது.

திராட்சை மரத்தில் காணப்பட்ட பழங்களை பறிப்பதற்கு எட்டிப் பார்த்த நரி, அதனைத் தன்னால் பறிக்க முடியாது என்பதற்காக சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி தனது பலவீனத்தை வெளியில் சொல்லாது ஒதுங்கிக் கொண்டதே தவிர, திராட்சைக் கொடி உயர்ந்து வளர்ந்திருந்ததற்காகவோ காற்றில் ஆடிக் கொண்டிருந்ததற்காகவோ அதன் மீது குற்றஞ் சொல்லவில்லை. ஆனால், இன்று அரசியலில் பலரும் தவறுகளைத் தாமே விட்டு விட்டு அவை தங்கள் தவறுதான் என்று தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் பிறர்மீது குற்றங் காண்கின்றனர். இதுதான் இன்று முஸ்லிம் காங்கிரஸின் நிலைமையும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் பலராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் அதிகமானவை அவர்கள் மக்கள் ஆணையை மறந்து விட்டு தங்களுக்கு ஏற்றாற் போல் செயற்படுகிறார்கள் என்பதுதான். இதன் காரணமாகவே அந்தக் கட்சி மீது பரவலான வெறுப்புத்தன்மை விரவிக் காணப்படுகிறது.
18 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியது முதல் பல விடயங்கள் தொடர்பில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கையைச் சுட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு தாங்கள் நடந்து கொண்டதற்காக அவர்களில் பலரும் இப்போது வருத்தமடைந்துள்ளனர். 

18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு அளித்தமை தொடர்பில் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூட இன்று பகிரங்மாக தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு ஏன் ஆதரவு அளிக்க வேண்டிய நிலைமை தனக்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் சரியான விளக்கத்தை அவரால் வழங்க முடியாதுள்ளது. ஆனால் அவர் இது தொடர்பில் நடந்தவற்றை விளக்கியிருந்தால் மக்கள் இந்த விடயத்தில் சந்தேகமு சங்கடமும் படவேண்டியிருக்காது. ஆனால் அவர் சில வேளைகளில் கட்சியின் நலன் கருதி இந்த தங்கமலை இரகசியத்தை மறைத்து வைத்திருக்கவும் முடியும்.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்கான அகப்புறக் காரணிகள் வேறானவைகளே. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சூழ்நிலைக் கைதியாகவே அமைச்சர் ஹக்கீம் காணப்பட்டார். அதனாலேயே அவர் அதனை ஆதரிக்க வேண்டிய நிலையேற்றபட்டது. இதற்கு வெளிச் சக்திகள் காரணமல்ல. உள் சக்திகளின் உசுப்பல், உபத்திரவங்களே காரணமானது. குறித்த சட்டமூலத்தை ஆதரிப்பதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் முன்னர் முடிவு செய்திருந்தாலும் அதனை நிலையானதொரு முடிவாக தக்க வைத்துக் கொள்ள அமைச்சர் ஹக்கீமினால் முடியாமல் போனது உண்மைதான்.

18 ஆவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு 146 உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு இருந்த நிலையில் இன்னும் நான்கு அல்லது ஐந்து பேரின் ஆதரவே தேவையென்ற நிலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர், தானும் மேலும் மூவரும் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதாக முன் வந்ததனையடுத்தே அரசுடனான அவர்களின் பேரம் பேசலும் அதேவேளை, கட்சியின் தலைமைக்கு தலையிடியும் ஆரம்பமாகின.

அரசுக்கு ஆதரவளிப்பதற்காக ஓர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பொறுப்பும் இரண்டு அல்லது மூன்று பிரதிமையச்சர் பதவிகளும் வழங்கப்பட வேண்டுமென்ற பேரம் பேசல் அரசுடன் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான சிரேஷ்ட சிங்கள அமைச்சர் ஒருவரும் அதே போன்று ஆளுந்தரப்பைச் சேர்ந்த இன்னொரு சக்திமிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரம் பேசல் விவகாரத்தில் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் கொண்டு 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினாலும் பின்னர் அவர்களால் எந்தப் பயனும் இல்லை. இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்தாலும் பத்து சத வீத முஸ்லிம் வாக்குகளைக் கூட எதிர்காலத்தில் கட்சிக்குப் பெற்றுத் தரமாட்டார்கள் என அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

18 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியின் தலைவர் ஹக்கீமுடன் முதலில் பேசுவோம். அவர் இந்த விடயத்துக்கு ஆதரவு வழங்க மறுத்தார் என்றால் இவர்கள் விடயத்தில் கவனம் செலுத்தலாமென்றும் குறித்த அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அரச உயர்மட்டத்துக்குத் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுந்தரப்பு தலைமையானது ஹக்கீமுடன் பேசுமாறு கேட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகனும் அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

விடயங்களைப் புரிந்த கொண்ட அமைச்சர் ஹக்கீம் தான் இந்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் தங்களது கட்சியைச் சேர்ந்த நால்வரின் உதவியுடனேயே அரசாங்கம் இதனை நிறைவேற்றிக் கொள்ளும் என்பதில் தெளிவு கொண்டுள்ளார். அதேவேளை, தான் ஆதரவு வழங்காவிட்டால் கட்சி இரண்டாகப் பிரிவதுடன் அரசிலிருந்து தமது தரப்பு வெளியேற்றப்படலாமென்றும அவர் யுகித்தே இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவதாக இறுதிக் கட்டத்தில் தெரிவித்து அதன்படி செயற்பட்டுள்ளார். ஆகவே, கட்சிக்குள் ஏற்பட்ட நிலைமைகளாலேயே அமைச்சர் ஹக்கீம் இந்தச் சட்டமூலத்தை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானாரே தவிர அவரால் மனம் விரும்பி எடுக்கப்பட்ட முடிவல்ல இது.
இது ஒரு புறமிருக்க, கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அண்மையில் சில விடயங்களை பகிரங்கமாக் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தந்து விட்டு அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்வதற்கு முய்சிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணை போக மாட்டாது என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த விடயங்களுக்கு எல்லாம் அரசாங்கத்துக்கு துணை போவது முஸ்லிம் காங்கிரஸில் உள்ள சிலர்தான் என்பதனை கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர் என்ற வகையில் அவர் புரிந்து கொண்டும் ஜெமீல் இவ்வாறு தெரிவிப்பது ஆச்சரியத்தை தருகிறது. கரையோர மாவட்டம் தேவையா இல்லை என்று முதலில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கிடையே ஒரு கருத்துக் கணிப்பை அவர் நடத்திப் பார்க்கட்டும் அதன் பின்னர் உண்மை நிலைமைகளை அவர் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும் கரையோ மாவட்டம் தேவைதான் என உணர்ந்துள்ள சில முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கூட அரசின் விருப்பையும் நல்ல பிள்ளைத்தனத்தையும் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக கரையோ மாவட்டம் தேவை இல்லை என்று கூறக் கூடிய துணிவுடன் அவர்கள் உள்ளனர் என்பதனை ஜெமீல் புரிந்து கொள்வது அவசியம்.

சாயந்தமருதுக்கு தனியான பிரதேச சபை ஒன்று தேவை என்ற சினதொரு கோரிக்கைக்கே எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யார்? பொதுபல சேனாவா? சிஹல உறுமயவா? சிங்கள ராவணவா? இல்லவே இல்லை. இதனை எதிர்ப்பவர்களும் முஸ்லிம் காங்கிரஸார்தான்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக அம்பாறை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. கரையோர மாவட்டம் இல்லாத நிலையில் கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று நான் உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன். என்றெல்லாம் ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனின் அதனை நிறைவேற்றாமல் விட்டால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தல் ஆதரவு வழங்க மாட்டோம் என்று ஜெமீலினால் பகிரங்கமாக கூற முடியுமா? ஆனால், கோரக்கைகள் ஒன்றும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரித்தே ஆக நிலைமை நிச்சயம் ஏற்படத்தான் போகிறது என்பது மட்டும் வெளிச்சமானது. இதற்கான காரணமும் கட்சிக்குள் இருக்கும் சிலரே என்பதில் எந்த ஒளிவு மறைவுக்கும் இடமில்லை.

அரசுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் ஒப்பந்தங்கள், பேரம் பேசல்கள் எல்லாம் வெளிப்படையாக நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறத்தில் அதே முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த சிலரும் மறைமுகமாக அரசுடன் தேனிலவைக் கழிப்பதனையும் மறந்து விடக்கூடாது. இவ்வாறானதொரு நிலைமையில் அவர்களை வைத்து காய் நகர்த்தப்பட்டு ஜனாதிபதித் தேர்தலிலும் காங்கிரஸும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசாங்த்திடம் எவற்றையெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் கேட்டதோ அவையெல்லாம் கிடையாமல் போனதற்குத் தடையாக இருந்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரே.
முஸ்லிம் சமூகத்தின் இழந்து போன பேரம் பேசும் சக்தி மீண்டு வரும் தருணத்தில் சில அரசியல் பதவிகளுக்காக சோரம் போய் இன்னொரு வரலாற்றுத் தவறை இழைப்பதற்கு நாம் தயாரில்லை. இது விடயத்தில் கட்சிப் போராளிகளும் உயர் பீடத்தினரும் மிகத் தெளிவாகவும் திடமாகவும் நம்பிக்கையுடனும் இருந்து வருகின்றனர். இந்த கொள்கை கோட்பாடு ஒருபோதும் வீணடிக்கப்பட மாட்டாது என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றும் ஜெமீல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் கட்சியின் நிலைமையை ஏதோ ஒரு வகையில் வெளிக்காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கதுதான். 

இதேவேளை, அரசாங்கம்தான் தங்களை ஏமாற்றுகிறது என்றால், அந்தப் பேரம் பேசலின் உள்ளடக்கத்தைக் குறைத்துக் கொள்வதே உள்ள ஒரே வழியாகும். அதனை முஸ்லிம் காங்கிரஸ்தான் செய்யவும் வேண்டும். அவ்வாறான நிலையிலும் கூட அரசாங்கமே ஏமாற்றுமாக இருந்தால் மக்களும் உண்மையைப் புரிந்து கொள்ள சந்தர்ப்பமாகி விடும் அல்லவா? அது முஸ்லிம் காங்கிரஸ் மீதான மக்கள் வெறுப்பை இல்லாமலும் செய்ய வழியேற்படுத்தவும் கூடும். அதாவது, எங்கள் எவருக்கும் அமைச்சு பொறுப்புகளோ பிரதியமைச்சர் பதவிகளோ வேண்டாம். முஸ்லிம்களின் முக்கிய கோரிக்கையான அம்பாறை கரையோர மாவட்டம் உட்படலான விடயங்களை மட்டும் நீங்கள் செய்து தாருங்கள் ஜனாதிபதித் தேர்தலில் உங்களை ஆதரிக்கிறோம் என்று கூறுவதன் மூலம் அவர்கள் பக்கம் பந்தை உருட்டி விட முடியும் அல்லவா? முஸ்லிம் காங்கிரஸதான் அப்படிச் செய்யுமா?

பேரம் பேசலில் இரு விடயங்களே இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஒன்று அமைச்சு பதவிகள் மற்றது முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கும் கோரிக்கைகள். இவை இரண்டிலும் எந்த அதிகாரங்களும் இல்லாத அமைச்சு பதவிகளை அரசு உடனடியாக கொடுக்கிறது. முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதில்தான பின்னடிக்கிறது என்பதுதான் இப்போதைய நிலைமை. எனவே உன்றை விட்டக் கொடுத்து ஒன்றைக் கேட்டுப் பார்க்கலாம் அல்லவா? அது முஸ்லிம்களின் அபிலாஸைகள் கொண்ட விடயங்களாக மட்டுமே இருக்குமல்லவா? நடக்குமா?

வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். என்பது அறிஞர் எல்லீஸின் கருத்து. இன்று இந்த பதவிகள்தான் முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்குத் தடை எனின் அதற்கான தீர்வு அவை வேண்டாம் என்பதுதானே?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :