சீனா இலங்கைக்கு வழங்கியது கடன் தான். ஆனால் அக் கடன் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதனை நிதியுதவி என்றே அழைக்க வேண்டும் என கடனுக்கு புதியதொரு விளக்கத்தை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார்.
வல்லரசான அமெரிக்காவே 7 ரில்லியன் டொலர் கடனாளி நாடாகும். அதற்காக அந்நாடு பொருளாதாரத்தில் பின்னடைவைத் கண்டுள்ளதாக கூற முடியுமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கை இப்போது வறுமைக் கோட்டிலுள்ள நாடல்ல. மத்திய தர வருமானம் கொண்ட நாடாகும்.
எனவே, எமக்கு கடன் வழங்கப்படுவதில்லை. நிதியுதவிகளே வழங்கப்படுகின்றன.
சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு அபிவிருத்திகளுக்காக குறைந்த வட்டியில் நீண்ட கால திருப்பிக்கொடுக்கும் விதத்தில் பல்வேறு சலுகைகள் மூலமே கடன் வழங்கப்பட்டது.
எனவே, இதனை கடன் என அழைக்க முடியாது. சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதனை நிதியுதவி என்றே அழைக்க வேண்டும்.
எமது பூமியை நாம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை. இலவசமாக வழங்குகின்றோம். அதில் முதலீடுகளை வெளிநாடுகள் மேற்கொள்கின்றன. அதன் மூலம் எமது நாட்டுக்கு வருமானம் கிடைப்பதோடு பொது மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கின்றன.
வல்லரசான அமெரிக்காவே 7 ரில்லியன் டொலர் கடனாளி நாடாகும். அதனால், அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதா.
அத்தோடு அமெரிக்கப் பிரஜையொருவர் ஒரு மணித்தியாலயத்திற்கு 38 டொலர் கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள வங்கிகளின் பங்குகளை சீனாவே கொள்வனவு செய்கின்றது.
2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிஞ்சும் சீனாவுடன் நாம் நட்புறவு வைத்திருப்பதென்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் ராஜதந்திர கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

0 comments :
Post a Comment