அமைச்சர் ஹக்கீம் இன்று பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கள்!

திகூடிய அதிகாரப் பகிர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பலத்தை முழுமையாகப் பிரயோகிக்கும்  பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு!

நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (31) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையிலிருந்து… 

வடக்கிலும் கிழக்கிலும் சிவில் நிருவாகம் ஏற்படுத்தப்பட்டிருப்பதையும் இரண்டு மாகாணங்களிலும் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களின் விருப்பப்படி அவ்விரு மாகாண ஆட்சிகளும் அறுதிப் பெரும்பான்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் சாதனையாக அடையாளப்படுத்துவது சகஜமாக போயிருப்பதை அவதானிக்கின்றோம். 

இருப்பினும் முன்னாள் படை அதிகாரிகள் சிவில் நிருவாகத்தில் நீடிப்பது இயல்பு நிலைக்கு இந்த மாகாணங்கள் வந்து விட்டன என்பதை முழுமையாக நிருபிப்பதற்கு தடையாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். 

நேற்றையத் தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அண்ணன் சம்பந்தன் நீண்ட உரையொன்றை இந்த அவையில் ஆற்றியதை நான் மிகவும் கவனமாக செவி மடுத்துக் கொண்டிருந்தேன். 

நான் பேசுவதற்கு முன்பு வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் சஜின்வாஸ் குணவர்தன சம்பந்தன் ஐயா கூறியபடி அந்த ஆவணத்தை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். 

இருதரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் ஆளுந்தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி தனது அதிகாரப் பகிர்வு குறித்த நிலைப்பாடுகளை இன்னும் தெளிவு படுத்தாத நிலையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பது சம்பந்தமாக அவரது கருத்துக்கள் மிகத் தெளிவாக இங்கு கூறப்பட்டது. இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற அடிப்படையில் அதிகூடிய அதிகாரப் பகிர்வு குறித்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்குள் இருந்து தனது பலத்தை முழுமையாகப் பிரயோகிக்கும் என நான் கூறியிருந்தேன். 

அமைச்சரவையிலும் அதற்கு வெளியிலும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கு பதிப்பு ஏற்படும் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை வெளிப்படையாக எதிர்க்கும் நிலைப்பாட்டை நாம் கடைபிடித்து வந்திருக்கிறோம். 

எமது பகிரங்க நிலைப்பாடுகள் ஒரு கட்சி என்ற அடிப்படையில் இருக்கின்ற பாராளுமன்ற சுதந்திரத்தை பாதிக்கின்ற சுய கௌரவத்தை அவமதிக்கின்ற அளவுக்கு வந்துவிடாமல்; பாதுகாக்கின்ற குறைந்த பட்ச அரசியல் தார்மீகமாவது பேணப்பட வேண்டும் என்பதை மிக அழுத்தம் திருத்தமாக நான் கூறி வைக்க கடமைப்பட்டிருக்கின்றேன். 

நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்ற கட்சித் தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என மிகத் திட்ட வட்டமாக இங்கு குறிப்பிபட்டாக வேண்டும். 

வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான எனது கருத்துக்களை முன்னதாக ஆங்கிலத்தில் உரையாற்றிய போது தெளிவாக தெரிவித்திருக்கிறேன். அவற்றை மீண்டும் தமிழில் இங்கு தெரிவிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்ற காரணத்தினால் தவிர்த்து கொண்டாலும் நாளை நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் 8 பேரும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில்; வாக்களிப்பது என்பது பற்றி இன்று மாலையில் கூடவிருக்கின்ற கட்சியின் உச்சபீடம் தீர்மானிக்க இருக்கிறது என்பதை கூறி வைக்க விரும்புகிறேன். 

இந்தச் சந்தர்ப்பத்தில் மீறியபெத்த கொஸ்லந்த ஹல்துமுல்லை பிரதேசத்தில் நடந்துள்ள மிகப் பாரிய மண்சரிவு அனர்த்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அதனால் பாதிக்க்பபட்டிருக்கின்ற அனைவருக்கும் எமது கட்சியின் சார்பில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அரசாங்கம் இது குறித்து அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொள்வது சம்பந்தமாகவும் எனது நன்றிகளை தெரிவித்து அமைகின்றேன்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :