முஸ்லிம்கள் அதிகம் ஆதரித்த காலங்களில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜே ஆரும், ரணிலும் தந்த பரிசுகள்!

மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்-

முஸ்லிம்கள் அதிகம் ஆதரித்த காலங்களில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜேஆரும், ரணிலும் தந்த மறக்க முடியாத பரிசுகள்.

இந்த அரசாங்கம்,

1. நிலங்களை பிழையாக கைக்கொள்வது
2. திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வது
3. மத, கலாசார, வன்முறைகளை கண்டும் காணாமல் இருப்பது
4. மொழிசார் தணிக்கைகளை செய்வது

போன்ற விடயங்களில், முஸ்லிம்களுக்கு பாதகம் ஏற்படுத்துவதை, பகிரங்கமாக முழு இலங்கையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது சக்தி டிவியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது சொன்னேன்.

இதனை அறிந்திராத சிலர், நான் எனது முகநூலில் தெரிவித்து வரும் கருத்துக்களை, அரச சார்புக் கருத்தாக விமர்சிக்கின்றனர். அதைப்பற்றி அக்கறை எனக்கில்லை. அந்த வகையில், ஐக்கிய தேசிய கட்சி பற்றி இன்னும் சில விடயங்களை இன்று பகிரலாம் என எண்ணுகிறேன்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களை பெற்றிருந்தது. அந்த ஆசனங்களே, ஐக்கிய தேசிய கட்சி எட்டு வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், தக்க வைத்துக் கொள்வதற்கும் கால்கோளாக இருந்தது. நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்களே, அன்று பிரதமராக இருந்தார்.

அவர், நோர்வேயின் அனுசரணையோடு புலிகளோடு 2002 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தார். அவ்வொப்பந்தத்தில், வடக்கு – கிழக்கில் அன்று வாழ்ந்த ஏறத்தாள ஏழு லட்சம் முஸ்லிம்களை “ ஒரு குழு “ என குறிப்பிட்டிருந்தார். ஒரு குழு என்பது வெறும் பத்து – நூறு பேரையே குறிக்கும். ஏழு லட்சம் முஸ்லிம்கள் ஒரு குழுவா? ரணிலின் பார்வையில், நாம் ஒரு குழுவாகவே தெரிந்தோம். முஸ்லிம்கள், வடக்கிலிருந்து விரட்டப்படுவதற்கும், வகை தொகையில்லாமல் கொல்லப்பட்டதற்கும் காரணம், தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் உள்ளடக்கப்படாத வேறு ஒரு இனமாக – சமூகமாக – தேசியமாக, புலிகளால் கருதப்பட்டதனால்தான் என்பதை, முழு உலகமுமே அறிந்திருக்கும் போது, ரணிலுக்கு மட்டும் நாம் ஒரு குழுவாக சிறுமைப்படுத்தப் பட்டவர்களாக தெரிந்தோம்.

இதேபோலதான், 1987 களில் ரணிலின் மாமா ஜே.ஆர் ஜனாதிபதியாக இருந்த போது, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக செய்யப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில், வடக்கு – கிழக்கில் வாழும் முஸ்லிம்களைப் பற்றி எதுவும் கூறாமல் விட்டார். அதனூடாக, ஒட்டு மொத்த வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் இருப்பையே மூடி மறைத்து, தனித்தமிழ் மாநிலமாக – ஓரின ஈழமாக – வடக்கையும் கிழக்கையும் இணைத்து, தமிழ் ஆயுதக்குழுக்களின் கையில் முஸ்லிம்களை அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தார்.

அன்று ஜே.ஆரை சந்தித்து, முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்தை எடுத்துக் கூறி, பரிகாரம் தேடச்சென்ற முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை, இந்தியாவுக்குச் சென்று ராஜீவ் காந்தியை சந்தித்து நியாயம் பெறுமாறு கூறினார்.

அதேபோல்தான், 2002 இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்தை திருத்த வேண்டுமென்று, ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபீடமேற்றிய முஸ்லிம் காங்கிரஸ் கேட்ட போது, லண்டனுக்குச் சென்று அன்டன் பாலசிங்கத்தையும், வன்னிக்குச் சென்று பிரபாகரனையும் சந்தித்து நியாயம் பெறச் சொன்னார் ரணில்.

அன்று [1987 / 2002] முஸ்லிம்கள் அதிகமாக ஐக்கிய தேசிய கட்சியையும், ஜே.ஆரையும், ரணிலையும் ஆதரித்து நின்றார்களே தவிர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ, ஸ்ரீமாவோ வையோ, சந்திரிக்காவையோ அல்ல என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.

எனவே, ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களால் அதிகம் ஆதரிக்கப்படும் காலங்களில், முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கிறது என்பதற்கு, இந்த இரண்டு விடயங்களும் மிகமுக்கிய உதாரணங்களாகும். எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும்போது இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :