ஏழாவது ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

முஜீபுர் றஹ்மான்-

2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறப்போகும் இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தலானது இலங்கையின் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதோடு அதன் வரலாற்றையே மாற்றியமைக்கப் போகின்ற ஒரு தேர்தலாகவே நோக்கப்படுகின்றது.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதி மூன்றாவது முறையாக போட்டியிடுவது அரசியல் சாசனத்துக்கு முரணானது எனவும் அதற்கான ஆலோசனையை நீதிமன்றத்திடம் பெற முடியாது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். மேலும், 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதால் நாட்டில் சர்வதிகார ஆட்சியே ஏற்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொது பேட்பாளராக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதோடு ஏனைய கட்சிகளையும் பொது அணியில் ஒன்றிணைக்கும் முயற்சிகளும் பரவலாக நடைபெறுகின்றது. இக்கூட்டணிக்கு மாதுலுவாவே சோபித தேரரும் ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவது சட்டவிரோதமானதாகும். அதை எதிர்த்துப் போராடுவோம் என மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. அதேநேரம், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே அன்றி பொது வேட்பாளரில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு இனவாத பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1915 ஆம் ஆண்டு முஸ்லிம் சிங்கள இனக்கலவரம் நடைபெற்று 2015 ஆண்டுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதற்கு பொது பல சேனா, ஹெல உறுமய மற்றும் ஏனைய கடுப்போக்குவாத சிங்கள குழுக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், மாடறுப்பது, ஹலால் விவகாரம், பள்ளிவாசல்கள் உடைப்பு, முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிடப்பட்டு முடக்கப்படுகின்றமை, முஸ்லிம் தனியார்ச் சட்டம் மற்றும் பலதார மனம் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இவர்கள் முஸ்லிம்களை எதிர்த்து வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக தெற்காசிய பிராந்தியங்களிலுள்ள முஸ்லிம் எதிர்ப்பு குழுக்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதோடு இணைப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் எப்படியான தீர்க்கதரிசனமான முடிவை எடுக்கப்போகின்றன. இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேதான் எதிர்வரும் பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாபத்தான சூழ்நிலைகளின்போது, முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக முடிவை எடுப்பார்களா? அல்லது தங்களது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முடிவை எடுப்பார்களா என மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனை ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஜனாதிபதித் தேர்தலாகவே நோக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் விடுகின்ற அனைத்துத் தவறுகளும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படும்.

இக்கட்டான இந்நிலையின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் இதுவரை எடுக்கவில்லை என்றும், நவம்பர் மாதத்தின் பின்னரே இத்தீர்மானத்தை எடுப்போம் எனவும் அறிவித்துள்ளார். ஆனால், ஏனைய கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

இக்கட்சிகள் அதி முக்கியமான ஜனாதிபதித் தேர்தலைவிடவும் தமது பாராளுமன்ற ஆசனங்களை எவ்வாறு பாதுகாப்பது, அதற்கான வியூகம் என்ன என்பதை வைத்தே இந்த ஜனாதிபதித் தேர்தலை நோக்குவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே முஸ்லிம் சிவில் சமூகங்களின் தேவை முக்கியமாகின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய ஷூறா சபை மற்றும் ஏனைய முஸ்லிம் அமைப்புக்கள் நடுநிலையாக நின்று, தமது விருப்பு வெறுப்புகளுக்கப்பால் முஸ்லிம் வாக்காளர்களை விழிப்பூட்டுவது கட்டாயக் கடமையாகும். தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலமையையும் உணர்த்த வேண்டும்.

அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களால் கவரப்பட்டும், அபிவிருத்தி என்ற மாயைக்கு மயங்காமலும் தமது வாக்குகளை சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வெளிப்படையாக முன்வைக்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என விழிப்பூட்ட வேண்டும்.

நீதி, நியாயம், ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றை மதிக்கின்ற, மனிதநேயம் கொண்ட, நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கின்ற சிறந்த ஒருவரை ஜனாதிபதியாக்கப் பாடுபடுவது முக்கிய கடமையாகும். இதுவே இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகவும் உள்ளது. இதுவே, முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள் அனைவரினதும் காலத்தின கட்டாயக் கடமையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :